articles

img

கௌரவமான வேலை சட்ட உரிமையாகட்டும்! - செ.முத்துக்கண்ணன்

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்றார் மகாகவி - பாரதியார்.

பல லட்சம் பெண்கள் படித்து பட்டம் பெற்று சொற்ப சம்பளத்தில் தனியார் நிறுவனங்களில் எந்த பணிப் பாதுகாப்பும் இல்லாமல் பணிபுரிகின்றனர். ஒருபுறம் காலிப்பணியிடங்களுக்கு  சொற்ப நிய மனங்களும் மறுபுறம் ஒப்பந்த அடிப்படை என்று நிரந்தர தன்மையை அழிப்பது எனவும் அரசின் துறைகளும், நிறுவனங்களுமே மேற்கொள்கின்றன. இச்சூழலில் தனியார் துறையை சொல்லவா வேண்டும். சமீபத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு  ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் பணியாற்றிய 81 பேரில் உயர் பட்டம் பெற்ற பெண்கள் அதிகம். அவர்கள் அனைவரும் நிறுவனத்தின் தேவையில் இருந்து அத்துக்கூலிகளாக சொற்ப சம்பளத்தில் நிர்வா கத்தால் நேரடியாக எந்த தேர்வோ, விளம்பர அறி விப்போ இல்லாமல் நியமிக்கப்பட்டவர்கள்.

தினசரி 150 ரூபாய் துவங்கி 450 ரூபாய் வரை கூலி பெற்றவர்கள், திடீரென ஒரு நாள் நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் எடுக்க போகிறோம் என அறிவிக்க பதறிப் போன இப்பணியாளர்கள் நீதி மன்றத்தை நாட, நீதிமன்றமோ இவர்கள் அனைவ ரும் பின்வாசல் வழியாக வந்தவர்கள்; இவர்களுக்கு உரிமை கோர உரிமையில்லை என தீர்ப்பளிக்கிறது. வேலையின்மை என்ற பெருங்கொடுமை நாட்டைப் பிடித்து  ஆட்டுகிறது. பெரும்பகுதி இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள நிலையில் இவர்களுக்கு எப்படி  வாய்ப்பளிப்பது; நிறுவனம் விளம்பரம் செய்து வந்தார்களா; தேர்வு எழுதி வந்தார்க ளா எனக் கேட்கிறது நீதிமன்றம். ஆம், இந்தியாவில் இன்றும் சுமார் 5 கோடிப் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கெளரவமான வேலைக்காக  பதிவு செய்துவிட்டு அரை சாண் வயிற்றுப் பசிக்கு கால் வேலை, அரை வேலை என கிடைக்கும் வேலையைச் செய்கிறார்கள். 2022 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

வேலையின்மை என்ற பெரு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் போது  தான் உயிர் பிழைக்க சிறு குச்சியோ, மரக்கிளையோ எது கிடைத்தாலும் அதைப்பிடித்து கரையேற முயற்சிக்கிறார்கள் இந்தியக் குடிமக்கள். அப்படி காப்பாற்றப்பட்ட மனிதனிடம் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதே சமூ கத்தின் கடமையாக இருக்க முடியும். 240 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினாலே அவரை நிரந்தரப்படுத்த வேண்டுமென தொழிலாளர் நலச்  சட்டங்கள் வரையறுக்கிறது. ஆனால் இங்கு அரசு நிறு வனங்களோ அத்துக்கூலி ஊழியர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிட்டு அவர்களை சக்கையாக வெளியே தள்ளுவது நியாயமாகுமா? சமீபத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மொத்த உலகமே உயிர் பயத்தில் தத்தளித்த போது அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படை யில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை பல சலுகைகள் அறிவித்து கட்டாயப் பணியாக  சேர்த் தார்கள். கொரோனா தொற்று குறைந்ததும் அவர்கள் நிலையென்ன?

கூட்டுறவு, மருத்துவமனை, பள்ளிகள், வருவாய்த் துறை, உள்ளாட்சி,  வங்கிகள், இன்சூரன்ஸ், ரயில்வே, போக்குவரத்து உள்ளிட்டு பெரும் பகுதி அரசு நிறு வனங்களில் செக்யூரிட்டி,  துப்புரவு, ஆய்வகம், தொழில் நுட்ப வல்லுநர், டிரைவர்,  எழுத்தர், கணக்கர், ஆப் ரேட்டர்,  மேற்பார்வையாளர்  என பல பிரிவுகளில்  இரு பாலரும் அத்துக்கூலியாக இருந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே! இன்று ராணுவத்தில் ஆளெடுக்க அக்னிபாதை என ஒன்றிய அரசின் நடவடிக்கை இதன் உச்ச கட்டம். இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்று சொன்ன மோடி ஆட்சியில் 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை கொடுத்தி ருக்க வேண்டும். 22,05,99,238 விண்ணப்பங்கள் (22 கோடி) பெறப்பட்டு வேலை கொடுத்ததோ வெறும் 7,22,311 (7.2 லட்சம்)  மட்டுமே.

இது ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறுபதம். இன்று அனைத்து அரசுத் துறைகளிலும் இந்த நிலையை சட்டப்பூர்வமானதாக மாற்றிவிட்டனர். அதனால் தான் வேலை என்பதை அரசியல் சட்ட உரி மையாக்க வேண்டும் எனக் கோருகிறோம். இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு பழங்குடியின பெண்ணை தேர்வு செய்ய முடிந்த நம்மால் சுயமாக இயங்கும் உள்ளூர் வார்டு உறுப்பினர் வரை செயல்பட வைக்க முடிகிறதா?  மன்ற கூட்டங்களில் துவங்கி எதில் கையொப்பமிட வேண்டும் என்பதை ஒரு ஆண் தீர்மானிக்கும் நிலையில் வேலை செய்யும் பணியிடங்க ளில் விட்டுவிடுவார்களா?

அழகு, புன்னகை, நேர்த்தி, உடை, மொழி, செயல்திறன் என  எதிர்பார்க்கும் வேலைதருபவர்கள், அவர்களுக்கான சம்பளம், விடுமுறை, பணிப் பாது காப்பு கோரினால் அது தவறாகுமோ? அதேபோல் அனைத்துப் பணியிடங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக கேரளாவைப் போல் தினசரி ரூ. 600 என்பதை உறுதி செய்துள்ளது.  ஒன்றிய அரசு  தினசரி ஊதிய மாக ரூ.700 என்பதை உறுதி செய்தும் கெளரவமான வேலை என்பதை கட்டயமாக்கவும் சட்டமியற்ற வேண்டும்.

கட்டுரையாளர் : சிபிஐ(எம்)  திருப்பூர் மாவட்டச் செயலாளர்

;