articles

img

ஒரு கொலைகார அமைப்பின் 75 ஆண்டுகள்!

சி.ஐ.ஏ. (CIA) எனப்படும் அமெரிக்க அயல்தேச உளவு அமைப்பு தனது 75வது ஆண்டை 18.09.2022 அன்று பூர்த்தி செய்துள்ளது. உலகிலேயே மிக அதிக அரசியல் கொலைகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் கைக்கூலி அரசுகளையும்  உருவாக்கிய அமைப்பு சி.ஐ.ஏ. என்பது உல கறிந்த உண்மை. முதலாளித்துவ ஜனநாயக முறை மூலமாகவோ அல்லது மக்களின் பேரா தரவுடன் முற்போக்கு சமூக மாற்றங்கள் மூல மாகவோ அமைந்த பல ஆட்சிகளை கவிழ்த் தது மட்டுமல்ல; அரசியல் தலைவர்களை யும் படுகொலை செய்த நீசத்தனமான ‘பெருமை’ சி.ஐ.ஏ.வை சாரும். உலகை நேரடி யாகவோ அல்லது மறைமுகமாகவோ தன் செல்வாக்கின் கீழ் வைக்க திட்டமிடும் ஒரு முத லாளித்துவ தேசம் எந்த அளவுக்கு தரம்  தாழ்ந்து போகும் என்பதற்கு அமெரிக்காவும் அதன் உளவு அமைப்பும் சாட்சி! இவை  அனைத்தும் அமெரிக்காவின் நலனுக்கு என அந்நாட்டின் மக்கள் நம்பவைக்கப்பட்டனர். 

சி.ஐ.ஏ.வின் நீசத்தனங்கள்

இரண்டாம் உலகப்போர் முடிந்து 2  ஆண்டுகளில் 1947ல் சி.ஐ.ஏ. உருவாக்கப்பட் டது. அமெரிக்க நலனுக்கு எதிராக செயல் படும் இயக்கங்களை அல்லது தலைவர் களை அழிப்பது என்பதுதான் சி.ஐ.ஏ. உரு வாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்.  இதற்கு பின்னர் சி. ஐ.ஏ. அரங்கேற்றிய சில ஆட்சி மாற்றங்கள்:

 1.     கொரிய யுத்தத்தில் சோசலிச சக்தி களுக்கு எதிராக கொரில்லா படை!
 2.     1954-கவுதமாலாவில் முற்போக்காளர் ஜேக்கப்போ அர்பெனெசின் ஆட்சி கவிழ்ப்பு.
 3.     1949- சிரியாவில் ஆட்சி மாற்றம்
 4.     1949-53- அல்பேனியாவில் சோசலிச ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
 5.     1961- சோவியத் யூனியனின் உதவியை கோரிய ஒரே காரணத்துக்காக காங்கோ குடியரசின் பாட்ரிஸ் லுமும்பா ஆட்சி கவிழ்ப்பு/ லுமும்பா படுகொலை.
 6.     1964- பிரேசிலில் இடதுசாரி ஆதரவாளர் ஜோவோ கவுலர்ட் ஆட்சி கவிழ்ப்பு
 7.     1966- கானாவில் வலதுசாரி அரசு உரு வாக்குதல்
 8.  நிகரகுவா - சாண்டினிஸ்டா இடதுசாரி சக்திகளுக்கு எதிராக சதி வேலைகள்
 9.  1971-பொலிவியா- ஜுவான் ஜோஸ் ஆட்சி கவிழ்ப்பு
 10.  1973-இராக்- அப்தல்-கரிம் காசிம் ஆட்சி கவிழ்ப்பு
 11.      1980-89- போலந்து- சோசலிச ஆட்சி கவிழ்ப்பு.
 12.  ஈரான்-இராக் யுத்தம்- இரு தரப்புக்குமே ஆயுதங்கள் வழங்கி ஒருவருக்கொருவர் அழித்து கொள்ள திட்டம்.
 13.      1980-89-ஆப்கானிஸ்தானத்தில் நஜிபுல்லா ஆட்சியை கவிழ்க்க தலிபானாக பரிணமித்த முகாஜிதீன் அமைப்பை உருவாக்கியது- இதன் பல விளைவுகளில் ஒன்றுதான் பின் லேடன்.

இந்த பட்டியல் மிக நீளமானது. இன்று  வரை சிரியா/ ஈரான்/ பாலஸ்தீனம் ஆகிய பகுதி களில் மட்டுமல்ல; லத்தீன் அமெரிக்காவில் வெனிசுலா/ பொலிவியா/ பிரேசில் போன்ற தேசங்களில் இடதுசாரி ஆட்சிகளுக்கு எதி ராகவும் சி.ஐ.ஏ. மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக அரசியல் படுகொலைகள்

கம்யூனிஸ்ட் ஆட்சிகளை கவிழ்ப்பது அல்லது கம்யூனிஸ்டுகளை கொல்வது எனில்  சி.ஐ.ஏ. அமைப்புக்கு அல்வா சாப்பிடுவது போல! சி.ஐ.ஏ. அரங்கேற்றிய சில முக்கிய படுகொலைகள் இங்கே:

இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலை

1960களில் ஆசியாவில், சீனா நீங்கலாக, மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக  விளங்கியது இந்தோனேசியா கம்யூனிஸ்ட் கட்சி. ஜனாதிபதி சுகர்னோ மேலும் மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை களை ஆதரிக்க தொடங்கினார். அமெரிக்கா  எப்படி பொறுத்துக் கொள்ளும்? எனவே சுகார்த்தோ எனும் துரோகி கண்டுபிடிக்கப் பட்டார். ராணுவம் சுகர்னோவுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தூதரகங்கள் ரகசியமாக கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்களின் பட்டியலை தயாரித்தன. சி.ஐ.ஏ. களத்தில் செயல்பட்டது. ராணுவம் சுகர்னோவை கைது  செய்த பின்னர் அரங்கேறிய படுகொலை களில் சுமார் 10 லட்சம் கம்யூனிஸ்டுகளும் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர். இன்று வரை உலக வரலாற்றின் மிக மோசமான படு கொலைகளில் ஒன்றாக இது உள்ளது. 1966ம் ஆண்டு ஆஸ்திரேலிய பிரதமர் ஹரால்டு ஹோல்ட் கீழ்கண்டவாறு கூறினார்: “5 லட்சம் முதல் 10 லட்சம் கம்யூனிஸ்டு களை தீர்த்துக் கட்டியுள்ளோம். இனி  இந்தோனேஷியா ஒரு போதும் கம்யூ னிசத்துக்கு திரும்பாது” நம்புங்கள்! அமெரிக்காவும் ஆஸ்திரே லியாவும் ஜனநாயக நாடுகள்! தனக்கு எதி ராக உருவான இந்த கொலைப் புயலை உணர இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி தவறியது மிக வேதனைக்கு உரியது. மற்ற தேசங்களின் கட்சிகளுக்கு படிப்பினை!

சிலி படுகொலை

1970ம் ஆண்டு மக்களின் ஏகோபித்த ஆத ரவுடன் சோசலிஸ்ட்- கம்யூனிஸ்ட் கூட்ட ணியின் சால்வடார் அலண்டே சிலி நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய ஒவ்வொரு அரசியல் அடியை யும் மிக விழிப்புடன் அலண்டே செயல்படுத்தி னார். சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அமெரிக்க வல்லூறு என்ன செய்யும் என்பது அவ ருக்கு தெரியும். தனது ஆட்சி மார்க்சியக் கொள்கை கொண்டது என பகிரங்கமாக அறிவிக்கவில்லை. சோவியத் யூனியனை வெளிப்படையாக ஆதரிக்கவும் இல்லை. ஆனால் நாட்டின் பல தொழில்களை தேசிய மயமாக்கினார். உழைக்கும் மக்களின் நல னுக்காக திட்டங்களை தீட்டினார். அலண்டேவின் திசை எது என்பது புரியா மலிருக்க அமெரிக்கா என்ன அடிமுட்டாளா? ஜனாதிபதி நிக்சனும் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரும் ஒன்றில் தெளிவாக இருந்தனர். தென் அமெரிக்காவில் இன்னொரு கியூபா உருவாகக் கூடாது. பொறுப்பு சி.ஐ.ஏ.வுக்கு தரப்பட்டது.  1973ம் ஆண்டு அல்ஜெரிஸ் நகரில் நடை பெற்ற அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கீழ்கண்டவாறு கூறினார்: “சிலியின் பிரதமர் அலண்டே இங்கு வர வில்லை. நமக்கு அனைவருக்குமான போராட்டத்தை அவர் சிலியில் நடத்தி கொண்டிருக்கிறார்.” உள்நாட்டில் ஜனநாயகத்தை நசுக்கினா லும் சர்வதேச அரசியலை சரியாகவே சுட்டிக் காட்டினார் இந்திரா காந்தி! இதனை இந்திரா  காந்தி பேசியது செப்டம்பர் 6ம் தேதி! 5 நாட்கள் கழித்து செப்டம்பர் 11ம் தேதி அலண்டே படுகொலை செய்யப்பட்டார். ஆட்சி  கவிழ்க்கப்பட்டது. சிலி கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் லூயிஸ் கார்வலான் கைது  செய்யப்பட்டார். சி.ஐ.ஏ. திட்டம் துல்லிய மாக அரங்கேறியது. கார்வலான் தனது 15வது வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். தன் தேசத்தின் சிறையில் இருந்த ஒரு அரசியல் கைதியை விடுவித்து கார்வலானை விடுதலை செய்ய வைத்தது சோவியத் யூனியன். அலண்டேயின் பேத்தி இன்று சிலி அமைச்சராக உள்ளார். 

கியூபாவுக்கு எதிராக

கியூபாவை சீர்குலைக்க சி.ஐ.ஏ. செய்த சதிகளை எழுதினால் அது மிகப்பெரிய புத்தக மாக அமையும். கற்பனைக்கும் எட்டாத பல சதிகளை சி.ஐ.ஏ. தீட்டியது. கியூபாவுக்கு அரு காமையில் இருக்கும் அமெரிக்க நகரான மியாமியில் இன்றளவும் கியூபா எதிர்ப்பு ராணுவத்திற்கு சி.ஐ.ஏ. பயிற்சி அளித்து வருகிறது. கியூபாவின் மகத்தான தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய 1959  முதல் 1991 வரை 634 முறை சி.ஐ.ஏ. முயற்சி  செய்துள்ளது. ஃபிடல் இறுதி வரை சி.ஐ.ஏ.வுக்கு  சிம்ம சொப்பனமாகவே இருந்தார். மிகச்சமீபத்தில் கோவிட் பிரச்சனையை முன்வைத்து கலகத்தை தூண்டவும் முயற்சி செய்யப்பட்டது. கியூபா மக்கள் இவற்றை முறியடித்துள்ளனர்.

சி.ஐ.ஏ. ஏன் வெல்கிறது?

சி.ஐ.ஏ. தன் நோக்கத்தில் பலமுறை சறுக்கியுள்ளது. ஆனால் பலமுறை வென்றுள்ளது என்பதும் கசப்பான உண்மை. சி.ஐ.ஏ.வின் வெற்றிக்கு சில முக்கிய கார ணங்கள் உண்டு. அதில் முதன்மையானது அந்த அமைப்புக்கு கிடைக்கும் நிதியா தாரங்கள். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா  சுமார் 50 பில்லியன் டாலர்களை (ரூ 4,00,000 கோடி) உளவுத்துறைக்கு ஒதுக்கீடு செய்கிறது. இதில் கணிசமான பகுதி சி.ஐ.ஏ.வுக்கு செல்கிறது. (தமிழ்நாட்டின் ஆண்டு வருவாய் 2,36,000 கோடிதான் என்பதை நினைவில் கொள்க!) இந்த  நிதியின் மூலம் ஏராளமான தொழில்நுட்பங் களைக் கைக்கொள்வது/ அரசியல்வாதி களுக்கு லஞ்சம் தருவது/ ஆயுதங்கள் கொள்முதல் என சி.ஐ.ஏ.வின் நச்சுக் கொடுக்குகள் மிக நீளமானவை.

இன்னொரு முக்கிய காரணம் சி.ஐ.ஏ.வின்  ஆள்பலம். அதன் நேரடி ஊழியர்களைவிட மறைமுக ஊழியர்கள் முக்கியமானவர்கள். ஒவ்வொரு தேசத்திலும் அந்த தேசத்தின்  குடிமக்கள் சிலர் சி.ஐ.ஏ.வின் உளவாளி களாக உருவாக்கப்படுகின்றனர். இவர்கள் தகவல் சேகரிப்பில் மட்டுமல்ல; சிலர் பயிற்சி கள் மூலம் சி.ஐ.ஏ.வுக்காக கை தேர்ந்த கொலையாளிகளாகவும் பரிணமிக்கின்ற னர். இவர்களுக்கு கணிசமான நிதி தரப்படு கிறது.  ஆனால் இவர்கள் பற்றிய எந்த தரவும்  எங்கும் இருப்பது இல்லை. சி.ஐ.ஏ.வின் கைங்கர்யம் இந்தியாவுக்கும் பொருந்தும். இந்திய இடதுசாரிகளுக்கு எதிராகவும் சி.ஐ.ஏ. உள்ளது என்பதை என்பதை நினைவில் நிறுத்துவது அவசியம். சீனா/ ரஷ்யா போன்ற சில தொழில்நுட்ப  தேசங்கள் மட்டும்தான் இத்தகைய உளவாளிகளை கண்டுபிடிக்க முடிகிறது. மற்றுமொரு முக்கிய காரணம் சி.ஐ.ஏ. வசம் உள்ள மிக நவீன தொழில்நுட்பம். அமெரிக்கா  தொழில்நுட்பத்தில் முன்னேறிய தேசம் என்பதால் ஒவ்வொரு புது தொழில்நுட்பத்தையும் சி.ஐ.ஏ. உடனடியாக  பயன்படுத்த முடிகிறது. சில தொழில்நுட்பங் கள் பிரமிக்கத்தக்கவை. உதாரணத்துக்கு அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இணை ந்து “பைன் கேப்” (pine gap) எனும் உளவு  நிறுவனத்தை ஒரு ஆஸ்திரேலிய பாலை வனத்தில் இயக்குகின்றனர். இங்குள்ள தொழில்நுட்பம் மூலம் மற்ற தேசங்களின் தலைவர்கள் தமது இல்லத்திலிருந்து நகர் வதை கூட மதிப்பிட முடியும் என கூறப்படு கிறது.

எதிர்ப்பாளர்களுக்கு மட்டும் புற்று நோய்

சில சமயங்களில் அமெரிக்காவை எதிர்க்கும் லத்தீன் அமெரிக்க தலைவர் களுக்கு மட்டும் ஏன் புற்று நோய் வருகிறது என ரஷ்ய அயல்தேச உளவு அமைப்பின் தலைவர் செர்ஜி நரிஷ்கின் கேள்வி எழுப்பு கிறார். அர்ஜெண்டினாவின் கிரிஸ்னர்/ பராகுவேவின் லுகோ/ பிரேசிலின் லூலா மற்றும் டில்மா ரூஸெப்/ எல்லாவற்றுக்கும் மேலாக “மோதிப்பார்” என  சவால்விட்ட வெனிசுலாவின் சாவேஸ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர்  அராபத் என இந்த பட்டியலை முன் வைக்கிறார் நரிஷ்கின். சி.ஐ.ஏ.வின் கொலை உத்தியை உணர்பவர்கள் இதனை புறம்  தள்ள முடியாது. 1955ம் ஆண்டு சீன பிரதமர் சூ யென் லாய் அவர்கள் பயணித்த விமா னத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்க சி.ஐ.ஏ. முயன்றது. ஆனால் தோல்வி! எனவே அவரை விஷம் வைத்து கொல்ல முயன்றது. எனினும் சீனாவின் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக சி.ஐ.ஏ. பின்வாங்கியது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு  இயக்கத்தை அல்லது தலைவரை இழிவு படுத்துவதற்கு முன்பு அதற்கான “கருத்தை”  மக்களிடையே  சி.ஐ.ஏ. உற்பத்தி செய்கிறது.  அதற்காக வலுவான பிரச்சார சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1950களில் வானொலி எனில் இன்று டிஜிட்டல் தொழில் நுட்பம் பயன்படுகிறது. இதனை மதிப்பிட இந்தோனேஷிய கம்யூனிஸ்டுகள் தவறினர். மிகப்பெரிய விலையை கொடுத்தனர். இதனை கியூபக் கம்யூனிஸ்டுகள் உணர்ந்த னர். கியூபாவில் இன்றுவரை சோசலிசம் பாது காக்கப்பட்டு வருகிறது. சிதைந்து கொண்டிருக்கும் முத லாளித்துவ ஜனநாயகத்தின் மிகப்பெரிய கருப்பு அத்தியாயம் 75 ஆண்டு கால வரலாறு கொண்ட சி.ஐ.ஏ. எனில் மிகை அல்ல!


 


 

;