articles

img

வீட்டுமனை இல்லாமல் துயருறும் மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டாமா? - எம்.சின்னதுரை எம்எல்ஏ.,

தமிழ்நாட்டில் வீடற்றவர்களே இருக்கக் கூடாது என்ற லட்சியத்தோடு இலவசமாக வீட்டுமனையும், இலவச வீடும் கட்டிக் கொடுத்து ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசின் கொள்கை முடிவாக இருந்து வருகிறது. இதற்காகவே அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதல் கட்ட மாக குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்கு வதும், இரண்டாம் கட்டமாக ஓலை, ஓடு போன்ற நிலையற்ற தன்மை கொண்ட வீடுகளில் வசிப் போருக்கு காங்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுப்பதும் எனத் திட்டங்கள் வகுக்கப்பட்டது. இதற்காக நிலைத்தன்மையற்ற வீடுகள், மனிதன் வாழத் தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை சார்ந்த விபரங்க ளை தமிழக அரசு கணக்கெடுப்பு செய்து வரு கிறது. இந்தப் பணிகளை நிறைவு செய்வதற்கு முன்பாக திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறை வேறுவதற்கு அரசு சில முக்கியமான அம்சங் களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வதைபட்டுக் கிடப்பவர்கள்

இலவசமாக வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் பயனாளிகள் பெயரில் மனைப்பட்டா இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒன்றிய, மாநில அரசு களின் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பிக் கவே முடியும். தமிழ்நாட்டில் பல லட்சம் குடும்பங்க ளுக்கு இன்னமும் வீட்டுமனை இல்லை. பல்வேறு வகையான புறம்போக்குகளிலும், வாடகை வீடுக ளிலும் குடியிருந்து வருகின்றனர். இவர்கள்தான் அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டைகளாக வாழ்க்கையில் வதைபட்டுக் கிடப்பவர்கள். பொதுவாக நத்தம் புறம்போக்குகளில் குடி யிருப்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் பெரிய தொல் லைகள் வருவதில்லை. ஒருகட்டத்தில் அவர்க ளுக்கு பட்டாக்கூட கிடைத்துவிடுகிறது. முன்விரோ தங்களால் புகார் கொடுக்கப்படும் இடங்களில் மட்டும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அதிகாரிகளின் தொந்தரவு இருப்பதைப் பார்க்க முடிகிறது. பொதுவாக குளம், வரத்துவாரி போன்ற நீர் நிலைப் புறம்போக்கு, கல்லாங்குத்துப் புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு என்பன போன்ற பல்வேறு வகையான புறம்போக்குகளிலும் ஏழை மக்கள் வசித்து வருகின்றனர். கோவில், மடங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் ஏழைகள் வசித்து வருகின்றனர்.

வசிப்பவர் வேறு; வளைப்பவர் வேறு!

வேறு வழியில்லாமல் புறம்போக்குகளில் வசித்துவரும் ஏழைகளுக்கும், புறம்போக்குகளை வளைத்துப்போட்டு சொத்துக்களைக் குவிப்ப வர்களுக்குமான வித்தியாசத்தை அரசும், அதிகா ரிகளும் தரம்பிரித்துப் பார்க்க வேண்டும். இந்த இடத்தில்தான் பெரும் குளறுபடிகளும் மோசடிக ளும் காலம்காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. அரசு சொத்தை ஆக்கிரமித்து கொள்ளையடிக்கும் கூட்டத்தை கண்டுகொள்ளாமலும், புறம்போக்கில் குடியிருந்து வரும் ஏழை மக்களை குற்றவாளி களைப் போல நடத்துவதும் பெரும் வேதனையா கத்  தொடர்கின்றன. பொதுவாக புறம்போக்குகள் வகைப்படுத்தப் பட்ட காலத்திற்கும் தற்பொழுது அவற்றின் தன்மை க்குமான வித்தியாசம் பெருமளவில் உள்ளது. நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நகர்மயமாதலால் பலவகையான புறம்போக்கு நிலங்கள் அவற்றின் தன்மையை இழந்து நிற்கின்றன. இத்தகைய இடங்களில் வசித்துவரும் ஏழை மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதும், அரசு நிலங்களை கபளீகரம் செய்து பெரும் கட்டிடங்க ளை எழுப்பி குவிக்கப்பட்ட சொத்துக்களை அரசு டமை ஆக்குவதும்தான் ஒரு மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும். இதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் தொடர்ச்சியாக குரல் எழுப்பியும் போராடியும் வருகின்றன.

வகை மாற்றம் செய்திடுக!

கிராம நத்தமாக ஒதுக்கப்பட்ட நிலங்களில் வருவாய் நிலை ஆணை எண் 21-இன் கீழ் மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றா லும், மக்களின் தேவைக்கு ஏற்ப நத்தம் நிலங்கள் பெரும்பகுதியான கிராமங்களில் இல்லை யென்பதே உண்மை. ஆட்சேபகரமற்ற அரசுப் புறம்போக்கு நிலங்களை கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய, வருவாய்க் கோட்ட அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு, வருவாய் நிலை ஆணை எண்.21(6)-ன் கீழ் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தகுதியுள்ள வீடில்லா ஏழைகளுக்கு வீட்டுமனைகள் ஒப்படை செய்யப்பட வேண்டும். வனம், மேய்ச்சல், காடு, கோவில் மற்றும் நீர்நிலைப் புறம்போக்குகள் போன்ற பிற நிலங்களின் தற்போதைய நிலையை ஆய்வுகள் செய்து வகை மாற்றம் செய்து ஏழைக ளின் வீட்டுமனைகளுக்காக ஒப்படை செய்யப்பட வேண்டும். வீட்டுமனை ஒப்படையைப் பொறுத்த வரை யில், கிராமப்புறங்களில், ஆண்டு வருமானம் ரூ.30,000-க்குக் குறைவாகவும், நகர்ப்புறங்க ளில் ரூ.50,000-க்குக் குறைவாகவும் உள்ள வீடில்லா ஏழைக் குடும்பத்தினர் இலவசமாக வீட்டு மனை பெறத் தகுதியுடையவர்கள். பொருத்தமற்ற இந்த வருமான வரம்பை உயர்த்த வேண்டும். வீடற்ற ஏழைகள் அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்குவதற்கான வழிகள் அனைத்தையும் அரசு சிந்திக்க வேண்டும். வீட்டுமனைப் பட்டாக்களை குடும்பத்தின் பெண் உறுப்பினர் பெயரில் ஒப் படை செய்யலாம். தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, கிராமங்களில் மூன்று சென்ட், நகராட்சி எல்லைக்குள் ஒன்றரை சென்ட், மாநகராட்சி எல்லைக்குள் ஒரு சென்ட் என்ற அள வில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனை கள் ஒப்படை செய்யப்பட வேண்டிய கட்டாயத் தேவையை பாராமுகமாக கடந்து செல்ல முடியாது. கூடாது.

பகல் கனவா?

அரசாணை (நிலை) எண்.248, வருவாய்த் துறை, நாள்.28.07.2009-இன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் பல்வேறு அலுவலர்களுக்கு, வீட்டுமனை ஒப்படை செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகார வரம்பை உயர்த்த வேண்டும். அப்போதுதான் குடி மனைப் பட்டா பிரச்சனைக்கு மாவட்ட அளவில் தீர்வு  காண்பதற்கு வாய்ப்பு ஏற்படும். நிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை முறைப்படுத்தும் பொருட்கள் வருவாய் வாரியத்தால் எட்ட முடிய வில்லை என கருதி 1980 ஆம் ஆண்டு நில நிர்வாக ஆணையரகம் உருவாக்கப்பட்டது. 43 ஆண்டுகள் கடந்து ஓடிய பின்பும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா என்பது பகல் கனவாகவே கடந்து போகிறது.

குடிமனைப் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அரசு நிலங்களை மக்களின் தேவை கள், பயன்பாடுகளை ஆய்ந்து சீரமைத்திட மாநில அரசு கவனப்படுத்த வேண்டும். ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு பயன்பாட்டின் தேவை அறிந்து நிலத்தினை வகை மாற்றம் செய்தல், வரன்முறை படுத்துதல் முக்கியமான கட மையாகும். வருவாய் நிலை ஆணை எண் 21-ன் விதியின் கீழ் காலி நத்தம் இல்லாத நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் வருவாய் நிலையாணை எண் 21 (6) இன் கீழ் பல்வேறு வகையான ஆட்சேபனைகளற்ற அரசு புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்து வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பட்டியல், பழங்குடி மற்றும் நரிக்குறவர் போன்ற விளிம்பு நிலை சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கு வதில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.  இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடும், மனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச மனைப் பட்டாவும் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வகோட்டையில் இன்று (30.5.2023) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.