எலிகள் மிகவும் விளையாட்டுத்தனமான பிராணிகள். ஓடிப் பிடித்து விளையாடுவதை அவை மிகவும் விரும்புகின்றன. கிச்சு கிச்சு மூட்டினால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனவாம். இவற்றிற்கு மையமாக இருப்பது அவற்றின் மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள நரம்புகள் என்கிறது ஒரு ஆய்வு. இந்த நரம்புகளின் செயல்பாட்டை தடை செய்யும்போது அவை குறைவாகவே விளையாடுகின்றன. ‘விளையாட்டை குறித்த நமது புரிதல் குறைவாகவே உள்ளது. அது குழந்தைத் தனமானது என்கிற தப்பெண்ணம் நிலவுகிறது’. என்கிறார் பெர்லினிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரும் இந்த ஆய்வை செய்தவருமான நரம்பியல் விஞ்ஞானி மைக்கேல் பிரக்ட். விளையாடுவது விலங்குகளுக்கு திறனை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. ‘விளையாடும்போது நாம், மிகுந்த படைப்பாக்கம், சிந்தனை, மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் நபராக உள்ளோம். இது சில மன அழுத்த நிலைகளுக்கு நேர் எதிரானது’. என்கிறார் அமெரிக்காவிலுள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் அறிஞர் ஜெஃப்ரி பர்க்டார்ஃப். சில மனநிலை கோளாறுகளுக்கு விளையாட்டின் நரம்பு அறிவியலை புதிய சிகிச்சைகளாக மாற்றும் ஆய்வுகளை இவர் மேற்கொள்கிறார்.
இந்த ஆய்வில் பெரக்ட் குழுவினர் ‘கை விரட்டுதல்’ எனும் விளையாட்டிற்கிடையே கிச்சு கிச்சு மூட்டுதலுக்கு எலிகளை பழக்கினர். விளையாடும்போது எலிகள் 50 கிலோஹெர்ட்ஸ் எனும் அலைவரிசையில் ஒலி எழுப்புகின்றன. இது நம்மால் கேட்க முடியாது. ஆய்வாளர்கள் இந்த புறஒலி சிரிப்புகளை பதிவு செய்தனர். இது எலிகள் எப்போது ‘களிப்பு’ கொள்கின்றன என்பதன் ஒரு அளவாகும். சுவாசித்தல், வலி உணர்தல் போன்ற அனிச்சை செயல்களுக்கு காரணமான பிஏஜி எனப்படும் மூளைப்பகுதி விளையாட்டு நடத்தையிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கருதினர். ஏனெனில் குரல் வெளிப்பாட்டிலும் பிஏஜி பங்கு வகிக்கிறது. விளையாட்டை ஒருங்கிணைப்பது குரல் வெளிப்பாடே. எடுத்துக்காட்டாக சக விளையாட்டு வீரர்கள் சிரிப்பதை நிறுத்தினால் விளையாட்டிற்காக சண்டையிடுவதை நிறுத்துவது.
எலிகள் விளையாடும்போது அல்லது கிச்சுகிச்சு மூட்டும்போது இந்தப் பகுதியில் ஏற்படும் மாறுதல்களை பதிவு செய்தனர். அவற்றிலுள்ள செல் வரிசைகள் சுறுசுறுப்பாக இயங்குவதைக் கண்டனர். கிச்சு கிச்சு மூட்டும்போது அவை வெறிபிடித்தது போல ஆகின்றன என்கிறார் பிரக்ட். மூளையின் இந்த நரம்பு இணைப்புகளை புரிந்துகொள்வது மனிதர்களின் மன அழுத்தம் குறித்த அறிவை மேம்படுத்த உதவலாம். விளையாட இயலாதவர்களுக்குத்தான் அதிக உதவி தேவைப்படுகிறது .மனஅழுத்த நிலையில் மூளையின் பகுதிகள் எவ்வாறு காணப்படுகிறது என்பதைக் கண்டறிவதில் இது முதல் படி. வருங்காலத்தில் வெவ்வேறு நோயாளிகளுக்கு உகந்த சிறந்த சிகிச்சையை மருத்துவர்களால் தேர்ந்தெடுக்க இயலும் என்கிறார் பர்க்டார்ஃப்.
வெவ்வேறு விலங்கினங்களில் பிஏஜி பகுதி எவ்வாறு வேறுபடுகிறது என்பதை ஆய்வு செய்ய உள்ளார்கள். அதன் மூலம் சில விலங்குகள் மற்றவற்றை விட ஏன் அதிக விளையாட்டுத்தனமாக உள்ளன என்பதை விளங்கிக்கொள்ளலாம். மனித மூளையில் இந்தப் பகுதி பெரிதாக இருப்பதில் வியப்பில்லை. நாம் விளையாடும் எண்ணிக்கையைப் போல வேறு எந்த விலங்கும் செய்வதில்லை.