மனித வரலாற்றில் கண்டறியாத இக்கொடுமை தஞ்சை நிலப்பிரபுக்கள் - தஞ்சை போலீசின் கூட்டுச்சதியால் நிகழ்ந்தது. பயங்கர கொடுமையில் தீயில் துடிதுடித்து அலறி அலறி, பச்சிளங் குழந்தைகளுடன் தாய்களும் கர்ப்பிணியான பெண்ணும், முதியவர்களும், இளைஞர்களுமாக உயிர்நீத்தவர்களின் எண்ணிகை 42 அல்ல 44 பேர்! இந்த 44 பேரின் பெயர்களை தரும் முன்பு ஒரு வார்த்தை... இந்த எண்ணிக்கை 48 ஆக இருந்திருக்க முடியும். ஆனால் 44 உடன் நின்றதற்குக் காரணம், எரிந்து கொண்டிருந்த வீட்டிற்குள்ளிருந்து 6 பேர் தப்பி வெளியே குதித்தனர் தீக்காயங்களுடன்! அவர்கள் பெயர் பழனி, ராமலிங்கம், ராமன், பெரியாள், முருகன், சீனிவாசன். தப்பி வெளிவந்த 6 பேரில் எரிந்து கொண்டிருந்த வீட்டைச்சுற்றி துப்பாக்கி, அரிவாள், கம்புகளுடன் எரியும் வீட்டில் மேலும் கம்புகளையும், வைக்கோலையும் அள்ளிவீசிக் கொண்டு நின்ற அந்த கொடிய மனித மிருகங்கள், காட்டுமிராண்டிகள் தப்பி வந்த அறுவரில் இருவரைப் பிடித்துவிட்டனர். நால்வர் ஓடிவிட்டனர். இருவரையும் கைவேறு, கால் வேறு, தலைவேறாக வெட்டினர். வெட்டித் தூக்கி அந்த எரியும் நெருப்பிலேயே வீசினர். இவ்வாறு மீண்டும் நெருப்பில் எறியப்பட்டவர்களே முருகன், சீனிவாசன் ஆகிய இருவரும். இந்த இருவரையும் சேர்த்துத்தான் உயிர்நீத்தவரின் எண்ணிக்கை 44 பேர்கள்.
18 குடும்பங்கள்
கோரப் படுகொலை நடந்த வெண்மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக்குழு செயலாளர் தோழர் எம். ஆர். வெங்கட்ராமன் எம்.பி.யுடன் சென்றிருந்தபோது விவசாயிகள் நடந்தவற்றையெல்லாம் கூறினர். தீயில் எரிந்தவர்கள் எண்ணிக்கை 42க்கும் அதிகம் என்றனர். அதன்பின் ஒவ்வொரு குடும்பமாய் அழைத்து யார் யார் உயிருடன் இருப்பவர், இறந்தவர் என்று கணக்கிட்டதில் கிடைத்த எண்ணிக்கை 44 பேர். அந்த சோகப்பட்டியலை, வெண்மணி கிராமத்தின் ஒவ்வொரு குடும்பமும் இழந்த - நிலப்பிரபுவின் நெருப்புக்கு பலியானவரின் பட்டியலை கீழே தருகிறோம்:
1. காத்தான் குடும்பம்
சின்னப்பிள்ளை (மனைவி), வாசுகி (மகள்), கருணாநிதி (மகன்)
2. தங்கவேல் குடும்பம்
குஞ்சம்மாள் (மனைவி)
3. கணேசன் குடும்பம்
பூமயில் (தங்கை)
4. சுப்பன் மகன் ரத்னம் குடும்பம்
கருப்பாயி (மனைவி), ராஞ்சியம்மாள் (மகள்), தாமோதரன் (மகன்), ஐயம் (மகள்)
5. சுப்பன் குடும்பம்
சுப்பன் (குடும்பத் தலைவர்) குப்பம்மா (மனைவி)
6. முனியன் குடும்பம்
பக்கிரியம்மாள் (மனைவி), ஜோதி (மகள்), ராணி (மகள்)
7. கணபதி குடும்பம்
கனகம்மாள் (மனைவி), ராஜேந்திரன் (மகன்)
8. பக்கிரி மகன் ரத்தினம் குடும்பம்
காளிமுத்து (மனைவி), குருசாமி மகன் குமாரசாமி (பேரன்), வீரம்மாள் (மகள்), நடராஜன் (மகன்)
9. காளியப்பன் குடும்பம்
பட்டு (மனைவி), சண்முகம் (மகன்),
வேதவல்லி (மகள்)
10. சின்னையன் குடும்பம்
ஆச்சியம்மாள் (மனைவி), நாகராசன் (மகன்), பானு (மகள்), செல்வி (மகள்)
11. ராமன் குடும்பம்
சேது (மனைவி), நடராசன் (மகன்)
12. பாளையன் குடும்பம்
கருப்பாயி (பாட்டி)
13. முனியன் மகன் ரத்னம் குடும்பம்
ஆண்டாள் (மகள் உயர்நிலை பள்ளியில் 3வது படித்தவர்), அஞ்சலை (மனைவி)
14. வீரப்பன் குடும்பம்
சுந்தரம் (மனைவி), சரோஜா (மகள்)
15. முனியன் குடும்பம்
மாதம்மா (மனைவி), தங்கையன் (மகன்)
16. ராமையன் குடும்பம்
பாப்பா (மனைவி - 8 மாத கர்ப்பிணி), சந்திரா (மகள்), ஆசைதம்பி (மகன்), வாசுகி (மகள்)
17. பெரியான் குடும்பம்
காவேரி (மனைவி)
18. குப்பன் குடும்பம்
சீனிவாசன் (மகன்)
இதுதான் நிலப்பிரபுக்களின் கொடியவெறிக்கு- அவர்கள் திட்டமிட்டு வைத்த தீக்கு இரையானோரின் பட்டியல்.