articles

img

வள்ளலாரைக் கடத்தும் இந்துத்துவா: சரியான கருத்தியல் வியூகம் எது? - என். குணசேகரன்

“பத்தாயிரம் ஆண்டுகால பாரம்பரி யத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின்  உச்சநட்சத்திரம் வள்ளலார் பெருமான்” என்று  ஆளுநர் பேசினார்.  இவ்வாறு அவர் தெரிவித்த கருத்து, எளிதாக கடந்து போகிற விஷயம் அல்ல.  சில மறுப்புகள், சில கண்டனங்கள் என்பதோடு முடிவிற்கு வருகிற கருத்தாக ஆளுநரின் கருத்தை எடுத்துக் கொள்ள இயலாது.  ஆளுநர் சொல்வது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று. வள்ளலார் பற்றி ஓரளவு அறிந்தோர் கூட அவர் சொல்வது முழுப்பொய் என்பதை அறிவார்கள். ஆனால் அவரது பேச்சின் உள்நோக்கம் புரிந்து, எதிர்வினை மேற்கொள்ள வேண்டும்.   சமூகத்தை பிற்போக்கு திசைவழியில் இழுத்துச் செல்ல முயற்சிக்கும் சக்திகளை ஊக்கப்படுத்துகிற வேலையாகவே ஆளுநரின் அந்தப் பேச்சு அமைந்துள்ளது.  வள்ளலாரின் ஆன்மீக நோக்கு சமூகத்தை முற்போக்கு திசையில் கொண்டு செல்லும் கருத்தியல் பார்வை.  மனிதநேயம், அடித்தட்டு வர்க்கங்கள் மீதான நேசப் பார்வை, சாதி, மத,  வேறுபாடுகள் கடந்த மக்கள் ஒற்றுமை , சமூக,  பாலின ஒடுக்குமுறைகள் எதிர்ப்பு, சமூக சமத்து வம் போன்றவை வள்ளலார் சிந்தனைகளின் அடித்தளம்.  

கருத்தியல் வன்முறை 

இப்படிப்பட்ட வள்ளலார் சிந்தனைகள் மீது வன்மத்துடன் கூடிய கருத்தியல் வன்முறையை ஆளுநர் ரவி ஏவி விட்டிருக்கிறார்.  சாதி, சமய, வருண வேதங்கள் அறவே ஒழிய  வேண்டும் என்பதை வள்ளலார் வலியுறுத்தினார்.  அவற்றை ஒழிப்பதற்கு மொழி வழிபட்ட இனங்கள், நாடுகளிடையே ஒற்றுமை கண்டு ஆன்மநேய ஒருமைப்பாட்டினை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்தவர் வள்ளலார்.  உலகம் முழுவதையும் ஆன்மநேய ஒருமைப்பாட்டினால் ஒன்றுபடுத்த வேண்டும், வேறுபட்ட இனங்கள் இடையே சகோதர  உணர்வை வளர்த்து அவர்களிடையே உணர்ச்சிப் பூர்வமான ஒற்றுமை காண வேண்டும் என்பதை வள்ளலார் தனது கொள்கையாகக் கொண்டிருந்தார்.  இந்த நோக்கங்களோடு இணைந்ததாக சமத்துவ சமுதாயத்தைக் கண்டார், வள்ளலார். பணக்காரன், ஏழை என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வை அகற்றி எல்லோரும் வயிறார உண்டு, உடுத்து வாழும் சமதர்ம சமுதாயத்தை படைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் வள்ளலார்.  இந்த கருணை இல்லாத  துன்மார்க்கர் அரசியல் நடத்து வதை ஒழித்து, சுத்த சன்மார்க்க ஆட்சியை  உரு வாக்கிட வேண்டும் என்று தனது  அரசியல் பார்வை யையும் வள்ளலார் வெளிப்படுத்தியுள்ளார்.   இப்படிப்பட்ட மகத்தான சிந்தனைகள் காரணமாகவே, பாரதியார் “தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கான ஆத்திகர்த்தாக்களுள் ஒருவர்’ என குறிப்பிடுகிறார். ஆனால், இந்துத்துவா வள்ளலாரைக் கடத்த முயல்கிறது.  மதவாத, சாதிய, பெண்ணடிமைத்தன பிற்போக்குத்தனங்களை உள்ளடக்கமாகக் கொண்ட பழைய சனாதன கருத்தியலின் நவீன  வடிவம் இந்துத்துவா.  அது பழைய சனாதன முறை  மட்டுமல்ல; இன்றைய ஆளும் , முதலாளித்துவ சுரண்டும் வர்க்கங்களின் பார்வையாகவும் உள்ளது. அந்த கருத்தியல் பார்வையின் முக்கிய  பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார். 

கருத்துமுதல்வாத, சனாதனக் கூட்டு 

இந்தியாவில் சனாதனப் பார்வை, பழைய கருத்து முதல்வாதம் எனப்படும் தத்துவப் பார்வையுடன் கைகோர்த்து இயங்கியது. பொருள், இயற்கை, உலகம், பிரபஞ்சம் அனைத்தும் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட “சிந்தனையின்” படைப்பு எனப் பேசும் கருத்து முதல்வாத தத்துவங்கள், கடவுள் கொள்கையை யும், ஆன்மீக, ஆத்திகக் கருத்துக்களையும் பரப்புரை செய்து வந்துள்ளன.  உண்மையில், இந்த தத்துவமே இந்தியா விலும், தமிழகத்திலும் ஆளும் வர்க்கங்களின் பார்வையாக இருந்து வந்துள்ளது. இவை ஆளும், நிலவுடைமை சக்திகளின் நலன்களைப் பாதுகாத்து, சமூகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை பண்ணை அடிமைத்தனத்திற்கு உட்படுத்தி, வேட்டையாடி வந்துள்ளன.  கருத்து முதல் வாதம் சுரண்டும் வர்க்கங்களின் தத்து வார்த்த ஆயுதமாக வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளது.   மதத்தை அடிப்படையாகக் கொண்ட, பிற்போக்குத்தனமான, சாதிய, மதவாத கண்ணோட்டங்கள், பெண்ணடிமைத்தன பார்வை கள் அனைத்தும் இணைந்ததாக சனாதன ஆன்மீகப் பார்வையும், கருத்து முதல்வாதமும் தத்துவ தளத்தில் பேசப்படுகின்றன. இது சமூ கத்தை தேக்கத்தில் ஆழ்த்தி, புதிய சமத்துவ சமூகம் படைப்பதற்கு தடையான தத்துவ நீரோட்டமாக நீடித்து வந்துள்ளது.  இந்த கருத்து முதல்வாத கருத்தியல் நீரோட்டத்தையே ஆளுநர் ‘பத்தாயிரம் ஆண்டு சனாதன பாரம்பரியம்’ என்று பேசியுள்ளார்.  பத்தா யிரம் ஆண்டு வரலாற்றின் பண்டிதராக தன்னை  முன்னிறுத்துக் கொள்ளும் ஆளுநர் அந்த நீடித்த காலத்திற்கான வரலாற்று சான்றுகளை தருவதற்கு முன்வருவாரா ?

கருத்தியல் கூட்டணி

பிற்போக்கான கருத்தியல்களை எதிர்த்து, சமூகத்தை முன்னெடுத்துச் செல்கிற கருத்தி யல்கள் தமிழகத்தின் சிந்தனை பரப்பில் வளர்ந்து  வந்துள்ளன.  அதில் முக்கியமானது, வள்ளலார்  உள்ளிட்டோர் வளர்த்தெடுத்த ஆன்மீகம் சார்ந்த  மனித சமத்துவ, மனிதநேயப் பார்வை.  மற்றொன்று, வேதமரபினை மறுத்து, உலகம், பிரபஞ்சம், இயற்கையின் இருப்பினை அறிவியல்  கண்ணோட்டத்துடன் விளக்க முயன்ற தமி ழகத்தின் பொருள்முதல்வாத மரபு.  வேறுபட்டனவாக இருந்தாலும், இந்த இரண்டையும் போற்றி வளர்த்தெடுப்பது, நமது  சமூகத்திற்கு, குறிப்பாக, உழைக்கும் மக்க ளின் நலனுக்கு உகந்தது. இது இந்துத்துவா தாக்கு தலிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்கு தகுந்த கருத்தியல் போராட்ட வியூகம். இந்த இரண்டு கருத்தியல் நீரோட்டங்களும், கூட்டணி சேர்ந்து,

சிந்தனைக் களத்தில் செயல்படுவது இன்றைய சூழலில் அவசியத் தேவை.  ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கும் மேலாக பொருள்முதல்வாத சிந்தனைக் கீற்றுகள் தமிழ கத்தில் உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்து வந்துள்ளன. தொன்மையான பொருள்முதல்வாதத் தின் தொடர்ச்சியாக நவீன காலத்தில் மார்க்சிய  தத்துவ பார்வை அமைந்துள்ளது. மார்க்சிய த்தின் இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல் வாதம் நவீன பாட்டாளி வர்க்கத்தின் விடு தலைக்கான தத்துவமாக திகழ்கிறது.  “தத்துவஞானிகள் உலகை பல்வேறு வகை களில் வெளிப்படுத்தி விளக்கியுள்ளனர்;ஆனால், மையமான பிரச்சனை என்னவென்றால், உலகை மாற்றுவதுதான்” என்பது கார்ல் மார்க்சின் கூற்று. மார்க்சிய தத்துவமான வரலாற்றியல், இயக்க வியல் பொருள்முதல்வாதம் இந்த நோக்கத்து டன் செயலாற்றுகிறது.  சமூக அடிப்படை மாற்றம்  என்ற அடிப்படையில் நின்று கடந்த காலத் தத்து வங்களை கற்று உணர்ந்தால், எதிர்கால தத்துவப் போக்கு புதிய திசையில் பயணிக்கும்.  சுரண்டப்படும் மக்களுக்கு உன்னத வாழ்வு மலர அது உதவிடும். அடிமைத்தனத்திலிருந்தும் சுரண்டல், ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை என்கிற பாதையில் நமது தொன்மையான முற் போக்கு தத்துவ சிந்தனைகளை நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, முன்னெடுக்க வேண்டி உள்ளது.