articles

img

கோவிட் தடுப்பு மருந்து பரிசோதனை வெளிப்படைத் தன்மை எங்கே?

இந்தியாவில் கோவிட்-19 தடுப்புமருந்தை மனிதர்களுக்கே செலுத்திப் பார்க்கும் பரிசோதனைகள் தொடங்கிவிட்டன. அதற்காக சிலர் தங்கள் உடல்களில் மருந்தைச் செலுத்த ஒப்புதலளித்து முன்வந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிகள் முழு வெற்றி அடைய வேண்டும், தடுப்பு மருந்து  நாடுமுழுவதும் பாகுபாடின்றி மக்களுக்குக்  கிடைப்பது உறுதியாக வேண்டும் என்ற  எதிர்பார்ப்புகள்  அதிகரிக்கின்றன.  ஆனால் இந்தப் பரிசோதனைகள் உரிய வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுகின்றனவா? பல நாடுகளின் அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக உள்ள ‘முன்னேறிய அறிவியலுக்கான அமெரிக்க சங்கம்’ (ஏஏஏஎஸ்) வெளியிடும் ‘சயின்ஸ்’ (நவம்பர் 25) இதழில், ஷ்ரேயா தாஸ்குப்தா எழுதியுள்ள கட்டுரை கூர்மையான கவனத்தைக் கோருகிறது.  பெண்கள் மற்றும் சுகாதாரத்துக்கான ‘சாமா ஆதாரவளக் குழு’ என்ற அமைப்பு இணையதளத்தில் தொடர் உரையரங்குகளை அண்மையில் நடத்தியது.

தெளிவற்ற சித்திரம்
அதில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களும் வேறு பலரும் பரிசோதனைகள் வெளிப்படைத்தன்மையோடு இல்லை என்ற கவலையைப் பகிர்ந்துள்ளனர். “மக்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டும் என்று சொல்லாதீர்கள்,” என்று அந்தப் பரிசோதனைகளை நடத்துகிற நிறுவனங்களுக்குச் சொல்கிறார் ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் எத்திக்ஸ்’ பத்திரிகையின்  ஆசிரியர் அமர் ஜெஸானி. “உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம்  மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள் என்பதுதான்,”  என்றார்.

“பத்திரிகைகளில் அவ்வப்போது போடப்படுகிற தகவல் துணுக்குகளிலிருந்துதான் பரிசோதனைகள் பற்றிப் பெருமளவுக்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பரிசோதனைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறவர்கள், அவர்களுடைய பங்களிப்பு,  ஆராய்ச்சித் திட்டமுறைகள், கால அளவுகள் என்பவற்றைப் பற்றிய தெளிவான சித்திரத்தை அந்தத் தகவல் துணுக்குகள் நமக்குத் தருவதில்லை,” என்றார் உயிரி நெறிகள் ஆய்வாளர் ஆனந்த் பான்.பல்வேறு தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் தனியார் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஆதரவுடன் ‘கோவிஷீல்ட்’ என்ற மருந்து தற்போது மனித உடல்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனீகா என்ற நிறுவனமும் உருவாக்கிய மாதிரி மருந்திலிருந்து சீரம் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. ஆனால், அஸ்ட்ராஜெனீகா கடைப்பிடிக்கும் மூன்றாவது கட்டச் சோதனைக்கான நடைமுறைகளை சீரம் பின்பற்றவில்லையாம். இத்தகைய பரிசோதனைகளைப் பதிவு செய்யும் இந்திய மருத்துவ பரிசோதனைகள் பதிவகம் (சிடிஆர்ஐ) அளித்துள்ள தகவல்களிலிருந்து இது தெரியவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சீரம் நிறுவனத்தின் நடைமுறை
தானாக முன்வரும் 1600 பேரிடம் இந்தப் பரிசோதனைநடத்தப்பட உள்ளது. அஸ்ட்ராஜெனீகாவின் மூன்றாவது கட்ட விதிகளின்படி மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு, மருந்தால் விளையும் நோயெதிர்ப்புத் திறன் அளவு ஆகியவை கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால்சீரம் நிறுவனம் செயல்திறன் மதிப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, பாதுகாப்பிலும் நோயெதிர்ப்புத்திறனை அளவிடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறதாம். “பரிசோதனைகளில் மாறுபட்ட வழிகளைக் கையாளுவது வழக்கத்துக்கு மாறானது அல்ல என்றாலும், இங்கே அது பற்றிய ஒரு மதிப்பீட்டிற்கு வருவது கடினமாக இருக்கிறது. ஏனென்றால் (சீரம் நிறுவனத்தின்) நடைமுறை என்ன என்பது,  பொதுத்தளத்தில் வெளியிடப்படவில்லை,” என்றார் ஜெஸானி. ஆனால், அஸ்ட்ராஜெனீகா தனது நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

பல நாடுகளில் தடுப்பு மருந்து நிறுவனங்கள், பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காக என்றேதங்களது பரிசோதனை நடைமுறைகளைப் பொதுத் தளத்தில் வெளியிடுகின்றன. இந்தியாச் சட்டப்படி இப்படிப்பட்ட நிறுவனங்கள் தங்களது பரிசோதனை விவரங்களை சிடிஆர்ஐ அலுவலகத்தில் பதிவு செய்தாக வேண்டும். ஆனால்,  பல பதிவுகளை பார்த்தபோது,  அவை முழுமையாக இல்லை,  தொடர்ச்சியான தகவல்களோடு புதுப்பிக்கப்படவில்லை என்று உரையரங்கில் பலரும் கூறியுள்ளனர். தகவல்களைப் புதிப்பித்துள்ள சில நிறுவனங்கள் தாங்கள் செய்துள்ள மாற்றங்களுக்கான காரணங்களைத் தெரிவிக்கவில்லையாம்.

வல்லுநர்கள் யார் யார்?
பரிசோதனைகளில் உடனிருக்கும் வல்லுநர் குழுக்களில் இடம்பெறுவோர் யார், அவர்களது பொறுப்புகள்  என்னஎன்ற தகவல்கள் வெளியிடப்படுவது முக்கியம். அந்தக் குழுக்கள்தான் பரிசோதனைகளின் முடிவுகள் பற்றி விவாதித்து, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (சிடீஎஸ்சிஓ) பரிந்துரைகளை அனுப்புகின்றன. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில்தான், பரிசோதிக்கப்பட்ட  மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து சிடீஎஸ்சிஓ முடிவெடுக்கும். ஆனால் குழுவினர் யார் என்பது தெரியாததால், ஏதேனும் மாறுபட்ட கருத்துகள் வந்தனவா என்பதை யாரும் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அரசாங்கத்தால் அமைக்கப்படும் அந்தக் குழுக்கள் நாட்டு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவைதான்.  ஆகவே அந்த வல்லுநர்கள் யார் என்பதை அறியும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று கொல்கத்தா வெப்பமண்டல மருந்துகள் ஆய்வகத்தைச் சேர்ந்த பரிசோதனை வல்லுநர் சாந்தனு திரிபாதி வலியுறுத்துகிறார்.
மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அகில இந்திய மருந்துகள் நடவடிக்கை கூட்டமைப்பு (ஏஐடீஏஎன்), குழு உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டு சிடீஎஸ்சிஓ-வுக்கு மூன்று கடிதங்கள் அனுப்பியது. பதில் வரவில்லை.  முதல் கடிதத்திற்கு பிறகு, சில ஆய்வுக்கூட்டப் பதிவுகள் வெளியிடப்பட்டன.  ஆனால் அந்தச் சுருக்கமான பதிவுகளில், ஆய்வுக்கூட்ட முடிவுகளுக்கான விளக்கங்கள் தரப்படவில்லை என்று கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையின் நிலை...
சிடீஎஸ்சிஓ பணிகளை மேற்பார்வையிடும் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவரிடமிருந்து பதில் வரவில்லை, ஆயினும் துணைக் கட்டுப்பாட்டாளர் ஏ.கே.பிரதான், இணையத்தள கருத்தரங்கம் ஒன்றில் இது
பற்றிப் பேசியிருக்கிறார். அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (எஃப்டீஏ), ஐரோப்பிய மருந்துகள் முகமை ஆகிய அமைப்புகளில் உள்ளது போன்ற வெளிப்படைத்தன்மைக்கான நடைமுறைகளை இங்கேயும் பின்பற்றுவது பற்றிப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், “ஆனால் அதில் பிரச்சனைகள் உள்ளன. (அந்தக் கொள்கைகளை) நாம் சரியாகப் பின்பற்றவில்லை என்றால் நிறுவனங்கள் நம் மீது வழக்குத் தொடுக்க முடியும்,” என்றார். அத்தகைய கொள்கைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதா, வெளிப்படைத்தன்மையே வேண்டாமென விட்டுவிடுவதா?

இதற்கு முன் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சில  மருந்துகளை கோவிட்-19 சிகிச்சைக்காக “கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால” நடவடிக்கையாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. போதுமான ஆய்வுகள், தகவல்கள்இல்லாமல் அந்த அனுமதி தரப்பட்டது என்ற விமர்சனம் எழுந்தது. “கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாடு”என்றால் என்ன, என்னவெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்தியச் சட்டங்களில் அவசரகாலப் பயன்பாடு பற்றிய குறிப்பான வரையறுப்புகள் இல்லை என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். சீரம் நிறுவனம் தனது தடுப்பு மருந்தை விரைவில் அவசரகாலப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டு அமைப்பு இத்தகைய அனுமதிகளுக்கான அடிப்படைகள் குறித்து மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.அரசுத்துறை மட்டுமல்லாமல், பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கும், மருத்துவ
மனைகளுக்கும் கூட வெளிப்படைத்தன்மை தேவை. இத்தகைய ஆய்வுகளில் முன்னனுபவம் இல்லாத சில மருத்துவமனைகளும் தற்போதைய பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளன என்று கூறினார் ஆனந்த் பான். 

மக்களின் தயக்கம்
மக்களின் நிதியில் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தற்போதைய சில பரிசோதனைகளுக்கு ஆதரவளிக்கிறது. ஆனால் அதனிடமிருந்தும் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. மற்ற நிறுவனங்களை ஈடுபடுத்துவது, செலவிடப்படும் பணம் ஆகியவை தொடர்பாக வெளிப்படையற்ற போக்குகளே உள்ளன என்றார் ஏஐடீஏஎன் இணை ஒருங்கிணைப்பாளர் மாலினி அய்ஸோலா. இந்நிலையில், ஐசிஎம்ஆர் தொற்று நோய் பிரிவின் தலைவர் சாமிரான் பாண்டே, பொதுமக்களுடன் வெளிப்படையான தொடர்புகளை உறுதிப்படுத்த, இணையதள முகப்பு உள்ளிட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே, பொதுமக்கள் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்ற ஆய்வு ஒன்றை ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு நடத்தியுள்ளது. அதில் பங்கேற்றவர்களில் 60 சதவீதத்தினர், தடுப்பு மருந்து வருகிறபோது அதை எடுத்துக்கொள்வதில் தங்களுக்குத் தயக்கம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்தத் தயக்கத்தைக் கைவிடச் செய்வதற்கும், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கும் பரிசோதனைகள் மிக வெளிப்படைத்தன்மையோடு இருந்தாக வேண்டும் என்று மேற்படி உரையரங்கத் தொடரில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

அனுபவப் பகிர்வு தவறா?
இவ்வாறு வலியுறுத்தப்படுவதற்கான பின்னணியாக ஒரு நிகழ்வு சுட்டிக்காட்டப்பட்டது. மும்பையில் உள்ள கிங்எட்வர்ட் மருத்துவமனையில் தடுப்பு மருந்து பரிசோதனைக்காக தானாக முன்வந்தவர் அனில் ஹெப்பார். சுகாதாரம் சார்ந்த ஒரு தொழில்முனைவோரான அவர், தனது அனுபவத்தைப் பற்றி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். பரிசோதனையில் ஒத்துழைப்பது தொடர்பான தயக்கங்களை மாற்றுவதற்காகவே அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதாக அவர் கூறினார். ஆனால், மருத்துவமனையின் தலைவர், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஹெப்பாருக்கு இரண்டாவது தவணை மருந்து செலுத்தப்பட மாட்டாது என்று கூறினாராம்.எப்படியோ ஹெப்பார் தனக்குரிய இரண்டாவது தவணை மருந்தைப் பெற்றுவிட்டார். இருந்தாலும் பரிசோதனைகளின் வெளிப்படைத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை இந்தச் செய்தி காட்டுகிறது. பரிசோதனையில் பங்கேற்கிறவர்கள் தாங்களாக முன்வந்து மக்களிடம் பேசினால் அதை எப்படித் தடுக்க முடியும்? இதிலே மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று விமர்சகர்கள் கேட்பது மக்களின் குரலாகத்தான்.

ஆதாரம் : சயின்ஸ் நவ.25 இதழ்

===அ.குமரேசன்===

;