அப்பொழுது பதிலளித்த அம்பேத்கர் பொது சிவில் சட்டத்தை திணித்து முஸ்லீம் சமூகத்தை போராடத் தூண்ட எந்த அரசும் முயலாது எனவும் அவ்வாறு செய்ய முனையும் அரசு ஒரு பைத்தியக்கார அரசாகவே இருக்க இயலும் எனவும் குறிப்பிட்டார்.
பிரதமர் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் மத்தியப் பிரதேசத்தில் நடந்த பா.ஜ.க. பூத் கமிட்டி ஊழியர்களிடையே பேசும் பொழுது பொது சிவில் சட்டம் உடனடியாக தேவை என முழங்கினார். மறுபுறத்தில் வரைவு திட்டம் எதுவும் முன்வைக்காம லேயே 22ஆவது சட்ட ஆணையம் கருத்துக் கேட்பு அரங்கேற்றுகிறது. ஏன் இந்த திடீர் அவசரம்? ஏனெ னில் 2024 தேர்தல்கள் நெருங்குகின்றன. பொருளாதாரத் தளத்தில் சாதனைகள் என்று சொல்ல எதுவும் இல்லாத காரணத்தால் அடுத்த ஒரே வழி மதப்பிளவுகளை கூர்மைப் படுத்துவதுதான்! அதன் ஒரு பகுதியாக பொது சிவில் சட்டத்தை முன்னெடுக்க முயற்சிகள் செய்யப்படு கின்றன. பொது சிவில் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது எனவும் அம்பேத்கர் அதனை ஆத ரித்தார் எனவும் சங் பரிவாரங்கள் கூறுகின்றன. அது உண்மையா?
பொது சிவில் சட்டம்-சமரசம்
நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பொழுது மூன்று கட்டங்களில் பொது சிவில் சட்டம் விவாதிக்கப்பட்டது. முதலில் “அடிப்படை உரிமைக ளுக்கான உபகுழு”வில் வரைவு திட்டம் உருவாக்கப் பட்ட விவாதத்தில் பொது சிவில் சட்டம் முக்கிய இடத்தை பெற்றது. இந்த குழுவின் தலைவராக ஜே.பி. கிருப ளானியும் மற்ற உறுப்பினர்களாக அண்ணல் அம்பேத் கர்/மவுலானா அபுல் கலாம் ஆசாத்/ கே.எம்.முன்ஷி/ அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்/ ராஜ்குமார் அம்ரீத் கவுர்/ எம்.ஆர். மசானி/ கே.டி ஷா/ ஜெய்ராம் தாஸ் தவுலத் ராம்/ ஹன்சா மேத்தா/ஷங்கர் ராவ் தியோ ஆகியோரும் இருந்தனர். அடிப்படை உரிமைகளை வடிவமைக்கும் பொழுது கீழ்க்கண்ட இரு பிரிவுகளை உருவாக்க இந்த உபகுழு முடிவு செய்தது.
1 உடனடியாக கட்டாயமாக அமலாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள்.
2) முக்கியமான ஆனால் உடனடியாக இல்லாமல் காலப்போக்கில் அமலாக்க வேண்டிய இலக்குகள். இவை “அரசு கொள்கைகளின் வழிகாட்டும் கோட்பாடுகள்” (Directive Principles of State Policies) என வரைய றுக்கப்பட்டன.
முதலாவது பிரிவு நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு உட்பட்டவை. இரண்டாவது பிரிவு நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு உட்படுத்த முடியாதவை! பொது சிவில் சட்டத்தை அடிப்படை உரிமைகளில் இணைப்பது என்பது தான் முதல் ஆலோசனையாக முன்வைக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் அவர்களும் அதனையே முன்வைத்தார். ஆனால் இந்த உபகுழுவில் நீண்ட விவாதத்துக்கு பின்னர் பொது சிவில் சட்டத்தை “அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகளில்” இணைப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஏன் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது?
ஓருபுறம் முஸ்லீம் உறுப்பினர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. மறுபுறத்தில் இந்து மத ஆதரவா ளர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்து மரபு களில் உள்ள பல்வேறு நடைமுறைகளை மாற்றத்துக்கு உள்ளாக்க அவர்கள் விரும்பவில்லை. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகவும் பின்னர் முதல் ஜனாதிபதியா கவும் பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத், பொதுசிவில் சட்டம் அடிப்படை உரிமைகளில் இணைக்கப்பட்டால் நான் அதில் கையெழுத்திட மாட்டேன் என கூறும் அளவுக்கு எதிர்ப்பு இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. எனவே பொது சிவில் சட்டத்தை வழிகாட்டும் கோட்பாடு களில் இணைப்பது எனும் சமரச முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ராஜ்குமார் அம்ரீத் கவுர்/ ஹன்சா மேதா ஆகிய பெண் உறுப்பினர்களும் எம்.ஆர். மசானியும் மாற்றுக் கருத்து தெரிவித்தனர். எனினும் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் இந்த பிரிவு வழிகாட்டும் கோட்பாடு களில் இணைக்கப்பட்டது. குறிப்பாக அண்ணல் அம்பேத் கர் பொது சிவில் சட்டத்தை அடிப்படை உரிமைகளில் இணைக்க விரும்பினாலும் அவர் எதிர்த்து வாக்களிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுக் கருத்துகளை முன்வைத்தவர்கள் தமது குறிப்பை கீழ்க்கண்டவாறு பதிவு செய்தனர்:
“இந்தியா தேசத்தன்மை அடைவதிலிருந்து பின்னுக்கு இழுக்கப்படுவதற்கு மதம் அடிப்படையி லான தனிநபர் சட்டங்கள் காரணமாக உள்ளன. இந்த சட்டங்கள் தேசத்தை தனித்தனி இறுக்கமான பகுதிகளாக வாழ்வின் பல அம்சங்களில் பிளவுபடுத்துகின்றன. எனவே இந்திய மக்களுக்கு அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் கிடைக்க வேண்டும். எனவே பொது சிவில் சட்டத்தை பிரிவு 2லிருந்து பிரிவு 1க்கு (நீதிமன்றங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது) மாற்றப்பட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.” (The framing of India’s constitution –select docu ments-volume II-page 177.)
நோக்கம் என்ன?
பொது சிவில் சட்டத்தை ஆதரித்தவர்கள் குறித்து சில அம்சங்கள் உள்வாங்குவது அவசியம். பொது சிவில் சட்டத்தை அடிப்படை உரிமைகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதை ஆதரித்த டாக்டர் அம்பேத்கர், மதம் தனிநபர் சட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கக் கூடாது என ஆழமாக நினைத்தார். இந்து மதம் பல்வேறு சமத்துவமின்மை அம்சங்களை கொண்டிருந்தது என்பது அவரது மதிப்பீடு. அதே போல இஸ்லாமும் இந்தியாவில் அமல்படுத்தும் முறையில் பெண்கள் உரிமை குறித்து தவறான கோட்பாடுகளை கொண்டிருந்தது. எனவே பொது சிவில் சட்டம் மூலம் இந்த சமத்துவ மின்மை அம்சங்களை நீக்க முயற்சி செய்ய வேண்டும் என அம்பேத்கர் முனைந்தார். பொது சிவில் சட்டத்தை ஆதரித்த ராஜ்குமார் அம்ரீத் கவுர்/ ஹன்சா மேதா இருவரும் பெண் உறுப்பினர்கள். பெண்களுக்கு திருமணம்/ சொத்துரிமை ஆகியவற்றில் சம உரிமை கிடைக்க வேண்டுமெனில் பொது சிவில் சட்டம்தான் தேவை என அவர்கள் எண்ணினர். மசானி சோசலிசவாதியாக இருந்தார். பின்னர் அவர் சோசலிஸ்ட் எதிர்ப்பாளராக மாறினார் என்றாலும் அரசியல் நிர்ணய சபை நிகழ்வுகளின் பொழுது அவர் முற்போக்காளராக இருந்தார். எனவே அவர் பொது சிவில் சட்டத்தை ஆதரித்த தில் ஆச்சர்யம் இல்லை. பொது சிவில் சட்டத்தை ஆதரித்த இன்னொருவர் இந்து மகாசபா தலைவர் கே.எம்.முன்ஷி! பொது சிவில் சட்டத்தை ஆதரித்த பாசிச ஆதரவாளரான கே.எம். முன்ஷியின் நோக்கமும் அம்பேத்கர்/ அம்ரீத் கவுர்/ ஹன்சா மேதா/ எம்.ஆர். மசானி ஆகியோர் நோக்கமும் ஒன்றாக இருந்தன என்பதற்கு வாய்ப்பில்லை. எனினும் கே.எம்.முன்ஷியும் பொது சிவில் சட்டத்தை அடிப்படை உரிமைகளுக்கு மாறாக வழிகாட்டும் கோட்பாடுகளில் இணைக்கும் சமரசத்தை ஏற்றுக்கொண்டார்.
அரசியல் நிர்ணய சபையில் விவாதங்கள்
இரண்டாவது கட்டமாக முழு அரசியல் நிர்ணய சபையில் பொது சிவில் சட்டம் குறித்து 23.11.1948 அன்று விரிவான விவாதம் நடந்தது. ஏற்கெனவே ஒரு சமரச ஏற்பாடாக “வழிகாட்டும் கோட்பாடுகளில்” பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. “அனைத்து குடிமக்க ளுக்கும் இந்திய பூகோள பகுதி முழுமைக்கும் ஒரு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர அரசு அனைத்து முயற்சிகளையும் செய்யும்” என்பதே அந்த வாசகங்கள் ஆகும். எனினும் இது கூட தமது மத நடைமுறைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் என பல முஸ்லீம் உறுப்பினர் கள் பேசினர். எனவே வழிகாட்டும் கொள்கைகளின் கீழ் உள்ள பொது சிவில் சட்டம் தனி நபர் சட்டங்களுக்கு முரண் பட்டதாக இருக்கக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். முகம்மது இஸ்மாயில் சாஹேப்/ ஹஸ்ரத் மொகானி/ மகபூப் அலி பெய்க்/ பி.போக்கர் போன்றவர்கள் இவ்வாறு வாதிட்டனர். அதே சமயத்தில் நசீரூதீன் அகமது/ ஹுசேன் இமாம் ஆகியோர் பொது சிவில் சட்டம் தேவை என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அது இப்பொழுது அமலாக்க முடியாது எனவும் கூறினர். மறுபுறத்தில் டாக்டர் முன்ஷி/ அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோர் பொதுசிவில் சட்டத்தை ஆதரித்து பேசினர். இந்த விவாதங்களுக்கு அம்பேத்கர் அளித்த பதில் முக்கியத்துவம் வாய்ந்தது. பொது சட்டங்களே சாத்திய மில்லை எனும் கருத்துக்கு பதிலளித்த அம்பேத்கர் ஏற்கெனவே அனைத்து கிரிமினல் சட்டங்களும் பொது வாக்கப்பட்டுள்ளன எனவும் சொத்து பரிமாற்றம் மற்றும் வணிகம் தொடர்பான பிரச்சனைகளிலும் பொது சட்டங்கள் உள்ளன எனவும் திருமணம்/ சொத்துரிமை ஆகியவற்றில் மட்டும்தான் தனி நபர் சட்டங்கள் உள்ளன எனவும் எடுத்துரைத்தார். எனவே அவற்றில் பிற்காலத்தில் மாற்றம் கொண்டு வர ஒரு வசதியாகவே பொது சிவில் சட்டம் குறித்து “வழிகாட்டும் கோட்பாடு களில்” இணைக்கப்படுகின்றது என்பதை அம்பேத்கர் குறிப்பிட்டார்.
விருப்பப்படுகின்றவர்களுக்கு பொருந்தும்
மேலும் அவர் கீழ்கண்டவாறு கூறினார்: “இந்த பிரச்சனையில் முஸ்லீம்களின் உணர்வை நான் புரிந்து கொள்கிறேன். அரசு பொது சிவில் சட்டங்களை அனைத்து குடிமக்களுக்கும் கொண்டுவர முயற்சி செய்யும் என்றுதான் சட்டப் பிரிவு 35இல் (அரசியல் சட்டத்தில் 44ஆவது பிரிவு) கூறுகிறது. இந்தப் பிரிவு சட்டமாக்கப்பட்டவுடனே பொது சிவில் சட்டம் அனை த்துப் பிரிவு மக்கள் மீதும் திணிக்கப்படும் என்று பொருள் அல்ல. எதிர்காலத்தில் நாடாளுமன்றம் தொடக்கத்தில் இந்த பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கு பதிலாக யார் விருப்பப்படுகின்றனரோ அவர்களுக்கு பொருந்தும் என சட்டம் இயற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது” என பேசினார். 1937ஆம் ஆண்டு ஷரியத் சட்டம் முஸ்லீம்க ளுக்கு இயற்றப்பட்ட பொழுது அது சுயவிருப்பத்தின் அடிப்படையில்தான் முன்வைக்கப்பட்டது என்பதையும் அம்பேத்கர் நினைவுபடுத்தினார். 02.12.1948 அன்று நடந்த மற்றொரு விவாதத்தின் பொழுதும் தனி நபர் சட்டங்கள் மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பொழுது பதிலளித்த அம்பேத்கர் பொது சிவில் சட்டத்தை திணித்து முஸ்லீம் சமூகத்தை போராடத் தூண்ட எந்த அரசும் முயலாது எனவும் அவ்வாறு செய்ய முனையும் அரசு ஒரு பைத்தியக்கார அரசாகவே இருக்க இயலும் எனவும் குறிப்பிட்டார். எனவே முஸ்லீம் உறுப்பினர்கள் பயப்பட வேண்டியது இல்லை என உத்தரவாதம் அளித்து அவர்கள் கொண்டு வந்த திருத்தங்களை நிராகரித்தார். அதன் அடிப்படையில்தான் வழிகாட்டும் கோட்பாடுகளின் கீழ் பொதுசிவில் சட்டம் வைக்கப்பட்டது.
எனினும்
- வேலை உரிமை
- வாழ்க்கை ஊதியம் (குறைந்தபட்ச ஊதியம் அல்ல)
- ஆலைகளின் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்கும் உரிமை
- ஆண் பெண் உழைப்பாளிகளுக்கு சம வேலைக்கு சம ஊதியம்
- இயற்கை வளங்களின் உரிமை பொது நன்மைக்காக பகிரப்படுதல்
- ஒரு சிலரிடத்திலே சொத்துக்களும் வளங்களும் சேர்வது தவிர்த்தல்
போன்ற வழிபாட்டு கோட்பாடுகளின் கீழ் வைக்கப் பட்ட பல உன்னதமான பிரிவுகள் அமலாகாதது போலவே பொது சிவில் சட்டமும் அமலாகவில்லை.
வேறுபடும் நோக்கங்கள்
பொது சிவில் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது என கூறுபவர்கள் வழிகாட்டும் கோட்பாடுக ளில் உள்ள மற்ற முக்கிய பிரிவுகளான குறிப்பாக தொழிலாளர்கள் உரிமை குறித்தும் பொருளாதார அசமத்துவம் தவிர்க்கப்பட வேண்டும் எனும் கோட்பாடு கள் குறித்தும் ஏன் மவுனம் சாதிக்கின்றனர்? அன்று பொது சிவில் சட்டத்தை ஆதரித்த அம்பேத்கர் மற்றும் ஏனையோருக்கு உன்னதமான நோக்கம் இருந்தது. இந்திய சமூகம் சாதிய/பாலின அசமத்துவம் இல்லாத தாக இருக்க வேண்டும் என்பதே அந்த நோக்கம். இந்து மகாசபையின் தலைவராக இருந்த கே.எம்.முன்ஷிக்கும் அதே உன்னதமான நோக்கம் இருந்தது என்பதை கூற இயலாது. இன்று பொது சிவில் சட்டம் பேசும் முன்ஷியின் அரசியல் சித்தாந்த வாரிசுகளின் நோக்கமும் தூய்மை யானது என மதிப்பிட முடியாது. பொது சிவில் சட்டத்தி லிருந்து பழங்குடி இன மக்களுக்கும் கிறித்துவர்க ளுக்கும் சீக்கியர்களுக்கும் விதிவிலக்கு தரப்படும் என பா.ஜ.க. தலைவர்கள் பேசி வருகின்றனர். அப்படியா னால் மிஞ்சுவது முஸ்லீம்கள் மட்டுமே! சங் பரிவா ரத்தின் நோக்கம் முஸ்லீம்களை தனிமைப்படுத்தி மதப்பி ளவை கூர்மையாக்கி தேர்தல் ஆதாயம் தேடுவது என்பது தெளிவாகிறது.
பைத்தியக்காரத்தனம்- மூர்க்க அரசியல்
அண்ணல் அம்பேத்கர், பொது சிவில் சட்டத்தை திணிக்கக் கூடாது எனவும் விரும்புபவர்களுக்கு மட்டுமே எதிர்காலத்தில் அமலாக்க வேண்டும் எனவும் கூறினார். இது ஜனநாயக அணுகுமுறை மட்டுமல்ல; அந்தந்த சமூகங்கள் தாமாக முன்வந்து அவற்றை ஏற்றுக் கொள்ள உகந்த சூழல்கள் உருவாக்க வேண்டும் எனும் சிந்தனை அன்று இருந்தது. முஸ்லீம்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணிக்கும் ஒரு அரசு பைத்தியக்கார அரசாகவே இருக்கும் என அம்பேத்கர் அன்று கூறினார். இன்றைய மோடி அரசு பைத்தியக்காரத்தனமானது மட்டுமல்ல. மூர்க்கத்தனத்துடன் அரசியல் உள்நோக் கத்துக்காக பொது சிவில் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்த முனைந்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் ஜனநாயக சக்திகள் முன் உள்ளது.