articles

img

கேரளாவில் காங்கிரசின் திவாலாகிப்போன அரசியல்

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரசாரும், பாஜக-வினரும் இரண்டகமான கண்ணாடியை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறி காவல்துறையினருடன் மோதலாகவும் மாறி இருக்கின்றன. இந்தக் கிளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது,  தங்கக்கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு,  குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு,  தற்போது பிணையில் வெளிவந்திருக்கின்ற,  சொப்னா சுரேஷ் அளித்துள்ள கேலிக்குரிய புகாராகும்.  இப்போது அவர் புதிதாக எண்ணற்ற கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.  ஒரு பையில் ஏராளமான வெளிநாட்டுக் கரன்சி நோட்டுகள் முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க,  தூதரக ஊழியர்கள் மூலமாக நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாம்.  முதலமைச்சரின் இல்லத்திற்கு,  பிரியாணி பாத்திரங்களில் தங்கம் கடத்தி வரப்பட்டதாம்.  இதேபோன்று எண்ணற்ற அபத்தமான கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.

தங்கக் கடத்தல் சம்பவம் 2020 ஜூன் மாதத்தில் முதன்முதலாக வெளிச்சத்திற்கு வந்தவுடனேயே,  முதலமைச்சர் பினராயி விஜயன்,  இது தொடர்பாக ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனத்தால் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கோரி ஒன்றிய அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதி இருந்தார். ஏனெனில் சுங்கத்துறை ஒன்றிய அரசின் கீழ் வருவதால் இவ்வாறு அவர் கடிதம் எழுதியிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசியப் புலனாய்வு ஏஜன்சி (என்ஐஏ), குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அமலாக்கத் துறை மற்றும் சுங்கத் துறையினர் இதன் ஒவ்வோர் அம்சத்தையும் துருவித்துருவி புலனாய்வு செய்தனர். எனினும், எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் ஏராளமான புகார்களைக் கூறியிருந்தபோதிலும் அவற்றால் முதலமைச்சருக்கு எதிராகவோ அல்லது வேறெந்த அமைச்சர்களுக்கும் எதிராகவோ எதனையும் காண முடியவில்லை.

மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ?

சொப்னா சுரேஷ் உட்பட இதற்கு முன் எண்ணற்ற நிறுவனங்களின் முன் அவர் அளித்துள்ள ஒன்பது வாக்குமூலங்களில், முதலமைச்சருக்கு எதிராக எதுவும் குறிப்பிடவில்லை. உண்மையில், அவர் சிறையிலிருந்த சமயத்தில், முதலமைச்சரைப் பிணைத்து வாக்குமூலம் அளிக்குமாறு தன்னை நிர்ப்பந்திக்கின்றனர் என்று ஒரு குரல் செய்தி (voice message) அனுப்பி இருந்தார். இப்போது, என்ன மாறியிருக்கிறது? சொப்னா சுரேஷ் 2021 நவம்பரில் உயர் நீதிமன்றத்திலிருந்து பிணையில் வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் இயங்கிடும் அரசு சாரா நிறுவனமான ‘ஹைரேஞ்ச் ரூரல் டெவலப்மெண்ட் சொசைட்டி’ (HRDS) என்னும் அமைப்பில் ஓர் அதிகாரியாக வேலையில் சேர்ந்திருக்கிறார். இவருடன் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மற்றொரு நபரான பி.எஸ். சரித் என்பவரும் இவருடன் வேலையில் சேர்ந்திருக்கிறார். இதன்பின்னர் ஒருசில மாதங்கள் கழித்து சொப்னா சுரேஷ் ஒரு நீதித்துறை நடுவர் முன் அளித்துள்ள 164ஆவது பிரிவின் கீழான வாக்குமூலத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார். இவ்வாறு இவர் கூறிய வாக்குமூலம் கமுக்கமாக (confidential) வைக்கப்படவேண்டிய ஆவணம் என்ற போதிலும் இதனை பொது வெளியில் பரப்பியிருக்கின்றனர்.   இவ்வாறு ஜோடனை செய்யப்பட்ட கதைகளுக்குப்பின்னேயுள்ள நாடகம் ஊகிக்கக் கூடியதேயாகும்.  இவ்வாறு நகைக்கத்தக்க குற்றச்சாட்டுகளைத்தான் காங்கிரஸ் கட்சி, ஏசுநாதரின் போதனை போன்று கையில் எடுத்துக்கொண்டு, முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்துகிறது. இந்தக் கதையை உருவாக்கித்தந்துள்ள ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்களும் இவர்களுடன் சேர்ந்து வீதிகளில் இறங்கியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பிரதான ஊடகங்கள் அனைத்தும், சொப்னா சுரேஷ் அவிழ்த்துவிட்ட பொய்ச்சரடுகளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, முதலமைச்சர் மற்றும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் இணைந்துகொண்டுள்ளன.  

இளைஞர் காங்கிரஸ், முதலமைச்சர் செல்லுமிடங்களில் எல்லாம் கறுப்புக் கொடிகள் காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இவர்களின் வெறித்தனம் முதலமைச்சரை நேரடியாகவே மோதக்கூடிய அளவிற்குச் சென்றுள்ளது. முதலமைச்சர் கண்ணூரிலிருந்து திருவனந்தபுரம் வந்த விமானத்தில் இரு இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஏறிக்கொண்டு, விமானம் தரையிறங்கும் சமயத்தில் முதலமைச்சரை நோக்கி விரைந்துவந்து முழக்கமிட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி. சதீசன் விமானத்தில் நடைபெற்ற ஆபத்தான இந்நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதலமைச்சரை நோக்கிச் சென்ற இளைஞர் காங்கிரசாரைத் தடுத்து நிறுத்தி, அவர்களைப் பின்னுக்குத் தள்ளியதற்காக, இடது ஜனநாயக முன்னணி கன்வீனரான இ.பி.ஜெயராஜன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

நிராகரிக்கப்பட்ட புகார்களை...

இவ்வாறு கேரளாவில் காங்கிரசார் பினராயி விஜயனுக்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் அதே சமயத்தில்தான், தில்லியில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையினர் முன்பாக ராகுல் காந்தி ஆஜராகும் சமயத்தில், காங்கிரசார் வீதிகளில் இறங்கி இது ‘அரசியல் பழிவாங்கல்’ (‘political vendetta’) என்று கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். என்னே முரண்செயல்! ஆனாலும் கேரளாவில் அமலாக்கத்துறையினர் பினராயி விஜயனுக்கு எதிராக செயல்படவில்லை என்றும், இதற்குக் காரணம் மோடிக்கும் விஜயனுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் கூறிக்கொண்டிருக்கிறது.   

ஓராண்டுக்கு முன்பு, தங்கக் கடத்தல் வழக்கு சம்பந்தமாக முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக காங்கிரசும் பாஜகவும் மிகவும் விரிவான அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஒன்றிய அரசின்கீழான புலனாய்வு அமைப்புகளால் முதலமைச்சரைப் பிணைத்து எதையும் கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களும் 2021 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர்களின் புகார்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டதாலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி நம்பிக்கையிழந்தது. இப்போது, மீண்டும் ஆர்எஸ்எஸ்-ஆல் உந்தித் தள்ளப்பட்டுள்ள சொப்னா சுரேஷை வைத்துக் கொண்டு, தங்கள் அதிர்ஷ்டங்களை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியுமா என்று அவர்கள் பார்க்கிறார்கள்.   

சதித்திட்டத்தின் கைக்கூலியாக...

காங்கிரஸ் கட்சி கேரளாவில் நடந்துகொள்ளும் விதமே, தேசிய அளவில் அது ஏன் திவாலாகிப்போனது என்பதை விளக்குகிறது. இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவதற்கு அது பாஜக-வுடன் கைகோர்ப்பதில் எவ்விதமான சங்கடத்திற்கோ, மன உளைச்சலுக்கோ ஆளாகவில்லை. அவர்கள் பினாராயி விஜயன், மோடியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதன் சொந்தத் தலைவர்கள்தான் பாஜக-வுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆர்எஸ்எஸ்/பாஜக இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக உருவாக்கியுள்ள சதித்திட்டத்தின் கைக்கூலிகளாக மாறியிருக்கிறார்கள். கேரளாவில் காங்கிரசும் பாஜகவும் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதலுக்கு எதிராக, ஒரு வலுவான பிரச்சார இயக்கத்தையும், வெகுஜன அணிதிரட்டலையும் மேற்கொள்வதன் மூலம் வலுவான பதிலடி அளிக்க வேண்டியது அவசியமாகும். இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின்மீதும் அதன் கொள்கைகள் மீதும்  முழுமையாக நம்பிக்கை வைத்துள்ள கேரள மக்கள் இதற்குச் சரியான பதிலடி அளிப்பார்கள்.

ஜூன் 15, 2022                 -தமிழில்: ச.வீரமணி

 

;