articles

img

பழனி மலை காப்போம் மக்கள் வாழ்வாதாரம் காப்போம்! - வ. இராஜமாணிக்கம்

சவப்பெட்டிக்கு ஆணி அடித்தது போல,  பழனி அடிவாரம் கிரிவீதிக்கு வரும் சகல வீதிகளையும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அடைத்து வைத்து இருக்கிறது.  ஒரு வண்டி, வாகனம், ஏன் சைக்கிள் கூட உள்ளே நுழைய முடியாது.  கொரோனா காலத்தில் வெறிச்சென்று காட்சி  அளித்ததைப் போல கிரிவீதி மயான அமைதியுடன் இருப்பதை காணும் உள்ளூர் மக்களும், வெளியூர்  பக்தர்களும் தாளமுடியாமல் துக்கம் அனுஷ்டிக்கின்றனர்.

கிரிவீதியான வண்டிப்பாதை...

வயலும் வயல் சூழ்ந்த மலைப்பகுதியை “பழனம்”  என்று அழைத்தார்கள். பழனம் என்ற பெயர் தான் நாளடைவில் பழனி என பெயர் மாற்றம் அடைந்ததாக ஒரு வரலாறு சொல்கிறது.  வயல்வெளிக்குச் சென்று வருவதற்காக விவசாயிகளால் ஆதியில் அமைக்கப்பட்ட வண்டிப்பாதை பழனிமலைக்காக அமைக்கப்பட்டது அல்ல.  மலையைச் சுற்றி அமைந்துள்ள நஞ்சை நிலங்களுக்கும், மலைக்கு தெற்குப்பக்கம் உள்ள விவசாய நிலங்களுக்கும்,  ஊர்களுக்கும் சென்று வர உருவாக்கப்பட்டது ஆகும்.  விவசாயப் பெருமக்களால் பொதுவழிப்பாதை என  அறியப்பட்ட வண்டிப்பாதை, கிரிவீதி என காலப்போக்கில் அழைக்கப்பட்டது. பழனி மலைக்கு ஒரு வழி மட்டுமே உண்டு.  பாதவிநாயகர் கோவிலில் இருந்து படிகள் வழியாக மலைக்கு செல்லும் பாதையைத் தவிர வேறு பாதை  எதுவும் இல்லை.  இடையில், ஏற்பட்டது தான் மலைக்கு தெற்குப்பக்கமும், கிழக்குப் பக்கமும் உள்ள வின்ச் மற்றும் ரோப் கார் பயண வசதி. பழனி மலைக்கு வரும் பெரும்பான்மையான பக்தர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த சாதாரண ஏழை எளிய விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளிகள் ஆவர்.  அத்தகைய உழைக்கும் வர்க்கத்தினர் உண்டியல்  மூலம் வழங்கும், அழுக்கடைந்த ஐந்து ரூபாய், பத்து  ரூபாய், இருபது ரூபாய் நோட்டுக்கள் தான் இன்று  வரை கோவிலுக்கு பலகோடி ரூபாய் நிதி ஆதார மாக  உள்ளது.

வழியுமில்லை - வாய்ப்பில்லை

பங்குனி உத்திரம், தைப்பூச திருவிழாக்களின் போது காவடிகள் ஏந்தியும் அலகு குத்தியும் கூட்டம், கூட்டமாக வரும் பக்தர்கள், மூன்றாம் படை வீடான திருஆவினன்குடி முருகனை தரிசித்து விட்டு, சன்னதி ரோடு வழியாக பழனி மலை நோக்கி  வருவார்கள்.  இந்த இரண்டு பெரும் திருவிழாக்கள் தவிர, ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் காலத்தில் வரும் பக்தர்கள் கிரிவலப்பாதையை பயன்ப டுத்தி பழனி மலைக்குச் சென்று வருகிறார்கள். பழனி மலை அடிவாரம் கிரிவீதி மற்றும் சன்னதி ரோட்டில் பக்தர்களுக்கு தேவையான பஞ்சாமிர்தம், விபூதி மற்றும் அபிசேக சாமான்கள் விற்கும் கடைகள் உள்ளன.  இது தவிர, சாலை ஓரங்களில் தட்டுப் போட்டும், சாக்கு விரித்தும், சிறிய ஸ்டால்கள் அமைத்தும் சாலை ஓர சிறு வியாபாரிகள் பக்தர் களை நம்பி தொழில் நடத்தி வருகிறார்கள்.  இவர்கள் அனைவரும் பழனி பகுதியைச் சார்ந்தவர்கள்.   பழனி கோவில் நகரமாக மட்டும் இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பித்தான் இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.   இவர்களுக்கு வாழ வேறு வழியோ, வாய்ப்போ இல்லை.

பராமரிக்கும் பணிக்காக மட்டும்

ஆதிகாலந்தொட்டு, மலையைச் சுற்றி உள்ள விவசாயிகளுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் பாதை யாக இருந்து வந்த கிரிவலப்பாதையை பழனி நகராட்சி நிர்வாகம் பழனி நகர பொதுமக்களின் உபயோ கத்திற்காக பாதுகாத்து பராமரித்து வந்தது.  கோவி லுக்கு நிதி ஆதாரம் உருவான பிறகு பக்தர்களின் வருகையை முன்னிட்டு, கிரிவலப்பாதையை பரா மரிக்கும் பொறுப்பை, கோவில் நிர்வாகம் கேட்ட தால், பழனி நகராட்சி நிர்வாகமும் கோவில் நிர்வாகத்தி டம் கிரிவலப்பாதையை பராமரிக்கும் பணிக்காக மட்டும் நிபந்தனைகளுடன் ஒப்படைத்தது. பழனி முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் எவ்விதத் தடையும், இடையூறும் இன்றி, சன்னதிரோடு, கிரிவீதி வழியாக பழனி மலைக்குச் சென்று வருகின்றனர்.  எவ்வளவு கூட்டம் வந்தாலும் அதை ஒழுங்குபடுத்தி, சாமி தரிசனம் செய்வதற்கு சகலவசதிகளையும் கோவில் நிர்வாகமும், காவல்துறையும் செய்து வரு கிறது.  இதுகாலம்வரை பழனி மலையின் நற்பெய ருக்கு பங்கம் ஏற்படும் வகையில் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடைபெற்றது கிடையாது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், கோவி லுக்கும் பாதுகாப்பாக சாலையோர சிறு வியாபாரிகள் உள்ளனர்.  திருவிழாக்காலங்கள் என்பது சாமியை  தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், பக்தர்களுக்கு வேண்டிய பொருட்களை விற்கும் சிறு வியாபாரி களுக்கும் கடைக்காரர்களுக்கும் உரியது ஆகும்.  கோவிலுக்கு வரும் சாதாரண எளிய பக்தர்கள் வெறும் கைகளை வீசிக்கொண்டு வீட்டுக்குப் போகமாட்டார்கள், குறைந்தபட்சம், பஞ்சாமிர்தம், பொரிகடலை, வாழைப்பழமாவது வாங்கிக்கொண்டு போவார்கள்.

திருக்குறளுக்கு எதிரான  நீதிமன்ற நடவடிக்கை

தற்போது இது எதற்கும் வழியில்லாமல், அரண் மனைக்குச்  செல்லும் ராஜபாட்டையை போல  கிரிவீதியை துடைத்து வைத்திருக்கும் நீதிமன்ற நட வடிக்கை “ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்  மாட்டும் தேர்ந்து செய்வதே முறை” என்ற திருக்குற ளுக்கு எதிரானதாக உள்ளது.  திருத்தொண்டர் பேரவை என்ற பெயரில் ஒரு லெட்டர்பேட் அமைப்பை நடத்தி வரும், ஒரு ராதாகிருஷ்ணன், அவரது மதவாத அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பல்வேறு வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.  பழனி மலை போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் தனிப்பட்ட முறையில் அவரது செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

ஆக்கிரமிப்பல்ல...

ராதாகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத்துறை யின் கீழ் கோவில்கள் இருக்கக் கூடாது என்ற கொள்கை யின் அடிப்படையில் பொய்யும், புரட்டுமான சங்கதி களைக் கூறி கோவில் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு களை தாக்கல் செய்கிறார்.  பழனி மலை கிரிவீதியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சாலையோர சிறுவியா பாரிகளை அகற்ற வேண்டும் என்பது அவரது நோக்கம். சாலை ஓரத்தில் பக்தர்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் இன்றி, இரண்டு அல்லது மூன்று  அடி அகலத்தில் சாக்கு விரித்தும், தட்டுப்போட்டும் தொழில் செய்யும் சிறு வியாபாரிகள் ஆக்கிரமிப்பா ளர்களே அல்ல.  திருக்கோவில் நிர்வாகமும், காவல்துறையும் எடுக்கச்சொன்னால் உடனடியாக கடைகளை எடுத்துக் கொள்வதற்கும், போடச் சொன்னால் போட்டுக் கொள்வதற்குமான இலகு வான சூழ்நிலையே உள்ளது.  சாலையோர சிறு வியாபாரிகள் நிரந்தரமாக கிரிவீதியை எப்பொழுதும் ஆக்கிரமிப்புச் செய்தது கிடையாது.

ஐம்பொன் சிலை நிறுவ முயற்சித்தபோது...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட பழனி முருகன் நவபாஷாணச் சிலையை, தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டது என இப்பகுதி மக்களால் போற்றி இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.  அரசும், அரசு  சார்ந்து இந்து சமய அறநிலையத்துறையும் நிர்வாகம் செய்து வந்தாலும், பழனி பகுதி மக்கள் தான் விழிப்பு டன் பழனி முருகனுக்கு எந்த ஒரு பங்கமும் வராமல் கண்காணித்து வருகிறார்கள்.  இடையில், ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நவபாஷா ணச் சிலையின் மகத்துவத்தை மறைத்து, கர்ப்பகிர ஹத்தில், ஐம்பொன் முருகன் சிலையை சங்கராச்சாரி யார் மூலம் பிரதிஷ்டை செய்தபோது, அதற்கு எதிராக பொங்கி எழுந்து பெரும் போராட்டங்கள் நடத்தி பழனி முருகனின் சிலையையும், புகழையும் பாதுகாத்தனர். பழனி முருகன் ஐந்து கால பூஜைக்கு கஷ்டப்பட்ட காலத்தில், கண்டு கொள்ளாத இந்த நாட்டின் பெரும் முதலாளிகள் தென்னிந்தியாவில் திருப்பதிக்குப் பிறகு பெரும் நிதி வருவாய் கொண்ட கடவுளாக பழனி முருகன் மாறிய பிறகு அதன் மீது வியாபார நோக்கத்துடன் குறி வைக்கின்றனர்.  அதற்கு ஆதரவாக அறங்காவலர் குழு தலைவர்களாக வரும் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள் செயல்படுகின்றனர்.  பழனி மலை உட்பட அடிவாரம் கிரிவீதிப்பகுதியை அப்படியே ஹைஜாக் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

மக்களுக்கும் மலைக்கும் இருக்கும் நெருக்கத்தை வேரறுக்கும் முயற்சி

 மலையின் கிழக்குப் பக்கமாக வரும் பைபாஸ் ரோட்டினை பயன்படுத்தி பக்தர்கள் அனைவரையும், கிரிவீதியோடு நிறுத்தப் பார்க்கிறார்கள்.  அதைக் கடந்து பழனி நகரத்திற்கும், பழனி பகுதி மக்களுக்கும் பழனி மலையுடன் இருக்கும் நெருக்கத்தை யும் தொடர்பையும் வேரறுக்க முடிவு செய்துள்ள னர். கோவில் நிர்வாகம் கிரிவீதிக்கும், பைபாஸ் ரோட்டிற்கும் இடையில் உள்ள 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை கிரையம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.  அதில் நட்சத்திர தங்கும் விடுதிகளையும், வணிக வளாகங்களையும் ஹெலிபேடுகளையும் கட்டி கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களை பக்தியின் பேரால் சுரண்டவும், கொள்ளையடிக்கவும் முடிவு செய்துள்ளனர்.  கிரிவீதியில் யாரும் தொழில் நடத்தி வரக்கூடாது என்ற நிலையில் திருக்கோவில் நிர்வாகத்தால், திரு விழாக்காலங்களில் வரும் அனைத்து பக்தர்களுக்கும் பஞ்சாமிர்தம் வழங்க முடியாது.  கடைசியில் ஒட்டு  மொத்த பஞ்சாமிர்தத்தையும் தயாரித்து விற்பனை செய்யும் உரிமையை ஒரு தனியாருக்கு ஏகபோக மாக விடும் சூழ்நிலை ஏற்படும். மேற்படி திட்டம்,  அறங்காவலர் குழு தலைவராக திரு.V.S.பால சுப்பிரமணியம் இருந்தபோது உருவாக்கப்பட்டது. போராட்டத்தால் கைவிடப்பட்ட திட்டத்தை...   அப்பொழுது நகர்மன்ற தலைவராக இருந்த என்னுடைய தலைமையில், ஆயிரக்கணக்கான சாலையோர சிறுவியாபாரிகள், கடைக்காரர்கள், விவ சாயிகள், பெரும் எழுச்சியுடன் உண்ணாவிரதம் உட்பட போராட்டங்களில் ஈடுபட்டதால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.  திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பின ராக இருந்த தோழர் கே.பாலபாரதி சட்டமன்றத்தில் கடும் ஆட்சேபணையைத் தெரிவித்ததால், அப்போதைய கலைஞர் தலைமையிலான திமுக அரசு அத்திட்டத்தை கைவிட்டது.

சிறைச்சாலை கதவைப்போல்...

ஏறக்குறைய 15 ஆண்டுகள் கழித்து அதே கூட்டம்,  ராதாகிருஷ்ணன் மூலமாக நீதிமன்றத்தை அணுகி யதில் உத்தரவுக்கு மேல் உத்தரவாக போட்டு வரு கிறது.  நீதிமன்றம் தெரிந்து செய்கிறதா? தெரியாமல் செய்கிறதா? என்ற குழப்பம் பழனியில் உள்ள அனை வருக்கும் உள்ளது.  திருஆவினன் குடியிலிருந்து பாதவிநாயகர் கோவிலுக்கு வரும் சன்னதி ரோடு,  ஒரு ஆள் மட்டும் உள்ளே சென்று வரும் சிறைச்சாலை யின் வாசற்கதவைப் போல முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.  அலகு குத்தி வரும் பக்தர் குறுக்கு  வெட்டில் நடந்து செல்லும் கொடுமை அரங்கேறி வரு கிறது.  காவடிகளை தலையிலும், தோளிலும் ஏந்தி கூட்ட மாக வரும் பக்தகோடிகள், சபிக்கப்பட்டவர்கள் போல  ஒருவர் பின் ஒருவராகத் தான் சன்னதி ரோட்டை கடக்க முடியும்.  இது பக்தர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

அதீத பக்தியும் அழிச்சாட்டியமும்

 சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தைப்பூசத் திருவிழா நடக்கும் பத்து நாட்களும், குடும்பத்தாருடன் சேர்ந்து பழனி முருகன் முன்பு அமர்ந்து கொண்டு அதீத பக்தியில் அழிச்சாட்டியம் செய்வார்.  அவர் பணி ஓய்வு பெற்ற பிறகும் அது  தொடர்ந்தது.  நீதியரசர் வருகிறார் என்றால் திண்டுக்கல் மாவட்ட நீதித்துறையே அலறும்.  அவர் வந்து திரும்பும்வரை, பழனி நீதிமன்றத்தின் தலைமை நிர்வாகியான செரிஸ்தார் அவரது இருக்கையில் அமர  முடியாது.  கடைசியாக ஒரு நீதியரசர் பழனி ரயில்  நிலையத்தில் வந்து இறங்கிய பொழுது, உடனடி யாக அவரை வரவேற்கத் தவறினார் என்ற காரணத்திற் காக, அந்த செரிஸ்தார், ஒரே நாளில் தண்ணியில்லா காட்டுக்கு தூக்கியடிக்கப்பட்டார். எளியவர்களின் கடவுளான முருகனை சகல அதி காரங்களுடன் துதிக்க வரும் சில நீதியரசர்களுக்கும் அவர்களின் சிபாரிசின் பேரில் வரும் விஜபிக்களுக் கும் சில நேரங்களில் அவர்கள் விரும்பும் வகை யில் அல்லது சூழ்நிலையில் சாமி தரிசனமோ, மரி யாதையோ தனிப்பட்ட முறையில் கிடைக்காமல் போயிருக்கலாம்.  அதை மனதில் வைத்துக்கொண்டு, சாலை ஓர சிறு வியாபாரிகளை விரட்டியடிப்பது, வணிக நடவடிக்கைகள் இருக்கக்கூடாது,  வாகனங்கள் போகக் கூடாது,  கிரிவீதிக்கு வரும் அத்தனை பாதைகளை யும் அடைப்பது கிரிவீதியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள், மடங்கள், சத்திரங்களுக்கு போவதற்கான நடமாட்டத்தை முடக்குவது, கிரிவீதியைச் சுற்றி சுற்றுச் சுவர் கட்டுவது என வாரம் தவறாமல் உத்தரவு போடும் நீதிமன்றத்தையும், அதற்கேற்ப தலை யாட்டும் அரசுத்துறை நிர்வாகிகளையும் பழனி மக்களும், பழனி நகர மக்களும், பக்தர்களும் வெறுப் புடனும், வேதனையுடனும் பார்த்துக் கொண்டுள்ள னர்.

பழனி முருகனையும் பக்தர்களையும் தனிமைப்படுத்தக் கூடாது

 ஆண்டியின் கோலத்தில் இருக்கும் முருகனிடம் தண்டமும் கௌபீனமும் மட்டுமே உள்ளது.  அத்தகைய நிலை முருகனை நம்பி வாழும் பழனி  பகுதி மக்களுக்கும் வரவேண்டும் என்பதே ராதா கிருஷ்ணன் போன்ற போலி பக்தரின் நோக்கமாக உள்ளது. அதற்கு ஒரு போதும் அரசும், நீதிமன்றமும் இடம் கொடுக்கக்கூடாது. ஏற்கனவே, பழனிக்கு அருகில் உள்ள கணக்கன்பட்டியில் அழுக்குமூட்டை சித்தர் என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து, பழனி முருகனை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களை திசை திருப்பி அழைத்துச் செல்லும் வேலையை ஒரு கூட்டம் செய்து வருகிறது.  இந்நிலையில் ஒரு பாவமும் அறியா தமிழ்க்கடவுள் பழனி முருகனை பழனி பகுதி மக்களிடம் இருந்தும், பக்தர்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தும் காரி யத்தில் ஈடுபடுவது கூடாது. ஆகையால்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பழனி மலை கோவிலையும், கோவிலை நம்பி வாழும் பழனி வாழ்மக்களின் வாழ்வாதாரத்தையும், எளிய பக்தர்களின் நலனையும் பாதுகாக்கும் பொருட்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.





 

;