articles

img

சமதளமற்ற ஆடுகளம்.... கிரிக்கெட்.....

கிரிக்கெட். என்பது பெரும்பாலான இந்தியர்களை கவர்ந்ததொரு விளையாட்டு. மில்லியனர்களை விமானத்தில் பறக்க வைத்து மைதானத்திலும், சாதாரணர்களை வீட்டின் முற்றத்தில் தொலைக்காட்சி யோடும் கட்டிப் போடும் ஒரு மாயக்கயிறு. நமது அன்றாட வாழ்க்கையில், காலையில் துலக்கும் பற்பசையிலிருந்து இரவு தூங்கச்செல்வது வரையிலும்  எந்தெந்த பொருட்களைவாங்க வேண்டுமென்பதில் நமது தேர்வைபெரும்பாலும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களே தீர்மானிக்கிறார்கள் என்பதிலிருந்தே, மக்களிடம் அவ்விளையாட்டு ஏற்படுத்தியிருக் கும் தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

இத்தகைய கிரிக்கெட் விளையாட்டில் தான், அண்மையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்று ஒட்டுமொத்த தேசத்தையும் கொண்டாட வைத்திருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள். தனதுசொந்த மண்ணில், காபாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் கடந்த 33 ஆண்டுகளாக தோல்வியையே சந்தித்திராத ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த மகத்தான வெற்றியை பெற்று, அனைவரது பாராட்டு மழையிலும் நனைந்து கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானிலும் இந்திய அணியின் வெற்றி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது என்பதும்குறிப்பிடத்தகுந்த அம்சமாகும். கிரிக்கெட்போட்டியின் வெற்றியினால் உற்சாகமடைந் திருக்கும் இத்தருணத்தில் இவ்விளையாட்டின் இதர முக்கியமான அம்சங்களையும் கவனிப்பது முக்கியம்.

மைதானத்திற்கு வெளியே
கோல்ஃப், பில்லியர்ட்ஸ், ஸ்குவாஷ் உள்ளிட்ட பல விளையாட்டுகள் இன்னமும் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும்நிலையில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் விளையாடலாம் எனும் வாய்ப்பை கிரிக்கெட் விளையாட்டு அளித்திருக்கிறது என்பதே இதற்கு கிடைத்திருக்கும் வெற்றிக்கான அடிப்படை காரணம். ஆனாலும் புல்தரை மைதானம், சமன்படுத்தப்பட்ட ஆடுகளம், ஒளிரும் விளக்குகள், விலையுயர்ந்த மட்டைகள் என ஸ்டேடியங்களிலும், பயிற்சி கூடங்களிலும் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களுக்கே அணிகளில்இடம் பெறும் வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்கிறது. ஊருக்கு வெளியே நீர் வற்றிய ஏரிகளிலும், புதர் மண்டிக்கிடக்கும் காய்ந்த நிலங்களிலும் விளையாடும் திறமையான வீரர்கள் பலரும் மைதானங்களுக்கு வெளியே தான் இன்னமும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அணிகளில் இடம் கிடைப்பதும், போட்டிகளில் பங்கேற்பதும் ஒருவரது பொருளாதாரப் பின்னணியையும் வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. வினோத் காம்ப்ளி, நடராஜன், வாசிங்டன் சுந்தர் என அவ்வப்போது விதிவிலக்குகளாக ஒரு சிலர் வருவதுண்டு என்றாலும், எல்லோருக்குமான வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இத்தகைய நிலைமைகள் உடைக்கப்பட்டு, அனைவருக்குமான பயிற்சியையும் அதன் மூலமாக வாய்ப்பை உறுதி செய்வதையும் நோக்கி முன்னேற வேண்டும். பொருளாதாரத்தில் சமத்துவம் எனும் முழக்கத்தைப்போலவே விளையாட்டிலும் சமநிலை என்பதையும் இணைத்து குரல் எழுப்புகிறபோது தான் மைதானத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் எளியவர்களையும் அணிகளிலும் போட்டிகளிலும் பங்கேற்பவர்களாகவும் மாற்ற முடியும். இத்தகைய மாற்றம் நிகழ வேண்டும்.

சமதளமாய் ஆடுகளம்
நீண்ட காலமாக ஒரு சில சமூக பிரிவினர்களுக்கே தொடர்ச்சியான வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலைமையில் தற்போது ஒரு மாற்றம்ஏற்பட்டு பல்வேறு தரப்பினருக்கும் அணியில் இடம் கிடைப்பதென்பது ஒரு ஆரோக்கிய மான நகர்வாக இருப்பினும், அத்தகைய வாய்ப்புகள் இன்னமும் பரவலாக்கப்பட வேண்டும். இந்திய அணி டெஸ்ட் விளையாட்டில் பங்கேற்க துவங்கிய இந்த  87 ஆண்டுகளில் 290 வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் வெறும் ஐந்து அல்லது ஆறு பட்டியலின / பழங்குடி வகுப்பைச் சார்ந்த வீரர்களுக்கு மட்டுமே இது வரையிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதையும் கூட கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. விளையாட்டில் திறமைக்கு பதிலாக சமூக நீதியை ஒரு அளவுகோலாக கொள்ள முடியுமா என இந்த இடத்தில் இயல்பாக ஒரு கேள்வி கூட எழலாம். ஒரு சம்பவத்தை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தென்னாப்பிரிக்க அணியில் 6 இடங்கள் கறுப்பினத்தவர்களுக்கு ஒதுக்கப்படும் நிலைமையை ஓர் உதாரணமாக குறிப்பிட்டு, “அதைப் போலவே இந்திய அணியிலும் சமூகஅடிப்படையில் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே ஒரு முறை  குறிப்பிட்டார். அப்போது“அவர்களுக்கு வாய்ப்பும் அளிக்கலாம். கூடவே அவர்கள் விளையாடுகிற ஆடுகளத்தின் (Pitch) அளவையும் கூட 75சதவீதம் ஆக குறைத்தும் கொள்ளலாம். அவர்கள்ஒர் ஓட்டம் (Run) எடுத்தால் ஒன்றே கால் ஓட்டமாக கணக்கிட்டு கொள்ளலாமே” என அவரது கருத்துக்கு ஏளனமான எதிர்வினையும் எழுந்தது. இதிலிருந்தே விளையாட்டுத் துறைகளில் நிலவும் நவீனகால  துரோணர்கள் - ஏகலைவன் சமன்பாட்டை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

அணியில் இடம் பெற வேண்டியவர்களின் பட்டியலை தீர்மானிக்கும் தேர்வுக்குழுவில் இருப்பவர்கள் நூறாண்டுகளுக்கும் மேலாக தங்கள் இடத்தை கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதாலேயே, திறமை இருந்தும், எளியவர்களுக்கான வாய்ப்பு பறிபோய்க் கொண்டிருக்கிறது என்பது யதார்த்தமாகவும், உறுத்துகிற உண்மையாகவும் இருக்கிறது.

காசு.. பணம்.. துட்டு.. மணி, மணி..
கிரிக்கெட் விளையாட்டு அண்மைக்கால மாக மிகப்பெரும் பணம் புழங்கும் சூதாட்ட மாகவும் மாற்றப்பட்டு வருகிறது. பெரும் நிறுவனங்கள் கோடிகளை கொட்டிக் கொடுத்து,வீரர்களை ஏலத்தில் எடுக்கும் பொருட்களாகமலினப்படுத்தும் போக்கு உருவாக்கப் பட்டுள்ளது. “மருத்துவரையும், வழக்கறிஞரையும், மதபோதகரையும், கலைஞரையும், விஞ்ஞானியையும் தனது கூலியுழைப்பாளர்களாக மாற்றியிருக்கிறது” என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மாமேதை மார்க்சும். ஏங்கெல்சும்எழுதியிருப்பார்கள். இது விளையாட்டு வீரர்களுக்கும் கூட பொருந்தும் என்பதைத்தான் தற்போதைய  ஐ பி எல் போட்டிகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. “முதலாளித்துவம் ஒவ்வொரு மனிதனது தகுதியையும் அவனது பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையிலேயே எடை போடுகிறது” என்பதை வீரர்களுக்கு நிர்ணயிக்கப்படும் ஏலத்தொகையின் மூலம்மிக எளிதாக புரிந்து கொள்ளலாம். வீசப்படும்ஒவ்வொரு பந்துக்கும் சூதாட்டம் நடைபெறுகிறதோ எனவும்,  வெற்றி தோல்வியை முன்னரே தீர்மானிக்கும் மேட்ச் ஃபிக்சிங் உள்ளதோ எனவும் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு லாபவெறி கொண்ட முதலாளிகளால் இந்த விளையாட்டின் தரம் தாழ்த்தப் பட்டிருக்கிறது. கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கான பிரதான விளம்பர முகவராக இருந்த விவோ செல்போன் தயாரிப்பு நிறுவனம் மட்டும் 2199 கோடி ரூபாய்செலவளித்திருக்கிறது என்பதன் மூலம் எப்படிஇவ்விளையாட்டு எவ்வாறு வியாபார மாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் உணர முடியும்.

விளையாட்டுகள் என்பது மனித சமூகத்தை ஒன்றுபடுத்தும் அற்புதமானதொரு ஜனநாயக, பண்பாட்டு நடவடிக்கையாகும் என்பதால் தான் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் ஒலிம்பிக், ஆசியன், காமன்வெல்த் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.  இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் மக்கள் சீனம் மிக அதிகமான பதக்கங்களை பெறுவதற்கான முக்கியக் காரணம், அங்கு விளையாட்டில் ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்குமான சம வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் தான். எனவே விளையாட்டின் மேன்மைகளையும், ஜனநாயக உள்ளடக்கத்தையும் சிதைத்துக் கொண்டிருக்கிற முதலாளித்துவத்திடமிருந்து அதை மீட்பது முக்கியமாகிறது என்பதோடு, சமத்துவ சமூகத்தை நோக்கிய நமதுபயணத்தின் நிகழ்ச்சி நிரலில் விளையாட்டுகளையும், அவற்றின் ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் எனும் முழக்கத்தை இணைத்துக் கொள்வதும் அவசியமான தாகிறது.

===ஆர்.பத்ரி==

;