articles

img

ஐக்கிய ஜனதாதளம், தெலுங்குதேசம் கட்சிகளுக்கு இறுதி எச்சரிக்கை!

பாஜக தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளின் வலிமையை கையகப்படுத்துகிறது. அதே நேரத்தில் தன் பலவீனங்களை அவர்கள் தலை மீது ஏற்றி அவர்களை காலி செய்து விடுகிறது. அதன் ஆலிங்கனம் பெரும்பாலும் மரணத்  தழுவலாகவே பார்க்கப்படுகிறது.  மிஞ்சுவது ஒரு கேள்விதான்!  ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேசமும் பாஜகவின் கொடிய மரணத் தழுவல்களிலிருந்து தப்பி பிழைக்க முடியுமா?

பாஜக தன்னோடு கூட்டணி வைக்கும் கட்சிகளின் பலத்தை கைப்பற்றி அதனுடைய பலவீனத்தை அவர்களுக்கு மாற்றி விடுகிறது. இந்த முறையில்  பாஜக ஒரு அரசியல் அதிர்ஷ்டத்தை அறுவடை செய்கி றது. அதே நேரத்தில் கூட்டணியின் பங்காளிகளுக்கு இழப்பு மட்டுமே மிஞ்சுகிறது. கடந்த 30 ஆண்டுக ளாக பாஜகவுடன் இணைந்த கட்சிகளின் அரசியல் செல்வாக்கில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

சிவசேனா மற்றும்  சிரோமணி அகாலி தளம்

பாஜகவின் ஆரம்ப கால கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, சிரோமணி அகாலி தளம் ஆகிய இரு கட்சிகளின் இன்றைய நிலை என்ன? 1996 இல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் பொழுது சிவசேனா - 15, சிரோமணி அகாலிதளம்-8 இடங்க ளோடு அதை ஆதரித்த பங்காளிகள், வேறு யாரையும் பாஜகவால் அப்பொழுது ஈர்க்க  முடியவில்லை. புதிய அரசியல் கூட்டணி  எச்.டி.தேவகவுடா தலைமை யில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைக்க வழி வகுத்தன. 1984 நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனையும் பாஜகவும் கூட்டுச் சேர்ந்தன. இந்த கூட்டணி 1989இல் இந்துத்துவா ஆதரவு என்ற தளத்தில் உறுதி செய்யப் பட்டது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், அசாம்

1992 இல் பாபர் மசூதி இடிப்பு, 92-93இல்  மும்பை கலவரம் ஆகியவை மகாராஷ்டிராவில் முதல் சிவசேனா- பாஜக அரசாங்கத்திற்கு வழிவகுத்தது. சேனாவின் மனோகர் ஜோஷி முதல்வரானார். மகாராஷ்டி ராவில் சிவசேனா களமிறங்கும் என்பதும் தேசிய அளவில் அரசியல் பாதையை பாஜக தீர்மானிக்கும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சூத்திரம். விரை வில் பாஜகவின் பேராசை அதிகமானது. தனக்கு 2014 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை கேட்டது. அரசியல் சமன்பாட்டை இது மாற்றியது. மாநிலத்தில் முதலிடத்தை பாஜகவிற்கு சிவசேனா கொடுக்க மறுத்தது. இதனால்  கூட்டணி முறிந்தது. பாஜக ஆட்சி அமைத்தது; சிவசேனாவின் செல்வாக்கு சரிந்தது. 2019-இல் என்சிபி மற்றும் காங்கிரசுடன் தேர்த லுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சியை சிவசேனா அமைத்த போது பாஜக (என்சிபி மற்றும் சிவசேனா)  இரண்டு கட்சிகளையும் உடைத்தது. அவருடைய சின்னங்கள் தடை செய்யப்பட்டது. பிரபல தொலைக் காட்சி ஊடகங்கள் பயன்படுத்தும் “ஆபரேஷன் தாமரை” உண்மையில் மற்ற கட்சிகளிடமிருந்து வலி மையை பாஜகவிற்கு மாற்றுவதைக் குறிப்பதாகும்.

விவசாயிகளுக்கு துரோகம்

1996 ஆம் ஆண்டு முதல் பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம் உறுப்பினராக இருந்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு இந்தக் கூட்டணி பஞ்சாபில் ஆட்சிக்கு வந்தது. 2012-இல் மீண்டும் ஆட்சி அமைத்தது; அதிருப்தி காரணியை (Anti incumbency) முறியடித்த வரலாற்றையும் உருவாக்கியது. ஆனால், விவசாயி களின் உற்ற நண்பன், ஆதரவுக் குரலாக ஒலிப்பவன் என தன்னை அறிவித்துக் கொள்ளும் அந்த கட்சியைக் கூட சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் அறிமுகப் படுத்துவதற்கு முன்னால் பாஜக கலந்தாலோ சிக்கவில்லை. இந்த கூட்டணி 2020இல் உடைந்தது. 2022 மாநில தேர்தலில் 117 இடங்களைக் கொண்ட  சட்டமன்றத்தில் வெறும் மூன்று இடங்கள் மட்டுமே கிடைத்தன. விவசாயிகளுக்கு செய்த துரோ கத்திற்கு தக்க பலன் கிடைத்தது. ஆம் ஆத்மி ஆட்சி  அமைத்தது பிறகு 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தை பெற்றது. சிரோமணி அகாலி தளம்- பாஜக மோசமான கூட்டணியால்  ஏற்பட்ட வெற்றிடத்தை ஆம் ஆத்மி நிரப்பியது.

அசாம் கண பரிஷத்தின் கதை!

கூட்டணி-முறிவு என மாறி மாறி பாஜகவோடு அரசியல் உறவு கொண்டது அசாம் கணபரிஷத்தின் வரலாறு. ஏஜிபியின் முக்கிய தலைவர்களில் ஒரு வரான சர்பானந்த சோனாவால் பாஜகவில் ஐக்கிய மானார். முதலமைச்சர் பதவி அதற்கு விலையானது.அவர் இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அமைச்சர் அவையில் ஒரு அங்கமாக உள்ளார். கூட்டணி உருவானபோது முக்கிய அங்கம் வகித்த ஏஜிபி  20 ஆண்டுகளுக்குள்  தன் அந்தஸ்தை இழந்தது. பாஜக அந்த இடத்தை கைப்பற்றியது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அசாமில் உள்ள 14 இடங்களில் பாஜக 9 இடங்களையும் ஏஜிபி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதர பிராந்திய கட்சிகளின் வரலாறு? பிஜூ ஜனதா தளம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி, அதிமுக போன்ற பிராந்திய கட்சிகளை  பொறுத்தவரை பாஜகவிற்கு  எண்ணிக்கை அளவில் ஆதரவை தந்தவை. பாகுபாடுகள் நிறைந்த பல சட்டங்களை நிறைவேற்ற இந்த ஏற்பாடு பாஜகவிற்கு கை கொடுத்தது. பெரும்பாலும் கூட்டாட்சியை ஊனப் படுத்துவதற்கு இத்தகைய சட்டங்கள் பாஜக விற்கு உதவின. பாஜக தனது சொந்தப் பெரும் பான்மையிலேயே கூட இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடிந்தது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இருப்பினும் மாநிலங்களவையில் அதற்கு போதிய எண்ணிக்கை இல்லாததால் அங்கே  அந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு இந்த  பிராந்திய கட்சிகள் பாஜகவிற்கு முட்டுக் கொடுத்தன. இந்தக் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன, பாஜக அவற்றை எப்படி நடத்துகிறது? “ட்ரபீஸ்” சாகச விளையாட்டுகளில் (அந்தரத்தில் தொங்கும்) திறமை உடைய ஐக்கிய ஜனதா தளம்  தவிர இதர பிராந்திய கட்சிகளை இன்று  கிள்ளுக்கீரை அளவுக்கு கூட மதிப்பதில்லை. ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 இடங்களில் பாஜக இருபதை பெற்றுள்ளது. பிஜேடி க்கு ஒரு இடம் கூட இல்லை. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 இல் பாஜகவிற்கு 8  இடங்கள். பி ஆர் எஸ் க்கு பூஜ்யம் தான். ஆந்திராவில் உள்ள 25 இடங்களில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தெலுங்கு தேசம் 16 பாஜக 3 மற்றும் ஜனசேனா கட்சி 2) 21 இடங்க ளில் வெற்றி பெற்றுள்ளது. ஒய் எஸ் ஆர் சி பி  நான்கு இடங்களாக குறைந்துள்ளது.

அதிமுகவின் ஆட்டம் “குளோஸ்”

தமிழகத்தில் அதிமுக மூன்று அணிகளாக உடைந்துள்ளது. இபிஎஸ் அணிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் மற்றும் தேர்தல் சின்னம் உள்ள நிலை யில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தலைமையி லான இரு அணிகளும் தென் தமிழகத்தில்  அதிமுக வின் அதிகாரப்பூர்வ அணிக்கு கடும் சவாலாக உள்ளன. மத்தியில் அதிகாரக் குவியலுக்கு வழி வகுக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டங்களை நிறைவேற்ற ஓடிச்சென்று ஆதரவு அளித்த போதும் கூட இந்த மூன்று அணிகளும் கேட்பாரற்று   வெறுமையாக இங்கே கிடக்கின்றன என்பதை உண்மை. பிஜேடி, பி ஆர் எஸ், ஒய் எஸ் ஆர் சி பி மற்றும் அதிமுக கட்சிகள் பாஜகவுடன் பல நேரங்களில் அரசியல் பேரம் நடத்தியதற்கு பரிசாக அந்தந்த மாநிலங்களில் தங்களின் அந்தஸ்தை இழந்து நிற்கின்றனர்.

துடைத்தெறியப்பட்ட பிடிபி

மேலும் ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவிதி ஒரு வேதனை மிக்க கதை. சட்டப்பிரிவு 370 ரத்து செய்வதற்கு சில மாதங்கள் முன்பு வரை பாஜகவுடன் அதிகாரத்தை ருசித்த அந்த கட்சி  இப்போது நாடாளுமன்றத்தில் ஒரு இடம் கூட இல்லாமல் துடைத்தெறியப்பட்டது. பாஜக தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளின் வலிமையை கையகப்படுத்துகிறது.அதே நேரத்தில் தன் பலவீனங்களை அவர்கள் தலை மீது ஏற்றி அவர்களை காலி செய்து விடுகிறது. அதன் ஆலிங்க னம் பெரும்பாலும் மரணத் தழுவலாகவே பார்க்கப்படுகிறது. மிஞ்சுவது ஒரு கேள்விதான்! ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேசமும் பாஜகவின் கொடிய மரணத் தழுவல்களிலிருந்து தப்பி பிழைக்க முடியுமா?

கட்டுரையாளர் : ஆசிரியர்.
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். 
தி இந்து, ஆங்கிலம் (21.6.24) 
தமிழில் : கடலூர் சுகுமாரன்

 

;