articles

img

தோழர் பி.எஸ். தனுஷ்கோடி - போராட்டமே வாழ்க்கையாக! - என்.சீனிவாசன்

தோழர் பி.எஸ். தனுஷ்கோடி  - போராட்டமே வாழ்க்கையாக!

பண்ணை அடிமையின் மகனாகப் பிறந்து, சமூக நீதிக்காகப் போராடிய மகத்தான தலைவர் தோழர் பி.எஸ். தனுஷ்கோடி. 1926ஆம் ஆண்டு அக்டோபர் 13இல் பிறந்த இவர், கல்வி இல்லாமலும் வறுமையிலும் வளர்ந்தாலும் மனம் தளராமல் நின்றார். காலை முதல் மாலை வரை பண்ணை யார் வீட்டில் உழைத்த குடும்பம். சாணிப் பால் ஊற்றப்படும் கொடுமைகள், சவுக்கடி வலிகள் - இவையெல்லாம் அன்றாட வாழ்க்கையின் பகுதி. ஆனால் தனுஷ்கோடி அடங்கி விடவில்லை. வேறு இயக்கங்கள், கட்சிகளில் சாதி வெறுப்பால் தாக்கப்பட்டும், மீண்டும் மீண்டும் அவமானப்பட்டும் துடித்த தனுஷ்கோடி, இறுதியில் தோழர் பி.எஸ்.ஆர் வழியில் கம்யூனிசமே விடுதலை எனக் கண்டறிந்தார். “அடித்தால் திருப்பி அடி” என்ற தோழர் பிஎஸ்ஆரின் அழைப்பு அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. மக்கள் போராட்டங்களுக்காக பத்து ஆண்டுகள் சிறைவாசம். சிறையிலேயே எழுதப் படிக்கக் கற்றுக்கொண்ட அவர், 30 ஆண்டுகள் பஞ்சாயத்து தலைவராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.  1943இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினரானார். ஒரு ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும், மனைவி மனோன்மணியின் துணையோடு குடும்பத்தை வளர்த்தார். பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட அவருக்கு இருந்ததே இல்லை. எளிமையும் தன்னடக்கமும் அவரது அடையாளம். வெண்மணி கொடுமையின் நேரடி சாட்சியாகவும் நின்றார். தலைஞாயிறு ஒன்றியத்தை மாநில அளவில் சிறந்த ஒன்றிய மாக மாற்றியதும் அவரது திறமைக்கு எடுத்துக்காட்டு. 2026இல் அவரது நூற்றாண்டு விழா வருகிறது. அவரது போராட்ட வாழ்க்கை இன்றும் நமக்கு வழிகாட்டியாக நிற்கிறது. சமத்துவத்திற்காக அவர் நடத்திய போராட்டம் நமது உத்வேகம். தோழர் பி.எஸ்.டி புகழ் ஓங்குக! அவர் வழியில் நடப்போம்!