articles

img

வேலை நேரத்தை உயர்த்துவது தொழிலாளியை கொல்வதற்கு ஒப்பாகும் - ச.லெனின்

ஒவ்வொரு நாளும் பதினான்கு முதல் பதி னெட்டு மணிநேரம் வரை உழைப்பதே ஒரு  வேலைநாளாக பத்தொன்பதாம் நூற்றாண்டி லிருந்தது. அப்படியான சூழலை ஒழித்து, எட்டு மணி நேரமாக வேலைநாள் குறைக்கப்பட்டதே மே தின கொண்டாட்டத்தின் அடிநாதமாகும். ரத்தம் தோய்ந்த தொழிலாளர்களின் போராட்ட சுவட்டிலிருந்தே மே  தினம் என்கிற உலக தொழிலாளர் தினம் பிரச வித்தது. இந்தியாவில் ஒரு வேலைநாள் என்பது சட்டப்படி எட்டு மணி நேரமாக உள்ளது. அதை மாற்ற ஒன்றிய பாஜக அரசு பல வகைகளில் முயற்சிக்கிறது.

தொழிற்புரட்சி வேகமெடுத்த காலத்தில் பதினெட்டு மணி நேரம் வரையிலான வேலை நாள் என்பது தொழிலாளர்களை கடுமையாகப் பிழிந்தெடுத்தது. இந்த கூடுதலான வேலை நேரம் தொழிலாளர்களுக்கு உடல் அளவிலும் மனதள விலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அன்றைய காலத்தில் பிரிட்டன் “தொழிலாளர்களின் நிலை குறித்து ஆராய்ந்தறிந்த கம்யூனிசத்தின் மூலவர்களில் ஒருவரான ஏங்கெல்ஸ், தொழிலாளியை சாகும் நிலைக்குத் தள்ளும் வகையில் தொழில் சூழலையும், வேலை நேரத்தையும் முதலாளித்துவம் வைத்திருப்பது தொழிலாளியைக் கொலை செய்யும் செயலுக்கு ஒப்பானதே” என்றார். இத்த கைய சூழலில்தான் ‘‘எட்டு மணி நேரம் வேலை,  எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் பொழுது போக்கு (Recreation)’’ என்கிற முழக்கத்துடன் தனது போராட்ட முன்மொழிவை அமெரிக்க தொழி லாளர்களின் கூட்டமைப்பு 1884 –ம் ஆண்டு துவங்கியது. 

உயிர்த் தியாகங்கள்

1886 மே ஒன்றாம் தேதி ‘‘அரண்மனைகள் மீது போரும், மக்கள் குடியிருப்புகள் மீது அமைதி யும், செயலின்மையின் மீது மரணமும் பரவட்டும்’’ என்பது போன்ற முழக்கங்களுடன் சிகாகோ நகர  வீதிகளில் தொழிலாளர்கள் கூடினர். 13,000 நிறு வனங்களைச் சார்ந்த மூன்று லட்சம் தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நேரத்தைக் குறைத்திட வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தின் மூன்றாம் நாள் எப்போதும்போல் காவலர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைக் கண்டித்து ஹே மார்க்கெட் பகுதியில் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப் பட்டது. அமைதியாக நடைபெற்ற இப்போராட்டத்தின் இடையே குண்டு ஒன்று வெடித்து காவலர்கள் உள்ளிட்ட மக்கள் சிலர் பலியாகினர்.

இதையடுத்து தொழிற்சங்க தலைவர்கள் எட்டுபேர் கைது செய்யப்பட்டு பின்னர், குற்றவாளி கள் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆல்பர்ட் பார்சன், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கெல் மற்றும் அடால்ப் பிஷ்சர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்ட னர், லூயில் லிங் என்பவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். இதில் கொடுமை என்னவெனில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்றுபேர் மட்டுமே சம்பவ இடத்திலிருந்தனர் என்பதுதான். குற்றச்செயல் நடந்ததற்காகவோ, அதில் அவர்கள் சம்பந்தப்பட்டனர் என்பதற்காகவோ அவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. உண்மையில் கொள்கை உறுதிமிக்க போராட்டத்தை விடாப்பிடி யாக முன்னெடுத்ததற்காகவே அவர்கள் கொல்லப் பட்டனர்.  இப்படியான போராட்டங்கள், உயிர்த் தியாகங் களுக்கு பிறகே இன்று அனுபவிக்கும் உரிமைகளும், குறைந்தபட்ச கண்ணியமான வேலை நேரமும், பணிச்சூழலும் சாத்தியமாகியுள்ளது. மேலும் நமது உரிமைகளுக்காகவும் பெறப்பட்ட உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்தும் நாம் போராட வேண்டியுள்ளது. 

தொழிலாளர் விரோத நடவடிக்கை 


கொரோனாவின் தாக்கத்திற்குப் பிறகு, கொரோனா காலத்தில் இழந்ததைக் கூடுதல் உழைப்பின் மூலம்தான் பெறமுடியும் என்று சில முதலாளிகள் பேசினர். அதற்கேற்ற வகையில் ஹரியானா, ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திச் சிறப்பு ஆணைகள் மூலம் வேலை நேரம் பன்னிரண்டு மணி நேரமாக உயர்த்தப்பட்டது. உத்தரப் பிரதேச அரசு தொழிலாளர் நலச் சட்டங் களை மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக அறி வித்தது. மத்தியப் பிரதேச அரசு சில தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஏதுவாக மாற்றி யமைத்தது. இப்படியான செயல்பாடுகள் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள தொழிலாளர் நலன் மற்றும் மனித உரிமைகள் குறித்த சர்வதேச உத்தர வாதங்களுக்கு எதிரானவையாகும். இவை இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல் என்பதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப் பட்டவுடன் வேலை நேர உயர்வு எனும் முடிவு பின்வாங்கப்பட்டது. தற்போதைய தமிழ்நாடு அரசின்  முடிவையும் இவற்றுடன் இணைத்தே பார்க்க வேண்டும்.

தொழிலாளர் விரோத நடவடிக்கை என்று வருகிறபோது, தேசிய மற்றும் மாநில முதலாளித்துவ கட்சிகள் அனைத்தும் முதலாளிகளுக்கு ஆதரவாகவே நிற்கின்றன. ‘‘அரசு (State) என்பது, ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்க த்தை நிலைநிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரம்’’. வேலை நேரத்தை உயர்த்துவது என்பது, ஆளும் முத லாளி வர்க்கத்தின் பிரதிநிதியாகவுள்ள அரசாங்கத்தின் வர்க்கச் சார்புடைய நடவடிக்கையே. 

வேலை நேரமும் உபரி மதிப்பும்

தொழிலாளி ஒருநாளில் கட்டாயம் உழைக்க வேண்டிய நேரமே ஒரு வேலைநாள் எனப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வேலை நாளான எட்டு மணி நேரத்தில் தொழிலாளி செலுத்தும் உழைப்பே முதலாளியிடம் அவர் விற்கும் உழைப்பு சக்தியாகும். இந்த  உழைப்பு சக்தியை விற்றுத்தான் தொழிலாளி முத லாளியிடம் தனக்கான கூலியை பெறுகிறார். தொழி லாளி பெறுகிற கூலிக்கு நிகரான உழைப்பை அவர்  தனது முதல் ஐந்து மணி நேரத்திலேயே கொடுத்து விடுகிறார் எனில், அதை சமூக அவசிய உழைப்பு நேரம் என்கிறார் மார்க்ஸ். அதற்குப் பிறகு அவர் செலுத்தும் அடுத்த மூன்று மணிநேர உழைப்பு என்பது உபரி உழைப்பு என்றும், இந்த உபரி உழைப்பு நேரத்தில் கிடைக்கும் மதிப்பையே உபரி  மதிப்பு எனவும், அதுவே முதலாளிகளுக்கு லாபமாக மாறுகிறது என்றும் மார்க்ஸ் விளக்கினார்.

இந்த வேலை நாளை 12 மணி நேரமாக மாற்றும்போது தொழிலாளர்களின் உழைப்பு மேலும் நான்கு மணிநேரம் கூடுதலாக சுரண்டப்படுகிறது. முன்பு மூன்று மணி நேரமாக இருந்த சுரண்டலின் அளவு தற்போது ஏழு மணி நேரமாக உயர்கிறது. அதன் மூலம் முதலாளிக்கு உபரி மதிப்பு மேலும் அதிகரித்து அதன் விளைவாக லாபம் கூடுதலாகிறது. எட்டு மணி நேரமாகவுள்ள ஒரு வேலைநாளை, பன்னிரண்டு மணி நேரமாக உயர்த்துவதற்கான ஏற் பாடுகள் எல்லாம் முதலாளியின் லாபத்தை உயர்த்தும் நோக்கம் கொண்டதேயாகும். ஏனெனில், முதலாளிகளுக்கான கூடுதல் லாபம் தொழிலாளியின் கூடுதல் உழைப்பு நேரத்திலிருந்து மட்டுமே கிடைக் கிறது. வேலை நேரத்தை குறைப்பதும், கூலி உயர்வும் சுரண்டலின் அளவைக் குறைக்கிறது. அதுவே, வேலை நேரம் உயர்த்துவதும், கூலி குறைப்பதும் சுரண்டலின் அளவை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளாகும்.

ஆனந்தமான கூட்டு உழைப்பு

நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி கிடைப்பதோடு, உற்பத்திக்கு செலுத்தப்படவேண்டிய மனித ஆற்றலும் குறைந்துள்ளது. எனில், இந்த உண்மை யான நிலவரப்படி வேலை நேரத்தை உயர்த்து வதற்கு மாறாக வேலை நேரத்தைக் குறைப்பதே முறையாகும். தற்போது எட்டு மணி நேரத்திற்கு ஒரு ஷிஃப்ட் என மூன்று ஷிஃப்ட் போடப்படுகிறது. வேலை நேரம் பன்னிரண்டு மணி நேரமாக உயர்ந்தால் இரண்டு ஷிஃப்ட் மட்டுமே போடப்படும். வேலை இழப்பு அதிகமாகும். அதுவே, வேலைநேரத்தைக் ஆறு மணி நேரமாக குறைத்தால் ஒரு நாளைக்கு நான்கு ஷிஃப்ட் போட முடியும். இதன்மூலம் தற்போது உள்ள உற்பத்தி சூழ்நிலையிலேயே, புதிதாக 33 சதம் வேலைவாய்ப்பு உயரும், இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பும் பெருகும். தொழி லாளர்கள் மீது நிகழ்த்தப்படும் உழைப்புச் சுரண்ட லின் அளவு குறையும். இதனால் நஷ்டம் ஏற்படும் என்று வாதிடக்கூடும். அப்படியான வாதம் அதீத லாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட முதலாளித்துவ கணக்காகும். 33 சதம் வேலைவாய்ப்பு உயரும்போது, ஆற்றல் மிகுந்த இளம் உழைப்பாளிகளின் மூலம் உற்பத்தி உயரும், அவர்கள் பெறும் சம்பளம் தேவையான பொருட்களை வாங்கிட சந்தைக்குத்தான் வரும். அதன் மூலம் சந்தையில் கிராக்கி உயரும்.கிராக்கி,  உற்பத்தியை உயர்த்தும். உற்பத்தியில் ஏற்படும் உயர்வு லாபத்தைத்தான் தரும். மக்களின் வாங்கும் சக்தி உயரும்போது சந்தையில் பொருட்களும் தேங்கப்போவதில்லை, பொருளாதார நெருக்கடியும் வரப்போவதில்லை. 

மனிதர்கள் எந்திரங்கள் அல்ல. எந்திரங்களின் வேலை நேரத்தை குறைத்தால் உற்பத்தி குறையும். ஆனால் மனிதனின் வேலைநேரத்தைக் குறைத்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் கிடைக்கப்பெறும் ஆற்றல் நிறைந்த உழைப்பின் மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கும். மேலும் அவர்களின் சமூக உறவுகள் மேம்படும். ஜப்பானில் மக்கள் தொகை கடுமையாக குறைந்து வருவது இதையே உணர்த்துகிறது. மேலை நாடுகள் பலவற்றில் மேற்கொண்ட ஆய்வும் இதையே வலியுறுத்துகிறது. ஆகவேதான், மேலை நாடுகளில் வார வேலைநாட்கள் ஐந்தாக குறைக்கப்படுவதும், வேலை நேரத்தை ஆறு அல்லது ஏழு மணிநேரமாகக் குறைப்பதும் நடக்கிறது. வேலை நேரத்தை அதிகரிப்பது கூலி அடிமை முறையை கொத்தடிமை நிலைக்கு தள்ளுவதாகும். கூலி உயர்வுக்கான போராட்டமும், வேலை நேரத்தை குறைப்பதற்கான குரல்களும், போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாப்பதும் தொழி லாளர்களின் இப்போதைய கடமையாக உள்ளது. ‘உழைக்க விரும்பும் கரமும், அதற்குத் தயா ராகவுள்ள மூளையும் ஆனந்தமான இதயத்தோடு பாடுபடுகிற கூட்டு உழைப்பு’ என்று மார்க்ஸ் கூறிய புதிய சமூகத்தைப் படைப்பதே ஒன்றுபட்ட உழைக்கும் மக்களின் மேதின லட்சியமாகும்.

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) தென்சென்னை 
மாவட்ட செயற்குழு உறுப்பினர்.