திங்கள், மார்ச் 1, 2021

articles

img

அதிமுகவினரும் அதிகாரிகளும் கூட்டுக்கொள்ளை..... போட்டி போட்டு நடக்கும் நில மோசடிகள்....

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சித்தேரி, மரவக்காடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில்வீடுகள் கட்டித்தருவதாக ஏற்கனவே புள்ளிவிபரம் சேகரிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 152 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாக விபரம் வெளியானது. ஒன்றிய அதிகாரிகளிடம் பொது மக்கள் கேட்டபோது 121 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த குடியிருப்புவாசிகள் ஊராட்சி முன்னாள் தலைவர்கள் குணசேகரன், சிவா ஆகியோர் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.  ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நிலையில் பாதிக்கப்பட்ட பயனாளிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஊராட்சி முன்னாள் தலைவர் குணசேகரன் கூறுகையில், “சித்தேரி மரவக்காடு பகுதியில் பலருக்கு வீடுகள் கட்டிதரப்படவில்லை.  அதிகாரிகள் தெரிவித்தபடி 121 வீடுகளில் 86 வீடுகள் கட்டப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாக தகவல் அறியும் உரிமை சட்ட பதிவின் வாயிலாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது என்கிறார். இதை தொடர்ந்து கொரடாச்சேரி திருவாரூர் ஒன்றியங்களிலும் கட்டப்படாத வீடுகளுக்கு கட்டப்பட்டுள்ளதாக கணக்கு காட்டி ஆளும்  அ.தி.மு.க வினரும், அரசு அதிகாரிகளும் லட்சக் கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளனர்.  மாவட்டம் முழுவதுமே இதுபோன்ற முறை கேடுகள் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றிருக்கக் கூடும் என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் தமிழகம் முழுவதுமே இப்படிப்பட்ட முறைகேடுகள் அதிகளவில் நடந்திருக்கலாம் என்றும் யூகிக்கத் தோன்றுகிறது.

இது ஒருபுறம் இருக்க, இலவச மனைப்பட்டா வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டுள்ளது.  குறிப்பாக சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் தாலுகா பல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ள விவரம் என்னவென்றால் அரசு சார்பில் தனக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட சில நாட்களிலேயே பட்டா இடத்திலிருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் நிர்பந்தம் கொடுத்ததாகவும் அதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று தனது ரிட் மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வாதத்தில் மனுதாரர் அரசு பள்ளி ஆசிரியர் என்றும், அவரது மகன் அரசு மருத்துவர் என்றும், அவர்களின் குடும்பத்தினர் மற்றவர்களின் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும், அதோடு மனுதாரர் அரசு ஊழியர் என்பதை மறைத்து அரசின் இலவச பட்டாவை பெற்றுள்ளார் என்று அதற்கு விளக்கம் அளித்து வாதாடியுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட பெஞ்ச்சில் இந்த மனு 23.12.20 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் இலவச மனைப் பட்டாக்கள் ஏழை மக்கள் பயன் பெறும் வகையிலேயே வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் இதுபோல பல முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் எழுவது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. எனவே தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து இலவச பட்டாக்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் உரியவாறு விசாரணை நடத்த வேண்டும். முறைகேடுகள் இருப்பின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் மனுதாரர் ராஜா தனது மகனுக்கு தெரியாமல் அவரது பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் மகன் அளித்த மனுவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 2 வாரங்களில் பரிசீலித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.இன்னொரு பிரச்சனை என்னவென்றால் நில மோசடி தொடர்பாக முன்னுக்கு வரும் புகார்களை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பதிவுத் துறை தலைவர் கடந்த 2017ஆம் ஆண்டே உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பதிவுத் துறை தலைவருக்கு தென் சென்னை மாவட்ட பதிவாளர் கடந்த 24.12.2020 அன்று அனுப்பிய கடிதத்தில் தென் சென்னை மாவட்ட பதிவுத்துறையில் நில மோசடி குறித்த புகார் மனுக்கள் மிக அதிக அளவில் உள்ளன என்றும்,  இதனால் 2மாதங்களுக்குள் அவைகளை விசாரிக்க இயலவில்லை; பல நூற்றுக்கணக்கான மனுக்கள் தேங்கியுள்ளன என்றும் அவற்றை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டுமென்றால் சிறப்பு உதவி தேவைப்படுகிறது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பதிவுத் துறை தலைவர் தென் சென்னை மாவட்ட நில மோசடி புகார்களை விசாரிக்க 3 மாவட்ட பதிவாளர்களை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

2021 ஜனவரியில் உதகமண்டலம் பதிவாளரும், பிப்ரவரியில் செய்யாறு பதிவாளரும், மார்ச் மாதத்தில் விழுப்புரம் பதிவாளரும் இந்த விசாரணை பணிகளை மேற்கொள்ள வேண்டும். விசாரணையில் அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு சார்பதிவாளர், இரண்டு உதவியாளர்கள், தமிழ் தட்டச்சு தெரிந்த டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஆகியோரையும் தென் சென்னை உதவி பதிவு துறை தலைவர் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நில மோசடிகள் தென் சென்னையைத் தாண்டி வேறு சில மாவட்டங்களிலும் இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. எனவே பிரதமர் வீடுக்கட்டும் திட்டம், இலவச மனை பட்டா வழங்குதல், நில மோடி புகார்கள்  மட்டுமின்றி இன்னும் ஏராளமான துறைகளிலும், அரசின் திட்டங்களிலும் முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே இவைகளை தடுப்பதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது?           

 தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் பயனாளிகளுக்கு வழங்குகிறபோது ஆளும் அ.தி.மு.க. வினரும் அரசு அதிகாரிகளும் கூட்டாக முறைகேடுகளில் ஈடுபடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதே போல்தான் மத்திய அரசின் திட்டங்களிலும் மோசடிகளும், முறைகேடுகளும் தொடர்வதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே நெல்கொள்முதலிலும் அதிகாரிகள் கமிசன் பெறுவதை மிகக் கடுமையாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இப்படி ஒவ்வொன்றிலும் நடைபெறும் முறைகேட்டுக்கு நீதிமன்றமும், அரசு உயர் அதிகாரிகளுமே  சாட்சியாக உள்ளனர்.

===ஆரூரான்===

;