articles

img

‘ரோஜா இதழால் கூட ஒரு பெண்ணை அடிக்கக்கூடாது’ - டாக்டர் அலெய்டா குவேரா

அன்பு சகோதரிகளே, நண்பர்களே, தோழர்களே! இந்தப் புவியில் அதிக ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட, மிகப்பெரும் சக்திவாய்ந்த ஒரு முதலாளித்துவ சாம்ராஜ்யத்திற்குப் பக்கத்தில் இருந்துகொண்டு, சோஷலிசப் புரட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற, கரீபியன் பகுதியில் உள்ள ஒரு தீவில் இருந்து நான் வருகிறேன் என்பதை நீங்கள் அனை வரும் நன்கறிவீர்கள்.

கறுப்பின மக்களோடு, ஸ்பானிஷ், மிகச் சிறிய அளவில் பூர்வகுடிகள், சிறிது சீனர்கள் இணைந்த கலவையாக விளங்கும் ‘கரீபியன் கலாச்சாரம்’ என்னு டையது. எங்களுடைய நாட்டுப்புறவியல், நாங்கள் உணவு வாங்குகிற பொடீகா எனும் கடைகளுக்குச் சொந்தக்காரர்களான ஸ்பானிஷ் மக்களாலும், எங்க ளுடைய ஆடைகளை சலவை செய்கிற உலர்சலவைய கங்களுக்குச் சொந்தக்காரர்களான சீனர்களாலும்  எந்தச் சொத்துகளும் இல்லாத கறுப்பின மக்களா லும் விளைந்தது. கியூபக் கலாச்சாரம், இந்தக் கலாச்சா ரக் கலவைகளில் இருந்து பிறந்தது. ஒவ்வொரு கலாச் சாரமும் அதன் தொன்ம அறிவோடு தொடர்புடைய ஏதா வது ஒன்றை வழங்கியுள்ளது என்பது உண்மைதான். அதனாலேயே, இந்த ஒவ்வொரு கலாச்சாரமும் பங்க ளித்த அதி-ஆண்மைக் கலாச்சாரத்தால் பெண்கள் நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

கரீபியப் பெண்களின் விடுதலை

எங்களுடைய புரட்சிகர செயல்பாடு மற்றொரு புரட்சியைத் தூண்டியது. அதுதான் கரீபியப் பெண்க ளின் விடுதலை. ஆகஸ்ட் 1960 வாக்கிலேயே மிக ஆரம்ப நிலையிலேயே கியூபப் பெண்கள் கூட்டமைப்பு உரு வாக்கப்பட்டது. நாடு முழுவதும் செயல்பட்டு நான்கரை மில்லியன் (45 லட்சம்) கியூபப் பெண்களை-அதாவது 14 வயதுக்கு மேலான 92 சதவிகிதமான கியூபப் பெண்கள் அனைவரையும் அது பிரதிநிதித்துவப் படுத்துகிறது. பெண்களை வேலைவாய்ப்பிற்குள் கொண்டுவந்து அவர்களை மேலாளர் நிலைக்கு உயர்த்துவது, கியூபப் பெண்கள் கூட்டமைப்பின் முன்னுரிமையாக எப்போ துமே இருந்து வருகிறது. இது அன்றாடப் பொருளா தார சமூகக் கண்ணோட்டத்தில், பெண்களை மேலும் சுதந்திரமானவர்களாக வாழ வழிவகுக்கிறது. சோசலிச கியூபாவின் சாதனைகள் பற்றி உங்க ளுக்கு ஒரு பார்வையைக் கொடுப்பதற்காக, ஒரு சில புள்ளிவிவரங்கள்:

  1. பொருளாதாரத்தில் பங்கேற்கும் 46,43,008 மக்களில், பெண்களின் எண்ணிக்கை 18, 24,009. அதாவது 39.3%.
  2.  வேலைக்குப் போகும் பெண்களின் கல்விநிலை உயர்ந்துகொண்டு வருகிறது. 53.1% பேர் உயர் நிலைப் பள்ளிக்கல்வியும், 34.2% பேர் பல்கலைக் கழக அளவிலான கல்வியும் பெற்றிருக்கிறார்கள்.  
  3.  பெரும்பாலான வேலைப் பிரிவுகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. பெண் மேலாளர்கள் 38.6%, தொழில்நுட்பவியலாளர்களில் 66.6%, நிர்வா கப் பணிகளில் 69%, சேவைத் துறையில் 45.4%, தொழிலாளர்களில் 16.7% பெண்கள்.
  4.  பொது மருத்துவம் மற்றும் சமூக உதவித் திட்டங்களில், 70.95% பயனாளிகளாகப் பெண்கள் உள்ளார்கள். கல்வியில் 68.9%, அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் 49.3%, பண்பாடு மற்றும் விளையாட்டில் 43.6% பெண்கள் பங்கேற்பு உள்ளது.
  5.  விவசாயத் துறையில் 2,19,772 பெண்கள் பணி யாற்றுகிறார்கள். மொத்த விவசாயிகள் படையில் இது 25%. இவர்களில் 13% நேரடி உற்பத்தியில் ஈடு படுகிறார்கள். 42% பெண்களால் விவசாய அமைப் பின் அறிவியல் திறன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
  6.  நகர்ப்புற, கிராமப்புற, குடும்ப விவசாயம் பாராட்டத் தக்க வகையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கள் வழங்குகிற பகுதியாக இருக்கிறது. இதன் மொத்த தொழிலாளர்களில் 43% பெண்களாக இருக்கிறார்கள். 5 லட்சம் “60வது ஆண்டுவிழா பட்டியோக்கள்” (குட்டித்தோட்டங்கள்) என்ற பிர கடனத்தை ஒட்டியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... கொல்லைப்புறம், மாடி என வீட்டு மனைப் பகுதியில் உணவு உற்பத்தி செய்கிற அனுபவமாக இது இருக்கிறது. விழாக்கள், பன்மைத் தன்மை திருவிழாக்கள் மூலம் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பண்பாட்டை வலுப்படுத்துவதன் வாயிலாக உணவு இறையாண்மை பரவலாக்கப்படுகிறது.
  7.  கியூபப் பெண்கள் கூட்டமைப்பு வீட்டுப் பொறுப்புக ளுக்கு தீர்வைக் கண்டறிவதால், வேலைக்குச் செல்லும் தாய்மார்களையும், உடல்நலக் கோளாறு களால் வீட்டில் தனியாக இருக்க இயலாத வயது மூத்தவர்களையும் அரவணைப்பதற்காக, பகல் நேரக் குழந்தைப் பராமரிப்பு மையங்கள், மழலை யர் பள்ளிகள், குழந்தைகள் இல்லங்கள், தாத்தா பாட்டி இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  இவை தவிர, வீட்டு வேலைகளில் உதவி, பேக்கிங் செய் யப்பட்ட சமைத்த உணவு, முன் தயாரிக்கப்பட்ட உணவு, வேலைக்குப் போகும் பெண்களுக்கு வீட்டுப் பொருட்கள் வாங்குவதற்காக உதவும் வகை யில் வணிகக் கடைகளின் நேரங்களில் மாற்றங்கள் செய்வது போன்ற உதவிகள் உறுதி செய்யப் படுகின்றன.
  8.  நாட்டின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் கியூபப் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்கிறார்கள். மக்கள் அதிகார தேசிய சபை எனும் எங்களது நாடாளுமன் றத்தின் பிரதிநிதிகளில் 52.3% பேர் பெண்கள். மாகாண சபைகளில் 53.3% பேர் பெண்கள்.
  9.  4 பெண் ஆளுநர்கள் உள்ளனர். இவர்கள், 26.7% மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். 12 பேர் துணை ஆளுநர்கள், 80% மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறார்கள். நகர்மன்ற சபைகளில் 88 பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். இது மொத் தத்தில் 52.7% ஆகும். 58 பெண் மேயர்கள் உள்ளனர். இது மொத்தத்தில்  35.4% ஆகும். H வீட்டிலும் வெளியிலும் சம உரிமை சம பொறுப்புக் காக நாங்கள் பணியாற்றுகிறபோது, தனிநபர் உதார ணங்கள் மூலமாகவும்; ஊடகங்கள் கண்காணிப்பு  வாயிலாக உரையாடல், இசை, நாடகத் தயாரிப்பு களின் மொழியில் அதி-ஆண் பிம்பத்தை வெகு வாக உடைப்பதன் வாயிலாகவும் புதிய தலைமுறை யினருக்கான கற்பித்தல் செயல்பாட்டிற்கு நாங்கள் அழுத்தம் தருகிறோம்.
  10.  பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கான வழிகாட்டி மையங்களின் செயல்பாடுகள் முக்கியமானவை. இவை எல்லா நகராட்சிகளிலும் இருக்கின்றன. பல்வேறு அறிவியல் துறை வல்லுனர்களின் தன் னார்வ அடிப்படையிலான பங்கேற்புடன், அற வுணர்வு கட்டமைப்பை அடித்தளமாகக் கொண்டு, உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இவை செயல்படுகின்றன. இந்த பெண்களுக்கான வழிகாட்டி மையங்கள் சமுதா யத்தின் தேவைக்கேற்ப பல்வேறு வர்த்தகங்களில் பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. இந்தாண்டு 50,000 இளம்பயனாளர்களுக்கு பயனளிக்கும் வகை யில் 841 பயிற்சிகள் நடத்தப்பட்டன.

குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம்

பாலின வன்முறையைத் தடுப்பதற்காகவும், எதிர்ப்பதற்காகவும் நாங்கள் மிகத் தீவிரமாகப் பணி யாற்றி வருகிறோம்; சமுதாய அளவில் மன்றங்கள் உரு வாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இத்தகைய 156 மன்றங்கள் செயல்படுகின்றன.   ‘ரோஜா இதழால் கூட ஒரு சிறுவன் ஒரு சிறுமியை அடிக்கக்கூடாது’ என்கிற எங்களது கியூபப் புரட்சியின் தூதரான ஜோஸ் மார்டியின் (Jose Marti) சிந்தனையை எங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம். தீர்க்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. கடக்கவேண்டிய சவால்கள் உள்ளன. உதாரணத் திற்கு, சமீபத்தில் எங்கள் மக்கள்தொகையில் 66.87% பெரும்பான்மை வாக்களித்துக் கொண்டுவரப்பட்ட புதிய குடும்பச் சட்டத்தைச் செயல்படுத்துவது, அதிலி ருந்து கொண்டுவர வேண்டிய சட்டங்களை செம்மைப் படுத்துவது, வயதானவர்களின் எண்ணிக்கை அதிக ரிக்கும் நிலையில், எங்கள் நாட்டில் பிறப்பு விகிதத்தைப் பாதுகாத்து அதை ஊக்குவிக்க வேண்டி இருக்கிறது. 

தொடர்ந்து போராடுவோம்!

தோழர்களே! நேர்த்தியானது என எதுவும் இல்லை. நமது மகள்களும், பேத்திகளும், முழுமையான சம உரிமைகள் பெண்களுக்கு இருக்கிற, வாழ்க்கை உருவேற்றம் செய்யப்படும் பட்டறையாக இருக்கும் பெண்கள் மதிக்கப்படுகிற, அரவணைக்கப்படுகிற ஒரு நியாயமான உலகில் வாழ வேண்டும் என்ப தற்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும். எங்களுடைய முதல் தளபதி ஃபிடல் காஸ்ட்ரோ 1965 ஆம் ஆண்டில், “கடந்த காலத்தில் பெண்களின் உழைப்பு சக்தி குறைவாக மதிப்பிடப்பட்டது,   வேலை யில் பெண்களை ஈடுபடுத்துவதன் சமூகப் பொருளா தார முக்கியத்துவத்தை புரட்சியின் எதார்த்த நிலை நமக்கு மேன்மேலும் கற்றுக்கொடுக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

இது மிகப் பெரிய உண்மை. ஒரு பணி நீடித்து,  வளர்ச்சி கண்டு, மேம்பாடு அடைவதற்குப் பெண்க ளின் தீவிரமான பங்கேற்பு மிக அவசியமானது. ஏனெ னில் நம்முடைய உரிமைகள், நம்முடைய கலாச்சா ரம், நம்முடைய அடையாளம் ஆகியவற்றை மட்டும்  பாதுகாக்க நாம் போராடவில்லை; இவை எல்லாவற்றை யும் நமது கருப்பையில் வளர்கிற குழந்தைகளுக்கு உத்தரவாதப்படுத்துவதற்காக நம்மால் இயன்ற முழு வலிமையுடன் போராடுகிறோம். இதுவே, நாம் போராடுவ தற்கான மிகப்பெரும் வலுவை நமக்குத் தருகிறது. எப்போதும் வெற்றியை நோக்கி முன்னேறுவோம்! ஹஸ்தா லா விக்டோரியா சியம்ப்ரே!

திருவனந்தபுரத்தில் ஜனவரி 6-9 தேதிகளில் 
நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 
அகில இந்திய மாநாட்டில் ஆற்றிய உரை. 
தமிழில்: நர்மதாதேவி 

;