சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு 2022 அக்டோபர் மாதம் 16 முதல் 22 வரை நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் ஜி ஜின்பிங், மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய் யப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு துவங்குவதற்கு முன்பாகவும் மாநாடு முடிந்த பின்னரும் அதுபற்றி உலக அளவில் விவாதங்கள் நடந்துள்ளன. மாநாடு நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்ன தாக, ஆகஸ்ட் 23 அன்று “20 ஆவது கட்சி மாநாட்டை நோக்கி” என்கிற தலைப்பில் இந்திய முன்னாள் பாது காப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் தி இந்து ஆங்கில நாளேட்டில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் மிகவும் இக்கட்டான சூழலில் இம்மாநாடு நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது; கட்சி மற்றும் ஆட்சியில் தனது இறுக்கமான முழு கட்டுப்பாட்டை கொண்டுள்ளதால் ஜி ஜின்பிங் மூன்றா வது முறையாக எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் தனது பொறுப்புக்களுக்கு மீண்டும் தேர்வு செய்யப்படு வார் என்று எழுதியிருந்தார்.அவர் தேர்வு செய்யப்படுவ தில் உள்ள சாதக பாதகங்களையும் அதில் விவ ரித்திருந்தார்.
அவதூறுகளும் வதந்திகளும்
கொரோனா காலத்திலிருந்து, வெளிநாடுகளுக்கு சென்று வரும் யாராக இருந்தாலும் தனிமைப் படுத்தலுக்கு பிறகே பொதுவெளிக்கு வரவேண்டும் என்பது தற்போதும் சீனாவில் அமலில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் உஸ்பெகிஸ்தானிற்கு சென்று வந்த ஜி ஜின்பிங் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். உடனே, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், வீட்டு சிறை யில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் சீனா வந்துள்ளது என்றும் உலக முதலா ளித்துவ - சமூக ஊடகங்களில் தீவிரமாக வதந்தி பரப்பப்பட்டது. தமிழக ஊடகங்கள் சிலவும் இச்செய்தி யை தங்களின் வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர். இது ஏகாதிபத்தியங்களின் விருப்பம் என்கிறபோதும் சீனாவின் நிலைமை வேறாக உள்ளது. அமெரிக்க அரசோ, ஐ.நா வோ வெளியிடும் செய்திகளைத் தவிர இதர எந்த செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் சீனா பதில் அளிப்பதில்லை; சீனாவில் இத்தகைய செய்தி எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று சீனா வில் பணியாற்றியவரான மு.ராமநாதன் “இந்து தமிழ்” நாளிதழில் எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியி ருந்தார்.
மாநாட்டில் ஜி ஜின்பிங், மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் ‘அதீத அதி காரம் அவர் கையில் குவிந்துள்ளது’ என்று எழுதப்படு கிறது. சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலை யில் மாநாட்டின் இடையில் அவர் அரங்கத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வாக்கெடுப்பின்போது அவர் மீண்டும் மாநாட்டில் பங்கேற்றார். ஆனால், மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பொதுச் செயலாளரா வதை எதிர்த்ததால் அவர் அரங்கத்திலிருந்து அகற்றப் பட்டார் என்றெல்லாம் பொய்ச் செய்திகள் உலா வந்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை முதலாளித்துவ ஊடகங்கள் இவ்வளவுக்கு விவாதிக்க வேண்டிய தேவையை சீனாவின் வளர்ச்சியும் உலக அளவில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கமுமே உருவாக்கியுள் ளது. சீனாவின் வளர்ச்சியும் அதன் ஆட்சி நிர்வா கத்தின் ஸ்திரத்தன்மையும் உலக ஏகாதிபத்தியங்க ளை அச்சமுற செய்துள்ளது.
சோசலிச மாடல் சந்தைப் பொருளாதாரம்
மக்களை முதன்மையாக கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அர்ப்பணிப்பு நிறைந்த, ஆற்றல் மிகுந்த பங்களிப்பே சீனாவின் இத்தகைய வியத்தகு வளர்ச்சி க்கு அடித்தளமாகும். சீனா பின்பற்றும் பொருளாதா ரக் கொள்கைகள் குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் உலக முற்போக்கு இயக்கங்கள் மத்தியிலும் நிலவுகிறது. “திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை என்பதற்கு மாறாக சந்தைப் பொருளாதா ரத்தை சீனா கைக்கொண்டுள்ளது; சந்தைப் பொருளா தாரம் என்பது முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை என்பதாக இருக்கும்போது ஒரு சோசலிச நாடு அதை கைக்கொள்ளலாமா?; இது பல சீர்கேடு களுக்கு வழிவகுக்கும்” என்ற விமர்சனம் நிலவு வதும் உண்மையே. ஆனால், நாங்கள் அமலாக்குவது முதலாளித்துவ மாதிரியிலான சந்தைப் பொருளாதாரம் அல்ல. சோசலிச மாதிரியிலான சந்தைப் பொருளாதாரம் என்கிறது சீனா. அதற்கான உதாரணங்களும் இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்க ளின் பட்டியலை 2020 –ஆம் ஆண்டு ஃபார்சூன் இதழ் தொகுத்தது. அதில் 124 நிறுவனங்கள் சீன நாட்டின் நிறு வனங்களாகும். அந்த 124 நிறுவனங்களில் 95 நிறுவ னங்கள் சீன அரசு நிறுவனங்களாகும். மேலும் உலகின் முதல் ஐந்து மிகப்பெரிய நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் சீன அரசு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
அனுபவங்கள் தந்த பாடம்
இத்தகைய புதிய பொருளாதார வழிமுறையை சீனா கைக்கொண்டது என்பதற்கு ஒரு நெடிய அனுப வப் பாடம் உள்ளது. 1949 இல் நடைபெற்ற சீனப் புரட்சிக்குப் பிறகான மாவோ காலம் முதல் 1978 இல் டெங் சியோ பிங் காலம் தொடங்குவது வரை, திட்ட மிட்ட பொருளாதாரத்தையே சீனா அமலாக்கி வந்தது. மிகவும் பின்தங்கிய உற்பத்தி சக்திகளைக் கொண்ட சீனாவில், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட திட்ட மிட்ட பொருளாதாரத்தைக் கொண்டு மக்களின் தேவை களை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. மாவோ காலத்தில் நிலக்குவியல்கள் தகர்க்கப்பட்டு மறு விநி யோகம் செய்யப்பட்டது. 90 சதவீதம் விவசாயிகளுக்கு நிலம் கிடைத்தது. கல்வி மற்றும் சுகாதாரத்திற் கான அடிப்படைக் கட்டமைப்பை அரசு செய்தது. அதே நேரம் “மக்களின் தேவைகளுக்கும் பின்தங்கிய உற் பத்தி சக்திகளுக்கும் இடையே நிலவும் பொருத்தமற்ற போக்கு பெரிய அளவிலான முரண்பாட்டை உருவாக்கி விடும். சோசலிச அமைப்பு முறைக்கே இது அச்சு றுத்தலை ஏற்படுத்திவிடும்” என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி 1980 களில் தனது அனுபவத்தின் அடிப்படையில் முடிவு செய்தது. உற்பத்தியை பெருக்குவதற்கான வழிவகைகளை செய்யாமல் மக்களின் தேவைகளை ஈடு செய்ய முடியாது. சோசலிசம் என்பது வெறும் உணர்வல்ல. அது செயல்முறைப்படுத்தவேண்டிய பணியாகும். உலக நிலைமைகளையும் உள்ளூர் தேவைகளை யும் கொள்கை உறுதிப்பாட்டையும் ஒரு புள்ளியில் இணைத்து, உற்பத்தியை உயர்த்தும் வகையில் அதன் உள்ளடக்கத்தை மாற்றி அமைப்பது காலத்தின் கட்டாயமாகும். உற்பத்தியை உயர்த்தும் நோக்கு டனே உற்பத்தி சக்திகளை நவீனமயமாக்கும் வழி முறைகளை சீனா முன்னெடுத்தது. “முப்பது ஆண்டு களாக சோசலிசத்தை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இருந்தபோதும் நமது நாட்டின் பெரும் பாலான கிராமப் பகுதிகள் வறுமையில் மூழ்கி இருந்தன. இதனை சோஷலிசத்தின் மேன்மை என்று குறிப்பிட முடியுமா? எனவேதான் நமது வேலையின் குவிமையம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி திருப்பப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி னேன்” என்றார் டெங் சியோ பிங்.
புதிய பாதையின் பலன்
இந்த வரிகளின் வெளிப்பாடுதான் இன்றைய சீனா எனலாம். “2021 பிப்ரவரி 25 அன்று சீன அரசு, 140 கோடி மக்கள் தொகைக் கொண்ட நாடான சீனாவில் மிகக் கடுமையான வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது என அறிவித்தது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி, 1949 –இல் சீனப் புரட்சியுடன் துவங்கி எழுபது ஆண்டுகளாக நடந்துவந்த செயல்முறையின் உச்ச நிலையாகும். சராசரி உயிர் வாழும் வயது 78 ஆக உள்ளது. உலகிலேயே சமூக பாதுகாப்புடன் கூடிய சுகாதாரக் கட்டமைப்பு சீனாவில் உள்ளது. சுமார் ஒரு கோடிப் பேருக்கு மேலான முதியோருக்கு காப்பீடும், 95 சதவீதமான மக்களுக்கு மருத்துவக் காப்பீடும் அமலில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுக ளில் கார்பன் வெளியேற்றத்தை 34.4 சதவீதம் குறைத்துள் ளது. 99.8 சதவீதம் ஆரம்பப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 95.3 சதவீதம் பள்ளி களுக்கு இணையதள வசதியும், மல்டி மீடியா வசதி உள்ள வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”
வளர்ச்சிக்கான ஐந்து அம்சங்கள்
“பொருளாதாரக் கொள்கைகள் என்பது மக்களை மையப்படுத்தியவையாக அமைய வேண்டும். 73 ஆண்டு காலத்தில் மக்களின் மகிழ்வை விரிவு படுத்தும் நோக்குடனே சீனாவின் பொருளாதாரக் கொள்கைகள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது” என்று மாநாட்டில் ஜி ஜின்பிங் பேசியுள்ளார். மேலும், புதுப்புது கண்டுபிடிப்புகள், ஒருங்கிணைத்தல், பசுமை, உலக வர்த்தகத்திற்கு திறந்துவிடல் மற்றும் பகிர்ந்த ளித்தல் எனும் ஐந்து அம்சங்களை சீனாவின் வளர்ச்சிக் கான அம்சங்களாக வகுத்துள்ளனர்.
1. சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை சிறப்பாக வளர்த்தெடுக்க புதுப்புது கண்டுபிடிப்புகள் அவசிய மாகிறது. அது தடைபடாமல் முன்னேறும் வகையில் சட்டதிட்டங்களை வகுப்பதும் அவசியம்.
2. வளர்ச்சி எனும்போதும் பசுமைக்கு முக்கியத்து வம் வழங்கப்படும். சுத்தமான குடிநீரும் பசுமை நிறைந்த மலைகளும், தங்கம் மற்றும் வெள்ளி மலைகளுக்கு ஈடானவையாகும் என்று வலி யுறுத்தப்படுகிறது. முதலாளித்துவ நாடுகளைப் போல் அல்லாமல் இங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதே மனிதனுக்கும் இயற்கைக்குமான ஒருங்கிணைப்பிலிருந்து துவங்குகிறது என, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வரையறுக்கிறது. மனிதனின் ஆரோக்கியம், அதைத் தொடர்ந்து பின்னடைவு இல்லாத வளர்ச்சி, அதன்மூலம் தலைமுறைகள் கடந்த முன்னேற்றம் என்பதே சீனக் கட்சியின் பசுமை குறித்த பார்வையாகும்.
3. பிராந்திய ஏற்றத்தாழ்வு மற்றும் நகருக்கும் கிரா மத்திற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வை போக்கும் வகையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது.
4. உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அது முடங்கிடாத வகையில் பொருளாதார பலன்களாக அறுவடை செய்ய உலக அளவிலான வர்த்தகத்தை திறந்துவிடல் அவசியம்.
5. கிடைக்கும் பலன்களைக் கொண்டு மக்களுக்கு மேன்மையான வாழ்வை உத்தரவாதம் செய்வது; வறுமை ஒழிப்பை விரிவுபடுத்துவது, வருமான ஏற்றத்தாழ்வை குறைப்பதில் கவனம் செலுத்து வது- ஆகியவையே அந்த ஐந்து அம்சங்களின் உள்ளடக்கமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கூறப்பட்டுள்ளது.
நவீன சோசலிசத்தை கட்டியமைத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு கட்ட வளர்ச்சித் திட்டத்தை முன்வைத்து செயல்படுகிறது. அதன் முதல் கட்டம், தேசத்தை புத்துணர்வாக்குதலும் முழுமை யாக நவீனப்படுத்தலுமாகும். இதையே 2035 க்குள் சோசலிச நவீனமயமாக்கலை அடைவது என்கிறது. சீனப் புரட்சியின் நூற்றாண்டான 2050க்குள் மிகப் பெரிய நவீன சோசலிச நாடாக வளர்வது என்பதே இரண்டாம் கட்ட வளர்ச்சித் திட்டமாகும். அதை நிறை வேற்றுவதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக வுள்ளது என்கிறது மாநாடு. அதாவது முதலில், நவீன உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பது, அதைக்கொண்டு நவீன சோசலி சத்தைக் கட்டியமைப்பது என்பதாகும். இந்த மாநாடு, அடுத்த மாநாடு நடக்கும் காலத்திற்கு இடைப்பட்ட ஐந்தாண்டுகள் குறித்து மட்டும் பேச வில்லை; மாறாக, அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை விவாதித்துள்ளது என்று சீன இதழ் ஒன்றின் கட்டுரை கூறுகிறது. உண்மையில் இந்த மாநாடு பேசி யுள்ள இலக்குகள், டெங் சியோபிங் காலத்திலிருந்து முன்வைக்கப்பட்ட திட்டம் எனலாம். மாவோ காலம் தொட்ட அனுபவங்கள் மற்றும் படிப்பினைகளிலிருந்து சீனா தனது நீண்டகால திட்டமிடலை டெங் சியோபிங் காலத்தில் வகுத்தது. உலகின் மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டை நவீன சோசலிச பொருளாதார நாடாக மாற்றுவது என்பது ஒரு மிகக்கடுமையான பணியாகும். சீனாவை ஒரு நவீன சோசலிசப் பொருளாதார நாடாக மாற்றுவதற்கு புரட்சி வெற்றி பெற்ற காலத்திலிருந்து குறைந்தபட்சம் நூறு ஆண்டுகள் ஆகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிட்டுள்ளது. இதை “சீனத்தன்மையுடன் சோசலி சத்தை கட்டுவது” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே வரையறுத்துள்ளனர் என்பது கவனிக் கத்தக்கது.
“சோசலிச கட்டுமானத்தின் போது உற்பத்தி சக்தி களை வளர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். படிப்படியாக வறுமையை ஒழிக்க வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரத்தை தொடர்ந்து உயர்த்த வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை என்றால் முதலாளித்துவ அமைப்பு முறையை சோசலி சம் எப்படி வெற்றி கொள்ள முடியும்? உற்பத்தியை பெருக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்காவிட்டால் நாம் எப்படி பொருளாதாரத்தை விரிவுபடுத்த முடியும்? சோசலிசமும், கம்யூனிசமும் பிற அமைப்பு முறைகளைவிட சிறந்தது என்பதை எப்படி உலகுக்கு உணர்த்த முடியும்” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு டெங் சியோபிங் முன்வைத்த விவாதத்தின் அடிப்படைகளைக் கொண்டு, சீனா இன்று வளர்ந்து நிற்கிறது. உழைப்பு சக்தியை வளர்த்து, உற்பத்தியை வெகுவாக சீனா உயர்த்தியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18.5 சதவீத மாகும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா திகழ்கிறது. மற்ற முதலாளித்துவ நாடுக ளைவிட பன்மடங்கு வளர்ந்து நிற்கிறது.
பாதையை மக்கள் தீர்மானிப்பார்கள்
மாநாட்டில் பேசும்போது, எழுபதாண்டுகால அனுபவத்திலிருந்து சீனா தனக்கான, வலுவான சோசலிச ஜனநாயக அரசியல் அமைப்பு முறையை ஏற்று செயல்படுத்தி வருகிறது என்றார் ஜி ஜின்பிங். கடந்த நூறு ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை வெறும் ஐம்பதிலிருந்து 9.5 கோடியாக வளர்ந்துள்ளது. கொரோனா காலத்தில் இளம் கட்சி உறுப்பினர்களின் பணி பாராட்டத் தகுந்த வகையில் அமைந்திருந்தது.
உலக ஏகாதிபத்தியங்கள் சீனாவைச் சிதைத்திட பல்வேறு சூழ்ச்சிகளைக் கையாள்கின்றன. உலக மக்களின் மேன்மைக்காக, உலக மக்களுடன் கைகோர்த்து உழைத்திட சீனா முக்கியப் பங்காற்றும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மாநாடு உறுதியளித்துள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த போது முதலாளித்துவமே மாற்று, வரலாறு முடிந்து விட்டது என்றும் ஏகாதிபத்தியம் கொக்கரித்தது. ஆனால் வறுமை, பசி, பட்டினி, சுற்றுச்சூழல் சீர்கேடு, போர், அமைதியின்மை என கொடூரங்களையே உலக மக்களுக்கு முதலாளித்துவம் வழங்கியது. அதுவே அதன் இயல்பும் ஆகும். பசி, பட்டினி, வறுமை இல்லாத; அமைதி, பசுமை, மனிதம், அனைவருக்கு மான மேன்மையான வாழ்வையே சோசலிச சீனா முன் வைக்கிறது. அதை சாதித்துக் காட்டியும் வருகிறது. “உலகம் எந்தப் பாதையில் பயணிப்பது எனும் நிலைக்கு வரலாறு மீண்டும் ஒருமுறை வந்து நிற்கிறது. அதன் எதிர்காலம் உலக மக்களால் தீர்மானிக்கப் படும்” என்கிறது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு. சோசலிசத்தை கட்டியமைக்கும் அதன் போராட்டத் தின் மூலம் உலகம் பயணிக்க வேண்டிய பாதையை தீர்மானிக்க மக்கள் சீனம் உதாரணம் ஆகட்டும்.
கட்டுரையாளர்: சிபிஐ(எம்) தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்