articles

img

நீதியரசர் சின்னப்ப ரெட்டி - உச்சநீதிமன்றத்தில் ஒளி வீசிய மார்க்சிஸ்ட் -ஸ்ரீநில் ஷா

சென்ற நூற்றாண்டில் தங்களது நேர்த்தி யான செயல்பாடுகள் மூலம் இந்திய உச்ச நீதி மன்றத்துக்குப் பெருமை தேடித் தந்த முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர் நீதியரசர் சின்னப்ப ரெட்டி. தான் ஒரு மார்க்சிஸ்ட் என்று அறியப்படுவதில் என்றும் பெருமிதம் கொள்பவராக விளங்கியர்  நீதியரசர் சின்னப்ப ரெட்டி.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அடி பிறழாது பின்பற்றுவது என உறுதி பூண்டிருந்த நீதியரசர் ரெட்டி, அறிவார்ந்த மேதைமையுடையவராக, கொள்கைப் பிடிப்புடன் விளங்கும் இலட்சியவாதியாக, மதச்சார்பற்ற எண்ணம் கொண்டவராக, மனிதநேயச் சிந்தனையில் மிளிர்பவராக, ஆற்றல்மிக்க பேச்சாளராக, முத்தாய்ப் பாக, எல்லோருடனும் எளிமையாகப் பழகும் தாராள மனம் படைத்தவராக விளங்கியவர்.  சுருங்கக் கூறின், பல சிறப்பியல்புகளுடன் பன்முகத் தன்மை மிக்க ஆளுமை யாக நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர். நீதியரசர் சின்னப்ப ரெட்டி, தான் வாழ்ந்த காலகட்டத் தில், அதன் இயல்பான நீரோட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளாமல், எப்போதுமே காலம் கடந்து சிந்தித்துச் செயலாற்றி வந்தவர்.  இவ்வியல்பு காரணமாக அவ்வப்போது பல விமர்சனங்களையும் எதிர்கொண்டவர்.  இன்றைய சூழலில், அவரைப் போன்றே  உலக ஞானம் படைத்த ஒருவருக்கு நீதித்துறை பதவி உயர்வு அளிக்க முற்பட்டால், அது பெரும் சர்ச்சை யையே ஏற்படுத்தக் கூடும்.  ஆனால் நீதியரசர் சின்னப்ப ரெட்டியின் ஆகச் சிறந்த பண்புநலன் யாதெனில், அவர் நீதித்துறை சார்ந்த தனது கடமையை நிறைவேற்று கையில், தனது சொந்தக் கருத்துகளும், அரசியல் கண்ணோட்டமும் முடிவுகளில் தாக்கம் செலுத்துவதை ஒருபோதும் அவர் அனுமதித்ததில்லை என்பது தான்.

வானத்து விண்மீன் போன்ற தெளிவு...

நீதித்துறையில் ‘எஸ்.பி. மிட்டல்’ என்ற பெயரில் அறியப்படுகிற ஒரு வழக்கில், மதம் மற்றும் மத நம்பிக்கை சார்ந்த விவாதம் முன்னுக்கு வந்தது.  அப் போது, பெரும்பான்மை தீர்ப்புடன் தாம் உடன்படுவதா கவும், அதே வேளையில் அம் முடிவை எட்டுவதற்குத் தரப்பட்ட காரணிகளிலிருந்து தாம் முற்றிலும் மாறுபடு வதாகவும் தெரிவித்த நீதியரசர் சின்னப்ப ரெட்டி, தனது  விளக்கவுரையைப் பின்வருமாறு துவக்குகிறார்: “இந்த வழக்கு விசாரணையின் பெரும் பகுதி, மதம் குறித்தும், மதம் என்றால் என்ன என்பது குறித்தும் விவாதிப்பதற்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது.  எல்லோருக்கும் மதம் இருக்கிறது; அல்லது மதம் பற்றிய ஒரு பார்வை யோ, கண்ணோட்டமோ இருக்கிறது. ஒருவர் மதவெறி கொண்டவராகவோ அல்லது சாதாரண நம்பிக்கையாள ராகவோ இருக்கலாம்; ஒரு தத்துவ மேதையாகவோ அல்லது சாமானிய மனிதராகவோ இருக்கலாம்; ஏன் கடவுளை மறுக்கும் நாத்திகராகவோ அல்லது கடவு ளைப் புரிந்து கொள்வது கடினம் என்றுரைக்கும் அஞ்ஞா னவாதியாகவோ இருக்கலாம். ‘மதம்‘ என்பதும் ‘ஜனநாயகம்‘, ‘சமத்துவம்‘ போன்றவற்றைப் போல, இது தான் என்று அறுதியிட்டு விவரிக்க இயலாத ஒன்று. அவர வரது எண்ண ஓட்டங்களைப் பொறுத்து அது புரிந்து கொள்ளப்படுகிறது.  ஒரு சிலருக்கு மதமாகத் தெரிவது வேறு சிலருக்கு ஒரு கருத்து அல்லது கோட்பாடாகக் காட்சியளிக்கிறது.

 ஒரு சிலருக்கு வழிபாட்டுக்குரியதாகத் தோன்றும் மதம், வேறு சிலருக்கு மூட நம்பிக்கையாகத் தெரிகிறது.” மேற்சொன்னவாறு வானத்து விண்மீனைப் போன்ற தெளிவுடன் தனது முகவுரையைத் துவக்கிய நீதியரசர் சின்னப்ப ரெட்டி, அதன் நீட்சியாய்த் தனது தனிப்பட்ட கருத்துகளையும் பதிவு செய்ததோடு, அவை உச்ச நீதி மன்ற நீதிபதி என்கிற தனது செயல்பாட்டில் ஏன் குறுக்கி டலாகாது என்பதையும் நேர்த்தியாக விளக்கியுள்ளார். “இங்கு மதத்தின் மீது எந்தவிதமான நம்பிக்கையோ, பிடிப்போ இல்லாதவர்களுடைய - மதம் என்பது முழு வதும் அறிவியல்பூர்வமற்ற, பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத ஒன்று என்று கருதக்கூடியவர்களுடைய - கருத்துக்கள் என்னால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதை நான் அறிந்துள்ளேன். பிரார்த்தனை என்ற பெயரில் கடவுள் நாமங்களை உரக்கக் கூவுவது, குறுகிய வெறியூட்டும்  செயலாகவே எனக்குத் தோன்றுகிறது.  பல்வேறு சடங்குகளை அனுசரிப்பது வெறும் மூட நம்பிக்கையன்றி வேறில்லை.  ஆனால் மத நம்பிக்கை பற்றிய எனது பார்வைகள், மதம் குறித்த எனது எண் ணங்கள், எனது சார்புநிலைகள் இவை யாவும் இங்கே முழுவதும் பொருத்தமற்றவையே.    அதே போன்று, அதிதீவிர மதப் பற்றாளர்கள், கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கையாளர்கள், மத வெறியர்கள், மதம் சார்ந்த அம்சங்களில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர்கள் ஆகியோரது கருத்துக்களும் இங்கே சிறிதளவும் தொடர்பற்றவையே.  இவற்றையும் கடந்து, இறைப் பணியிலும், சமய செயல்பாடுகளிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள பக்திமான்கள், சாமியார்கள், மௌலவிகள்,

பாதிரியார்கள், புத்த பிட்சுக்கள், சமணத் துறவிகள், சீக்கிய மத குருமார்கள் என்று தத்தமது மத கோட்பாடுகளையும், வழிபாட்டு நெறிமுறைகளையும் உயர்ந்ததென்று போற்றி பின்பற்றுபவர்களது எண்ணங்களும், கருத்துக்களும் இவ்விடத்தில் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.   நமது தற்போதைய தேவையைப் பொறுத்தமட்டிலும் நாம் நேரடியாக அக்கறை செலுத்த வேண்டியது, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக இந்திய  தேசத்தை வடிவமைத்துத் தந்துள்ள நமது அரசியல மைப்புச் சட்டத்தையும், அதன் மகத்தான விழுமியங்க ளையும் உறுதியாகப் பின்பற்றிச் செயல்படுத்துவது மட்டுமே.  இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மனசாட்சி மற்றும் உள்ளுணர்வுடன் நடந்துகொள்ளவும், எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி தனக்கு விருப்பமான மதத்தைத் தேர்வு செய்யவும், பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமையை வழங்கியிருக்கிறது.  இதே போன்ற மத சுதந்திரம் இங்கு செயல்படும் மத நிறுவனங்களுக்கும், மதப் பிரிவுகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.    மேற்கூறிய அம்சங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 25 மற்றும் 26-இல் எந்தக் கருத்தோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.  குடிமக்களின் உள்ளு ணர்வோடு தொடர்புடைய சுதந்திரம் மற்றும் உரிமை போன்றவை, இயல்பாகவே விரிவான விளக்கத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.  ‘மதம்’, ‘மதப் பிரிவுகள்’ முதலான சொற்றொடர்களுக்குத் தரப்படும் விளக்க மானது, குறுகிய கண்ணோட்டத்துடனோ, தினறடிக்கும் தன்மையுடனோ அமைந்துவிடாமல், மிகவும் விரிவான முறையிலும், விசாலமான பார்வையிலும், தாராளமான சிந்தனைப் போக்குடன் அமைந்திடல் வேண்டும்.”

விளிம்பு நிலை மக்களுக்கு  உதவும் வகையில்...

நீதியரசர் சின்னப்ப ரெட்டி, 1922-ஆம் வருடம் செப்டம்பர் 25-ஆம் நாள் ஆந்திரப் பிரதேசத்தின் இராயலசீமா பகுதியில் ஒரு சட்ட வல்லுநர்கள் குடும்பத்தில் பிறந்தவர்.  அவரது தந்தையாரும், பாட்ட னாரும் ஆந்திராவின் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறி ஞர்களாகச் செயல்பட்டு வந்தார்கள்.   சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1943-ஆம் வருடம் பி.எல். பட்டம் பெற்ற சின்னப்ப ரெட்டி, உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். தேச விடுதலைக்குப் பின் ஆந்திரா தனி மாநிலமாக உருவானதையடுத்து, 1954-இல் அம் மாநில உயர் நீதிமன்றத்திற்குத் தனது பணிகளை மாற்றிக் கொண்டார்.  தன்னிடம் வழக்குகளைக் கொண்டுவரும் வசதி படைத்த கட்சிக்காரர்களிடமிருந்து பெறும் வழக்கறிஞர் கட்டணத்தைக் கொண்டு, சாதாரண, ஏழை மனுதாரர்களுக்கு இலவசமாகவே ஆஜரா கும் வழக்கத்தைக் கொண்டிருந்த சின்னப்ப ரெட்டியை, ஆங்கில நாட்டுப்புற இலக்கியத்தில் ஏழைப் பங்காளனாக வலம் வரும் கதாநாயகனுடன் ஒப்பிட்டு,  ‘நவீன காலத்து இராபின் ஹுட்‘ என்றே கூறலாம்.  1960-இல் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அரசு தலைமை வழக்குரைஞராக (பப்ளிக் பிராசிகியூட்டர்) சின்னப்ப ரெட்டி நியமிக்கப்பட்டார்.  அவரது அறிவுப் பூர்வமான வாதிடும் திறன் மற்றும் ஆற்றல்மிகு செயல்பாடு காரணமாக 1967-இல் ஆந்திர மாநில உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். அதிகாரத்திற்கு அடிபணிந்து போகாத, நேர்மையான அவரது செயல்பாட்டிற்குத் தண்டனையாக, 1975-இல் அவசரநிலைக் காலத்தில் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு அவர் இடமாறுதல் செய்யப்பட்டார்.  சண்டிகரில் பணியாற்றிய இக்காலகட்டத்தில், அந்த உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக இரண்டு முறை அவர் பொறுப்பு வகித்துள்ளார்.

1978-ஆம் ஆண்டு ஜூலை மாதம், அவரது 55-ஆவது வயதில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக சின்னப்ப ரெட்டிக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.  அப்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒய்.வி. சந்திரசூட் செயல்பட்டு வந்தது குறிப்பிடத் தக்கது.  நீதியர சர் சின்னப்ப ரெட்டி பிறப்பால் ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவராக இருந்த போதிலும், அவர் கடவுள் மறுப்பாளராக இருந்தது குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் வியப்பு தெரிவித்துள்ளார். இந்திய நீதித் துறையில், தங்களது தனித்துவம் மிக்க பங்களிப்பின் மூலம்,  ‘சோஷலிசத்தின் நான்கு முன்னணிப் படைவீரர்கள்’ என்று பாராட்டப்பட்ட நான்கு நீதியரசர்களுள் சின்னப்ப ரெட்டியும் ஒருவர்.  தலைமை நீதிபதியாக விளங்கிய பி.என். பகவதி, வி.ஆர். கிருஷ்ணய்யர், டி.ஏ. தேசாய் ஆகியோர் மற்ற மூவர்.  இந்த நான்கு நீதிபதிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு, அவசரநிலைக் காலத்தில் இந்திய நீதித்துறையின் மீது விழுந்த கரும்புள்ளியைத் துடைத்து, நீதித்துறையின் மாண்பை நிலைநிறுத்தும் உன்னதப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.  இவர்களது முற்போக்கான, முன்னுதாரணமான பணிகளின் பயனாகவே, சாதாரண மக்களுக்கு நீதித்துறை குறித்து மீண்டும் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது என்று கூறினால் அது மிகை யன்று.  சமூகத்தின் விளிம்பு நிலையில் உழன்று கொண்டி ருக்கும் சாமானிய மக்களுக்கும் பயன் கிட்டும் வகையில்  இந்த நால்வரது தீர்ப்புகளும் எப்போதும் அமைந்தி ருந்தன. நீதியரசர் சின்னப்ப ரெட்டி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் சிறப்புறப் பணியாற்றி 1987-இல் பணி ஓய்வு பெற்றார்.  தனது பணியை நிறைவு செய்த வேளையில் அவர் உச்ச நீதிமன்றத்தின் மிகவும் மூத்த நீதிபதியாக இருந்து வந்தார்.  அவரது விசாரணை மன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் எப்போதும் ஒருவித அச்சத்துடனும், பதற்ற உணர்வுடனுமேயே தென்படுவார்கள்.  ஏனெனில், பணி நிமித்தம் மிகுந்த கறார் தன்மையுடன் செயல்படக் கூடிய நீதியரசர் ரெட்டி, அதிமுக்கியக் காரணங்கள் இன்றி, வழக்குகள் விசாரணைக்கு மனம் போன போக்கில் ஒத்திவைப்பு  கோரப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார் என்பது தான்.  மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு  வர இயலாத சூழ்நிலையில், அவர்களிடம் பயிற்சி பெறும் இளம் வழக்குரைஞர்கள் விசாரணையில் பங்கேற்று வாதங்களை முன்வைப்பதை நீதியரசர் சின்னப்ப ரெட்டி முழு மனதுடன் ஊக்குவித்தார். உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வுகளில் ஒரு அங்க மாக நிறைய முறை இடம் பெற்றுள்ள சின்னப்ப ரெட்டி, அதன் வழியாகவும் மிகக் கணிசமான எண்ணிக்கையில் வழக்குகளைக் கையாண்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டமும் சகிப்புத் தன்மையும்

நீதியரசர் சின்னப்ப ரெட்டியின் பரந்துபட்ட அணுகு முறைக்குப் பல தீர்ப்புகள்  எடுத்துக்காட்டாக இருந்த போதிலும், அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று, ‘பைஜோ இம்மானுவேல்‘ என்னும் புகழ் பெற்ற  வழக்கு பற்றியது. ‘யெகோவாவின் சாட்சியங்கள்‘ அமைப்பைச் சேர்ந்த மூன்று சிறார்கள், தங்கள் பள்ளி யின் காலை நேரமாணவர் கூடுகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்தமைக்காகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப் பட்டது தொடர்பான வழக்கு அது. தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ளசில வரிகள் தங்கள் மத வழிபாட்டுக் கொள்கைக்கு முரணாக இருப்பதால் பாடவில்லை என்பது அவர்கள் தரப்பு வாதமாக இருந்தது.  புகழ்பெற்ற வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் பாதிக்கப்பட்ட பள்ளிச் சிறார்கள் சார்பாகவும், பின்னாளில் குஜராத் உயர் நீதி மன்றத்தின் தலைமைநீதிபதியாகப் பதவி வகித்த பி.எஸ். போத்தி எதிர்த் தரப்பினருக்காகவும் ஆஜராகினர்.   குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய நீதியரசர் சின்னப்ப ரெட்டி, பொன்னெழுத்துக்களில் பொறிக்கத் தக்க கீழ்க்காணும் வாசகங்களைத்  தனது உத்தரவில் இணைத்திருந்தார்: “அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ய) மற்றும் 25(1) பிரிவுகள் மனுதாரர்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் கருது கிறோம்.  அவை எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.  ஆகவே, சிறார்க ளின் வெளியேற்றத்தை அனுமதித்த உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.  மனுதாரர்களின் மேல் முறையீடு அனுமதிக்கப்படுகிறது.  எதிர் மனுதாரர்கள் மூன்று குழந்தைகளையும் மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்வதோடு, எந்தவித இடையூறும், இடர்ப்பாடும் இன்றி அவர்கள் மூவரும் தங்கள் கல்வியைத்  தொடர அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். இவ்விடத்தில் நாங்கள் கூடுதலாகக் கூற விழைவது ஒரேயொரு விஷயத்தைத்தான்;  நமது மரபும், பாரம்பரியமும் சகிப்புத்தன்மையைக் கற்பிக்கின்றன; நமது தத்துவம் சகிப்புத்தன்மையைப் போதிக்கிறது; நமது அரசியலமைப்புச் சட்டமோ சகிப்புத் தன்மையைப் பின்பற்றுகிறது; ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.  நாம் அதை நீர்த்துப் போகச் செய்துவிடலாகாது.“ நீதியரசர் ரெட்டியின் ஆணித்தரமான கருத்து, இன்றைய சூழலுக்கும் மிகவும் ஏற்புடையதாக உள்ளது.  இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது பற்றிய வழக்கில் நீதிபதி சுதான்ஷு துலியா, பெரும்பான்மைக்கு எதிரான தன்னுடைய மாறுபட்ட தீர்ப்புரையில், “ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பத்தின்பாற் பட்டது” என்று குறிப்பிட்டதோடு, அதற்கு பைஜோ இம்மானுவேல் வழக்கையே மேற்கோளாகக் காட்டியிருந்தார்.  இவை ஒருபுறமிருக்க, பின்னாளில் இந்திய அரசு கொணர்ந்த ‘இந்திய தேசியக் கொடி பயன்பாட்டு விதிகள் 2002‘,‘தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு திருத்த சட்டம் 2003‘ போன்றவை வாயிலாக, பைஜோ இம்மானுவேல் வழக்கு தீர்ப்புரையின் ஒரு சில அம்சங்கள் திட்டமிட்டு நீர்த்துப் போகுமாறு செய்யப் பட்டுள்ளன.

தனிநபர் சுதந்திரமும் உரிமை பாதுகாப்பும்

அரசியலமைப்புச் சட்டத்தின் பண்பு நலன்கள் மீது நீதியரசர் சின்னப்ப ரெட்டி வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்திருப்பது, ‘ராம்சங்கர் ரகுவன்ஷி‘ என்னும் வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பு.  ஒரு நகராட்சிப் பள்ளி ஆசிரியர், அவர் பணியில் சேருவதற்கு முன்பு, ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கம் கட்சியின் நடவடிக்கை களில் பங்கேற்றிருந்தார் என்ற காரணம் கூறப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு, அவர் அரசுப் பணியில் சேர்வதற்குத் தகுதியற்றவர் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.  கீழமை நீதிமன்றங்கள் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிட, அரசின் மேல் முறையீடு நீதியரசர் சின்னப்ப ரெட்டியின் முன்பு விசாரணைக்கு வந்தது. மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து வழங்கிய உத்தரவில் நீதியரசர் ரெட்டி, தனது தெளிவான கருத்துக்களைப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்: “பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பள்ளி ஆசிரியர் அரசு வேலையில் சேருவதற்கு முன்பு ஆர்எஸ்எஸ்/ஜனசங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.  எத்தகைய நடவடிக்கை என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.  ஆர்எஸ்எஸ் அமைப்போ, ஜனசங்கம் கட்சியோ தடை செய்யப்பட்ட இயக்கங்கள் அல்ல.  சட்டப்பூர்வமாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள அமைப்புகளே.  பெரும்பாலான மக்கள், குறிப்பாக அறிவுஜீவிகள், ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கத்தின் கொள்கைகளோடும், செயல் திட்டங்களோடும் உடன்பாடு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.  இது போலவே வேறு பல அரசியல் இயக்கங்களுக்கும் ஏற்றுக்கொள்வோர், எதிர்ப்போர் என இரு தரப்பும் உண்டு.  ஆனால் இவை யாவும் இங்கு பொருத்தமற்ற விவாதங்களே.  ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறை யில் சிந்திக்கவும், கருத்து வைத்துக் கொள்ளவும் உரிமை உண்டு.  அதற்குத் தடைகள் எதுவும் இல்லை.  நமது அரசியலமைப்புச் சட்டமும் அதை உறுதிப்படுத்தி யுள்ளது.... இவ்வாறு இருக்கையில் இந்த வழக்கின் எதிரி, தான் அரசு வேலையில் சேருவதற்கு முன்பு ஒரு அரசியல் இயக்கத்தில் கலந்து கொண்டது எங்ஙனம் ஒரு பாவச் செயலாகக் கருத முடியும்?  சட்டப்பூர்வமாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள, தடை செய்யப்படாத ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் என்ன தவறு கூற முடியும்?...“ இவ்வாறு அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமி யங்களை எடுத்துரைத்து அவர் வழங்கிய தீர்ப்புரைகள், பல்வேறு அம்சங்களில் தனி நபர்களின் சுதந்திரத்தையும், உரிமையையும் நிலைநாட்டிப் பாதுகாப்பதற்குப் பெரிதும் துணையாய் அமைந்துள்ளன.  அவரது எண்ணிலடங்காத தீர்ப்புகளைத் தேடிச் சென்று வாசிப்ப வர்களுக்குப் பல்வேறு பிரச்சனைகளில் மதிநுட்பத்துடன் கூடிய விசாலமான பார்வையும், புதிய வெளிச்சமும் கிட்டும்.  நமது அரசியலமைப்புச் சட்டத்தை விளக்க முற்படும் போது, அதன் முகவுரையில் குறிப்பிடப் பட்டுள்ள ‘சோஷலிஸ்ட்‘ என்னும் பதத்தை எப்போதும் முழுமையாகச் சிந்தையில் இருத்திச் செயல்வடிவம் கொடுக்க முனைந்த வெகு சிலரில் ஒருவர் நீதியரசர் சின்னப்ப ரெட்டி என்று பல ஆய்வாளர்கள் பெரு மிதத்துடன் குறிப்பிடுகிறார்கள்.

அரசியலமைப்புச் சட்ட விற்பன்னர், பாதுகாவலர்

நீதியரசர் சின்னப்ப ரெட்டி 1987-இல் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.  பணி நிறைவு நாட்களில், தனது எண்ணங்களையும் எழுத்துக்களையும் நூல் வடிவில் தொகுத்துப் பதிப்பிப்பதன் மூலமாகவும்,  பல்வேறு அரங்கக் கூட்டங்களில் வெவ்வேறு தலைப்பு களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் நாட்டிற்கும், சமூகத்திற்குமான தனது சேவையைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.  கர்நாடக அரசின் 3-ஆவது பிற்பட்ட வகுப்பினர் ஆய்வுக் குழுவின் தலைவராகச் செயல்பட்ட சின்னப்ப ரெட்டி, வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்டு பல இன்னல்களை அனுபவித்து வந்த அடித்தட்டு மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் முழுமையாகச் சென்று சேரும் வகையில் அறிவியல்பூர்வமான ஆலோச னைகளை அரசுக்கு அவர் வழங்கினார்.  தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது லஞ்ச  புகார் எழுந்த போது, அது குறித்து ஆய்வு செய்திட அரசு நியமித்த மூவர் குழுவில் ரெட்டியும் இடம் பெற்றிருந்தார். பாபர் மசூதி இடிப்பு குறித்த உண்மைகளை ஆய்வு செய்யும் நோக்குடன் தனிப்பட்ட முறையில் அமைக் கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற குடிமக்கள் விசாரணைக் குழுவில் ஒரு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். சிறந்த மொழி நடையுடன் ஒரு தேர்ந்த எழுத்தாளராக விளங்கிய நீதியரசர் சின்னப்ப ரெட்டி, ஆங்கிலத்திலும், தனது தாய் மொழியான தெலுங்கிலும் ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டார்.

அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது,  “நீதிமன்றமும் இந்திய அரசியல மைப்புச் சட்டமும்: மேடுகள் - பள்ளங்கள் (The Court and the Constitution of India: Summits and Shallows) என்கிற நூல் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சாராம்சத்தை விளக்குவதாக, அதே நேரத்தில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இந்த நூலை ரெட்டி தொகுத்து வடிவமைத்துள்ளார்.  புகழ் பெற்ற கல்வியாளரும், பல்துறை ஆய்வாளருமான உபேந்திர பக்சி இந்தப் புத்தகத்திற்கு வழங்கியுள்ள அருமையான அணிந்துரையில், சின்னப்ப ரெட்டியின் வாழ்வையும் பணிகளையும் சுருக்கமான, அதே நேரம் சிறப்பான முறையில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.   பல்வேறு பணிச் சுமைகளுக்கிடையே மேற்கத்திய இசையின் அபாரமான ரசிகராகவும் சின்னப்ப ரெட்டி இருந்து வந்துள்ளார்.  பின்னாட்களில் முதுமையின் காரணமாகக் கண் பார்வை மங்கிய நிலையில், நாட்டு நடப்பையும், அன்றாட நிகழ்வுகளையும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதலில், செய்திகள் மற்றும் கட்டுரைகளை நெருங்கிய சகாக்களை வாசிக்கச் செய்து கேட்டுக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.  தனது 91-ஆவது வயதில், 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஹைதராபாத்தில் அவர் காலமானார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விற்பன்னராக, அதன் மதிப்புமிகு பாதுகாவலராக, அதன் வழியே இந்திய ஜனநாயகத்திற்குச் செம்மைமிகு சேவை புரிந்தவராக, தனிப்பட்ட வாழ்வில் சிறந்த மார்க்சிஸ்டாக, பொதுவுடைமைக் கோட்பாட்டை ஏற்று பின்பற்றியவராக, வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த நீதியரசர் சின்னப்ப ரெட்டியின் நினைவுகளைப் போற்றுவோம்.

கட்டுரையாளர் :  குஜராத் உயர் நீதிமன்றத்தில்  பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர்  தமிழ் வடிவம்: கடம்பவன மன்னன்


 

;