articles

img

விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்? - தீபக் பச்சா

போராட்டம் நடத்துகின்ற விவசாயிகள் மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று சர்ச்சைக்குரிய சட்டங்களை
ரத்து செய்வதைத் தவிர வேறு எந்தவொரு சமரசத்திற்கும் ஏன் தயாராக இருக்கவில்லை? அந்த மூன்று
சட்டங்களும் இந்திய விவசாயத் துறையையும், பொது மக்களையும் எவ்வாறு பாதிக்கப் போகின்றன? இந்தக்
கட்டுரை அந்தச் சிக்கல்களை எளிமையான முறையில் விளக்குவதற்கான தாழ்மையான முயற்சி.
விவசாயிகளைக் ஆத்திரத்திற்குள்ளாக்கியிருக்கும் அந்தப் புதிய சட்டங்கள்:
1. விவசாயிகள் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி ஏற்படுத்துதல்)  சட்டம்,
2020 (FPTC சட்டம்)
2. விவசாயிகள் விளைபொருள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாய
சேவைகள் சட்டம், 2020 (FAPAFS சட்டம்)
3. அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்), 2020 (ECA சட்டத் திருத்தம்)

முதலில் விவசாயிகள் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி ஏற்படுத்துதல்) 
சட்டம் (FPTC சட்டம்) குறித்த வாதங்களைக் காணலாம்.
அரசாங்கத்தின் வாதங்கள் என்ன?
எஃப்.பி.டி.சி சட்டம் நடைமுறைக்கு வரும் போது, தற்போது நடைமுறையில் உள்ள ஏபிஎம்சி (வேளாண்
விளைபொருள் விற்பனை சந்தைக் குழு - APMC) விதிமுறைகள் நீக்கப்படும் என்றும், அதன் மூலமாக
மண்டிகளுக்கு வெளியே தங்கள் விளைபொருட்களை நேரடியாக வர்த்தகர்களிடம் விற்றுக் கொள்ளும் வகையில்
மிகப்பரந்த அளவிலான சந்தைகளை விவசாயிகள் பெறுவார்கள் என்றும் மத்திய அரசும், இந்தச் சட்டங்களை
ஆதரிப்பவர்களும் கூறி வருகின்றனர். மேலும் விவசாயிகளை இடைத்தரகர்கள் சுரண்டுவதற்கு இந்தப் புதிய
சட்டம் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், தற்போதுள்ள ஏபிஎம்சி சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் வரியிலிருந்து
வணிகர்கள் வெளியே வருவதற்கும் அது உதவும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஏபிஎம்சி சட்டம் என்றால் என்ன?
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் சில ஆண்டுகள் வர்த்தகர்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து
பொருட்களை வாங்கி வந்தனர். அந்தக் காலகட்டத்தில், பொருளாதார வளம் மிக்க வர்த்தகர்கள்
விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் விளைபொருட்களை வாங்குவதற்கான பல்வேறு அழுத்த
உத்திகளைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களுடைய சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஏபிஎம்சி சட்டம்
உருவாக்கி அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டம் ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைக்கேற்றவாறு வேறுபட்டதாக
இருந்தது. ஏபிஎம்சி சட்டத்தின்படி, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனியாக மண்டிகள் (சந்தைகள்)
இருக்கும். இந்த மண்டிகள் மூலமே விவசாய விளைபொருட்களின் விற்பனை நடந்தது. மண்டிகள் இரண்டு
அடிப்படைக் கொள்கைகளின் கீழ் செயல்படுகின்றன.
1) குறைந்த விலையில் பொருட்களை வாங்குகின்ற வர்த்தகர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதை முடிவுக்குக்
கொண்டு வருதல்.
2) அனைத்து பொருட்களும் முதலில் மண்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அதைத் தொடர்ந்து பேரம்
பேசப்பட்டு வர்த்தகர்களால் அவை வாங்கப்படும்.

ஏபிஎம்சி மண்டிகள் எவ்வாறு செயல்படுகின்றன?
ஒவ்வொரு வட்டாரத்திற்குமென்று தனித்தனியாக அதன் சொந்த மண்டிகள் இருக்கும். குறிப்பிட்ட மண்டியைக்
கட்டுப்படுத்துவதற்காக குழு ஒன்று இருக்கும். குறிப்பிட்ட மண்டியிலிருந்து பொருட்களை வாங்க விரும்புகின்ற
வர்த்தகர்கள் ஏபிஎம்சியிடமிருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறான உரிமம் பெற்ற வர்த்தகர்கள்
மட்டுமே மண்டியிலிருந்து பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.
அறுவடைக்குப் பிறகு, விவசாயி ஒருவர் தனது பொருட்களை மண்டிக்கு கொண்டு வருவார். குழுவிடமிருந்து
உரிமம் வாங்கிய 10 வர்த்தகர்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். சில அத்தியாவசியப் பொருட்களுக்கு,
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விற்பனை விலை (எம்எஸ்பி) இருக்கின்றது. வர்த்தகர்கள்
அந்த குறைந்தபட்ச விற்பனை விலைகளுக்கு மேல் மட்டுமே பேரம் நடத்தி பொருட்களை விவசாயிகளிடமிருந்து
வாங்க முடியும். இந்த முறையில், தங்கள் பொருட்களுக்கு நியாயமான விலையை விவசாயிகள் பெறுவதை
உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. இந்த முறையின்படி, விவசாயி தனது பொருட்களை
தனது வட்டாரத்தில் உள்ள மண்டியில் மட்டுமே விற்க முடியும். அவரது விருப்பத்திற்கேற்றவாறு மற்றொரு
இடத்தில் அவரால் அவற்றை விற்க முடியாது. மேலும், வர்த்தகர் இந்த மண்டி முறைக்கு வெளியே
பொருட்களை வாங்க முடியாது. (மண்டிக்கு வெளியிலும் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை விற்க
அனுமதிக்கின்ற வகையில், பெரும்பாலான மாநிலங்கள் இந்த ஏபிஎம்சி சட்டத்தில் திருத்தம் செய்துள்ளன
என்பதால், மேற்கூறியவை நடைமுறையில் உள்ள அடிப்படை சட்டத்தைப் பற்றியதாக மட்டுமே உள்ளன).
ஏபிஎம்சி அமைப்புகள் குறைபாடுகள் இல்லாதவையா?
நிச்சயமாக இல்லை. தற்போது ஏபிஎம்சி அமைப்புகளில் பல சிக்கல்கள் உள்ளன. காலப்போக்கில் ஏபிஎம்சியில்
ஊழல் மலிந்து போனது. புதிய வர்த்தகர்களுக்கான உரிம நடைமுறை ஏபிஎம்சியில் லஞ்சத்திற்கான
ஆதாரமானது. இவ்வாறு பணம் செலுத்தி உரிமங்களைப் பெற்ற வர்த்தகர்கள் தங்களுக்குள்ளாக கூட்டணிகளை
உருவாக்கிக் கொண்டனர். அதாவது, ஒரு மண்டியில் ஏலம் தொடங்குவதற்கு முன்பாகவே வர்த்தகர்கள்
மத்தியில் (குறிப்பிட்ட பொருளுக்கு) ஒப்பந்தம் எட்டப்பட்டு விடும். எடுத்துக்காட்டாக, ‘இன்று ஒரு கிலோ
வெங்காயத்திற்கு ரூ.10க்கு மேல் விலை வைக்க மாட்டோம்’ என்பதாக வணிகர்களின் கூட்டணி முன்கூட்டியே
தீர்மானித்துக் கொள்ளும். அதன் விளைவாக, தங்கள் விளைபொருட்களை ஏலம் எதுவுமின்றி வர்த்தகர்கள்
நிர்ணயித்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் உள்ளானார்கள். இந்தப் பிரச்சினைக்குத்
தீர்வு காணுமாறு பலமுறை விவசாயிகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்துள்ளன.

புதிய சட்டங்கள் ஏபிஎம்சியில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து வைக்குமா?
புதிய சட்டங்கள் இந்த சிக்கல்களைத் தீர்க்காது. அவை மேலும் ஆழ்ந்த நெருக்கடிக்குள்ளேயே விவசாயிகளைத்
தள்ளும்.
1. புதிய சட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்கள் பொருட்களை எந்த சந்தையில் வேண்டுமானாலும் விற்கலாம்.
அதாவது, நாசிக்கில் உள்ள வெங்காய விவசாயி ஒருவர், தன்னுடைய வெங்காயத்தை கேரளாவில் விற்க
முடியும். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சிறுவிவசாயிகள் தங்கள் விளைபொருட்களை
தொலைதூரச் சந்தைகளுக்கு கொண்டு சென்று 'வர்த்தகம்' செய்வது நடைமுறையில் இருக்கவில்லை.
உண்மையில் தங்களுக்கென்று பெரிய சந்தையை விவசாயிகள் பெறுவதை இந்தச் சட்டம் விரும்பவில்லை. அது
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மலிவான விலையில் விவசாயப் பொருட்களை பெருநிறுவனங்கள்
வாங்குவதையே எளிதாக்கித் தருகிறது.
2. பெருநிறுவனங்களால் இப்போது விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை வாங்க முடியும்.
ஒருவேளை அந்த நிறுவனங்கள் குறைந்த விலையை மட்டுமே தரும் என்றால், ஏபிஎம்சியால் நடத்தப்படுகின்ற
மண்டிகளுக்கு விவசாயிகளால் செல்லலாம். ஏனெனில் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும் இந்த
மண்டிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். சட்டத்தை ஆதரிப்பவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள்.
தனியார் நிறுவனங்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ள அனைத்து துறைகளிலும் உள்ள அரசு அமைப்புகள்
எவ்வாறு முறையாக நாசப்படுத்தப்பட்டுள்ளன என்பதற்குப் போதுமான அனுபவம் நம்மிடம் உள்ளது.
விவசாயத்திலும் இதுதான் நடக்கப்போகிறது.
எடுத்துக்காட்டாக, ஆரம்ப காலகட்டத்தில் பெருநிறுவனங்கள் விவசாயிகளுக்கு மிகச் சிறந்த விலையை
அளிக்கின்றன என்றே வைத்துக் கொள்வோம். ஏபிஎம்சி மண்டிக்கு வெளியே விவசாயிகளிடமிருந்து நேரடியாக
வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது, உரிமத்திற்கான கட்டணத்தையும், வரிகளையும் செலுத்தி
விவசாயிகளிடமிருந்து பொருட்களை மண்டி மூலமாக ​​வர்த்தகர்கள் நிச்சயமாக வாங்க விரும்ப மாட்டார்கள்.
படிப்படியாக ஏபிஎம்சி அமைப்பு பலவீனமடைந்து தனியார் தொழில்முனைவோருக்கான சந்தையாக மாறி
விடும். புதிய சட்டத்தின் கீழ், ஏபிஎம்சி மண்டிகளுக்கு வெளியே செய்யப்படுகின்ற வர்த்தகத்திற்கு, அரசாங்கம்
குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதத்தை அளிக்காது. அப்படியே அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார
விலையை அறிவிக்கிறது என்றாலும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதத்தை அளிக்கும் வகையில்
சந்தையில் தீவிரமாக அரசாங்கம் பங்கேற்காவிட்டால் விவசாயிகளுக்கு அந்த குறைந்தபட்ச விலை
கிடைப்பதற்கான எந்த உத்தரவாதமும் இருக்காது. அதாவது குறைந்தபட்ச ஆதார விலை என்பது வெறுமனே
காகிதத்தில் மட்டுமே இருப்பதாகி விடும்.
3. இந்தச் சட்டங்கள் விவசாயிகளை மட்டுமல்லாது, விவசாயத்தை நம்பியிருக்கின்ற அனைத்து மக்களின்
வாழ்க்கையையும் பாதிக்கும். பஞ்சாப், ஹரியானா போன்ற மாநில அரசுகள் மண்டிகள் மூலம் நடக்கின்ற இந்த
விற்பனை மூலமாக அதிக தொகையை வரியாகப் பெறுகின்றன. அந்த தொகை பல மாநில அரசாங்கங்களின்
வருவாயில் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. வரப் போகின்ற புதிய சட்டம் தற்போது மாநிலங்கள் பெறும்
வரியை இல்லாமல் செய்து விடும்.

4. அறுவடை மோசமாக இருப்பது மட்டுமே விவசாயிகள் கடன்படுவதற்கான முக்கிய காரணமாக
இருக்கவில்லை. தங்கள் விளைபொருட்களுக்கான நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதே அதற்கான
உண்மையான காரணமாக உள்ளது. இந்த சிக்கலைத் தீர்த்து வைக்கின்ற வழிமுறையாக குறைந்தபட்ச ஆதார
விலை இருக்கின்றது. குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு (முழுமையான செலவு +
50%) இருக்க வேண்டும் என்று சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை 2014 தேர்தலில் மோடி
அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகவும் இருந்தது. ஆனால் புதிய சட்டம் இந்த ஆதார விலையைப் பற்றி
எதுவும் குறிப்பிடவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை சட்டப்பூர்வ உரிமையாக மாறினால், புதிய சட்டத்தின்
மூலம் சந்தையை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வதை தங்களுடைய நோக்கமாகக் கொண்டிருக்கின்ற மிகப்
பெரிய பெருநிருவனங்கள் அந்த குறைந்தபட்ச விலையை அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைச் செலுத்த
வேண்டி வரும். பெரிய அளவிலான லாபத்தையும், சந்தைப் பங்கையும் பெறுவதையே தங்களுடைய
குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இந்தப் பெருநிறுவனங்கள் தங்களுடைய கொள்கைகளையே கைவிட்டுவிட
வேண்டியிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காவே, புதிய சட்டம் குறைந்தபட்ச ஆதார விலை என்ற எந்தவொரு
பாதுகாப்பும் இல்லாமல், நியமிக்கப்பட்ட மண்டிகளுக்கு வெளியே வர்த்தகம் செய்ய பெருநிறுவனங்களை
அனுமதிக்கின்றது. உண்மையில், பெருநிறுவனங்களின் சேவையையே இந்த ஆளுகின்ற அரசு தன்னுடைய
கவனத்தில் கொண்டுள்ளது என்பது இந்தச் சட்டத்திலிருந்து மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
5. பொது விநியோகத்திற்காக விவசாயிகளிடமிருந்து மானிய விலையில் இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ)
கொள்முதல் செய்யும் நடைமுறை இந்த சட்டத்துடன் முடிவடைந்து விடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
ஏனென்றால் அது முக்கியமாக மண்டிகள் வழியாகவே செயல்பட்டது. எஃப்சிஐ தொடர்பான பிரச்சனைகளை
ஆய்வு செய்ய 2014ஆம் ஆண்டில் அரசாங்கம் அமைத்த சாந்தகுமார் குழுவின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்று
கையிருப்பைக் குறைப்பதாகும். அந்தப் பரிந்துரையை இந்தப் புதிய சட்டத்தின் மூலமாக
நடைமுறைப்படுத்துவதையே அரசாங்கம் தன்னுடைய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சட்டம் பெருநிறுவனங்களுக்கு எவ்வாறு உதவும்?
ரிலையன்ஸ் ஃப்ரெஷ், டி-மார்ட், பிக் பஜார் போன்ற பெருநிறுவன வர்த்தகர்களுடன் பேரம் பேசி நமது
விவசாயிகளால் ஒருபோதும் தங்களுக்கான சிறந்த விலையைப் பெற முடியாது. அவ்வாறு பெற
வேண்டுமானால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் அவசியம் தேவை. மண்டிகளுக்கு வெளியே
நடைபெறும் வர்த்தகத்தில் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்வதற்கு இந்தப் புதிய சட்டத்தில்
சட்டப்பூர்வமான உறுதி எதுவும் இல்லை. அது பெருநிறுவனங்களுக்கே உதவுகின்றது என்று சிறு விவசாயிகள்
குறை கூறுகின்றனர். பீகாரில் ஏபிஎம்சி சந்தை முறை கைவிடப்பட்டுள்ள நிலையில், சாலையோரத்தில்
உட்கார்ந்து தங்கள் விளைபொருட்களை சிறுவிவசாயிகள் மிகக் குறைந்த விலையில் விற்று வருகிறார்கள்.
அழிந்துபோகக்கூடிய பொருட்களை பெருநிறுவனங்களைப் போல நீண்ட காலத்திற்கு ஏழை விவசாயிகளால்
சேமித்து வைத்துக் கொள்ளவும் முடியாது. பீகாரின் அனுபவம் விவசாயிகளை அதிகமாகப் பயமுறுத்துகிறது.
 

விவசாயிகள் அல்லாதவர்களையும் சாதாரண மக்களையும் பாதிக்கும் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா?

இந்தியா 70% கிராமப்புற குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழுகின்ற நாடு. இவர்களில் 86% பேர் ஐந்து
ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறுவிவசாயிகள். அவர்களைப் பாதிக்கும் எந்தவொரு பிரச்சனையும்
நமது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கவே செய்யும். ஏகபோக நிறுவனங்கள் இந்தத் துறையில் தங்களை
நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம், பணவீக்கம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏபிஎம்சி
அமைப்பை இழப்பதில் இன்னொரு பெரிய ஆபத்தும் உள்ளது. பணவீக்கம் ஏற்படும் போது,​ பொருட்களுக்கான
சந்தையில் அரசாங்கம் தலையிடும் என்பதையும், மண்டி மையப்படுத்தப்பட்ட சந்தை நுண்ணறிவு மூலமாக
பொருட்களின் விலைகளைப் பற்றிய தகவல்களை அது பெறும் என்பதையும் நாம் அறிவோம். இந்த அமைப்பு
சரிந்தவுடன், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்ற பணியில் இருந்து அரசாங்கம் படிப்படியாக விலகி விடும்.
முன்பே இருந்து வருகின்ற ஏபிஎம்சி மண்டி அமைப்பில் குறைபாடுகள் உள்ளன என்பதில் எந்தவொரு
சந்தேகமுமில்லை. ஆனாலும் அதைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் இந்திய விவசாயத் துறையை
ஒட்டுமொத்தமாக பெருநிறுவனங்களிடம் விட்டுச் செல்கிறது. அது இறுதியில் விவசாயிகளை அழிக்கவே
போகின்றது. ஏபிஎம்சியின் குறைபாடுகளைக் களைவதற்குப் பதிலாக, இந்தச் சட்டம் ஒட்டுமொத்த விவசாயத்
துறையையும் கொல்லப் போகிறது. இப்போதும் கூட குறைந்தபட்ச ஆதார விலை மிகவும் குறைவாகவே உள்ள
நிலையில், இப்போது கொண்டு வரப்படும் இந்தப் புதிய சட்டம் விவசாயிகளின் நிலைமைகளை மேலும்
மோசமாக்கவே செய்யும். அதனால்தான் விவசாயிகள் போராடுகிறார்கள்.

இரண்டாவது குறிப்ப்டப்பட்டுள்ள சட்டமான, விவசாயிகள் விளைபொருள் (அதிகாரமளித்தல் மற்றும்
பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், 2020 (FAPAFS சட்டம்) விவசாயிகளை
பெருநிறுவனங்கள் மேலும் சுரண்டுவதற்கு எவ்வாறு அனுமதிக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
ஃபபாஃப்ஸ் (FAPAFS) சட்டம் என்றால் என்ன?

இந்த சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள பெருநிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்த விவசாயத்தில்
ஈடுபடுவதற்கு அனுமதி அளிக்கப்படும். அதாவது, ஒப்பந்தத்தின் மூலமான ஆயுதத்தை ஏந்துவதற்கு முன்பாக,
உற்பத்தியின் விலை மற்றும் தரம் நிர்ணயிக்கப்படும். அதாவது தன்னுடைய விளைபொருட்களுக்கான
உத்தரவாதமான, நிலையான விலை விவசாயிக்கு கிடைக்கும். ஆனால் அந்தக் கதை அங்கே முடியப்
போவதில்லை.

விவசாயிகள் சொல்கின்ற அபாயங்கள் என்ன?
1. பெருநிறுவனங்கள் எந்தவொரு ஒப்பந்தத்திற்குள்ளும் நுழையும் போது, ‘நிபந்தனைகள் பொருந்தும்’
என்றதொரு குறிப்பு அதில் இருக்கும் என்பது நமக்குத் தெரியும். படித்தவர்களால்கூட துல்லியமாக அந்த
நிபந்தனைகளைப் புரிந்து கொண்டு தலையிட முடியாத நிலைமையில், அந்த ஒப்பந்தச் சட்டத்தில் உள்ள
சிக்கல்களை ஏழை விவசாயிகளால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? பெருநிறுவனங்களுடனான சட்டப்
போர்களில் சிறு விவசாயிகளால் ஒருபோதும் வெல்ல முடியாது. (சிவில் நீதிமன்றத்திற்கு நேரடியாகச்
செல்வதற்கு இந்தச் சட்டம் அனுமதிக்கவும் செய்யாது). எடுத்துக்காட்டாகக் கூறுவதென்றால், தரமான
சோயாபீன்களுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,000 என்று மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருடன்
சோயாபீன் பயிர் ஒப்பந்தத்தில் ஐ.டி.சி கையெழுத்திட்டது. அறுவடை நேரத்தில், விளைபொருள் தரமற்றது
என்று கூறி குற்றம் சாட்டிய அந்த நிறுவனம், குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் மட்டுமே தருவதாகக்
கூறியது. ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட விலையிலிருந்து, விலையை மாற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகள்
குறித்து அந்த ஒப்பந்தத்தில் ஏற்கனவே சில தெளிவற்ற பத்தி இருந்திருக்கும்!
2. முதல் சட்டம் மண்டிகளுக்கு வெளியே குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதங்கள் இல்லாமல்
வர்த்தகம் செய்து கொள்வதை அனுமதிப்பது போலவே, ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும்போதும் நிறுவனங்கள்
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைத் தர வேண்டும் என்று சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை
அளிக்கும் வகையில் புதிய சட்டத்தில் எந்த ஏற்பாடும் இருக்கவில்லை.
3. புதிய சட்டத்தின் கீழ், ஒப்பந்தத்தில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் விவசாயிகள் நேரடியாக சிவில்
நீதிமன்றத்தை அணுக முடியாது. ஒப்பந்தத்தில் உள்ள எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பது சப்டிவிஷன்
மாஜிஸ்திரேட்டால் அமைக்கப்படுகின்ற குழுவின் பொறுப்பாகும்.
4. கலப்பின விதை உற்பத்தி தொடர்பான ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, புதிதாக
உருவாக்கப்படுகின்ற விதைகளுக்கான உண்மையான செலவில் 25% மட்டுமே அந்த நிறுவனங்கள் முதலில்
தருகின்றன. விதைகளின் மரபணு தூய்மை குறித்த சோதனை வெற்றிகரமாக முடிந்த பின்னரே மீதமுள்ள 75%
தொகை விவசாயிக்கு வழங்கப்படும். அந்த சோதனையின் விளைவாக 70 முதல் 80 நாட்கள் தாமதமாகவே
விவசாயிகளால் பணத்தைப் பெற முடியும் என்பது அவர்களைப் பெரும் துயரத்திற்கே இட்டுச் செல்லும்.
5. எஃப்.சி-5 உருளைக்கிழங்கு விதைகளில் ஏகபோக உரிமையை பெப்சிகோ நிறுவனம் கொண்டுள்ளது.
லேய்ஸ் சிப்ஸ்கள் தயாரிக்க அந்த உருளைக்கிழங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. பெப்சிகோ நிறுவனம்
தங்களுடைய ரக உருளைக்கிழங்குகளைப் பயிரிட்டதாகக் கூறி குஜராத்தைச் சேர்ந்த நான்கு விவசாயிகள் மீது
வழக்கைத் தொடர்ந்தது. எதிர்ப்புக்கள் தீவிரமடைந்த நிலையில், பெப்சிகோ அந்த வழக்கை வாபஸ் பெற்றுக்
கொண்டது. இதுபோன்றதொரு புதிய சட்டத்தின் பின்னணியில், பெருநிறுவனங்கள் விவசாயிகளைச்
சுரண்டுகின்ற போது, ​​அவர்கள் எப்போதும் நீதிக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். நம்
விவசாயிகளில் பெரும்பாலோருக்கு அது சாத்தியமற்றதாகவே இருக்கும்.

ஒப்பந்த விவசாயத்தில் உள்ள மோசமான பிரச்சனைகள் என்ன?
ஒப்பந்த வேளாண்மை தொடர்பாக எழும் பிரச்சனைகள் குறித்து சுவாமிநாதன் குழு 2006இல் கூறியிருந்தது
இங்கே குறிப்பிடத்தக்கது. ‘தங்களுக்குக் கிடைக்கின்ற குறுகிய கால லாபங்களில் மட்டுமே நிறுவனங்கள்

எப்போதும் கவனம் செலுத்துகின்றன. எனவே, அந்த நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு மண்ணின் தரத்தை
பாதிப்பிற்குள்ளாக்கும் விவசாய முறைகளைப் பின்பற்றுமாறு விவசாயிகளை ஊக்குவிக்கக்கூடும். சிறிது காலம்
சுரண்டிய பிறகு, நிறுவனங்கள் மற்ற விவசாயிகளிடம் சென்று விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்குள்ளாக,
ஒப்பந்தத்தில் ஏற்கனவே நுழைந்திருந்த விவசாயியின் நிலம் சாகுபடி செய்யப்பட முடியாத நிலையை
அடைந்திருக்கும். முக்கிய உணவுப் பயிரிலிருந்து விலகி, ஏற்றுமதி மதிப்புள்ள பயிர்களைப் பயிரிட வேண்டிய
கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்படக்கூடும். இது நாட்டின் உணவுப் பாதுகாப்பை பாதிக்கும்’ என்று
சுவாமிநாதன் குழு கூறியிருந்தது. ஏற்கனவே பல மாநிலங்களில் ஒப்பந்த விவசாயம் இருந்து வருகிறது.
அங்கெல்லாம் விவசாயிகளின் வருமானத்தை ஒப்பந்த விவசாயம் மிக மோசமாகப் பாதித்துள்ளது என்றே
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய தோல்வியடைந்த ‘குப்பம் மாடல்’
ஒப்பந்தம் அது போன்றதே ஆகும்).
ஒப்பந்த விவசாயத்தில் ஏதேனும் மோசமான அனுபவங்கள் நமக்கு இருக்கின்றனவா?
நந்தன் பயோமெட்ரிக்ஸ் லிமிடெட் எதிர் அம்பிகா தேவி வழக்கில் மார்ச் முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றம்
தனது தீர்ப்பை வழங்கியது. கேரளாவைச் சேர்ந்த விவசாயியான அம்பிகாதேவி, ஒன்றரை ஏக்கர் நிலம்
வைத்திருக்கிறார். 2004ஆம் ஆண்டில், அவர் சஃபேத் முஸ்லி (வெள்ளை முசிலி) என்ற மருத்துவப் பயிரை
விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை பயோமெட்ரிக்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தம்
ஒரு கிலோவுக்கு ரூ.1000 என்ற விலையில் அம்பிகாதேவியிடமிருந்து விளைபொருளை வாங்கிக் கொள்வது
என்பதாக இருந்தது. ஆனால் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை மீறியது. 2008ஆம் ஆண்டில், அம்பிகாதேவி கேரள
நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அம்பிகாதேவிக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்த நிலையில், ​​அந்த
நிறுவனம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அம்பிகாதேவிக்கு ஆதரவாகவே உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது.
இப்போது அம்பிகாதேவிக்கு ஆதரவாகத் தீர்ப்பு இருக்கிறது என்றாலும், தனக்கு ஆதரவான இறுதி தீர்ப்பைப்
பெறுவதற்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிப் போனது. அம்பிகாதேவியைப் போன்று சாதாரண விவசாயிகள்
எல்லோரும் சட்டப் போரில் வென்றுவிட முடியாது. அவ்வாறு செய்வதற்கான நேரமோ அல்லது நிதி வசதியோ
அவர்களுக்கு நிச்சயம் இருக்காது.
போராடுகின்ற விவசாயிகளிடம் இருக்கின்ற கவலைகள் உண்மையானவை என்பதை இப்போது உங்களால்
காண முடிகிறதல்லவா?

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள விவசாயச் சட்டங்கள் விவசாயிகளை மட்டுமே பாதிக்கின்றன என்று
நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். இதனால் நாம் அனைவருமே கஷ்டப்படப் போகிறோம்.
இந்த மூன்று புதிய சட்டங்களில், மூன்றாவதாக இருக்கின்ற அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம் -
2020 வரவிருக்கும் நாட்களில் அனைத்து சாதாரண மக்களையும் நேரடியாகவே பாதிக்கப் போகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (ஈசிஏ) என்றால் என்ன?
1955இல் நடைமுறைக்கு வந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் (ஈசிஏ) கீழ், அரசாங்கத்தால் சில
பொருட்கள் அத்தியாவசியமான பொருட்களாக அறிவிக்கப்பட்டன. அந்தப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு,
விநியோகம் என்று அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலே இருக்கும். அதாவது, அத்தகைய
பொருட்களை குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாகச் சேமித்து வைத்துக் கொள்ள யாருக்கும் அனுமதி இல்லை.
மேலும், அந்தப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) அரசாங்கமே நிர்ணயிக்கும்
(பொதுமுடக்கத்தின் போது முகக்கவசங்கள் மற்றும் சானிட்டைசர்களுக்கு அவ்வாறு விலை
நிர்ணயிக்கப்பட்டது). சட்டவிரோத கறுப்புச் சந்தை, அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைப்பது
போன்றவற்றைத் தவிர்ப்பதற்கும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இத்தகைய முறை பயன்படும்.
மருந்துகள், உரங்கள், சணல், உணவுப் பொருட்கள், பெட்ரோல், பெட்ரோலியப் பொருட்கள், தீவனம், உணவுப்
பயிர்களின் விதைகள், பழங்கள் உள்ளிட்ட ஒன்பது வகை பொருட்களை உள்ளடக்கியதாக இந்த
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் இருக்கிறது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தற்போதைய திருத்தம் என்ன?

முன்னர் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் உள்ள பட்டியலில் இருந்த தானியங்கள், பருப்பு வகைகள்,
எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை
அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து அகற்றுவதாகவே புதிய சட்டத் திருத்தம் இருக்கிறது.
இருப்பினும், போர், இயற்கைப் பேரழிவுகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் அவை அத்தியாவசியப்
பொருட்களாகக் கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சட்டத்திருத்த விதிகளின்படி, கையிருப்பு வரம்புகளை விதிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும்
விலையின் அடிப்படையிலே இருக்கும். தோட்டக்கலை விளைபொருட்களைப் பொறுத்த வரையில், முந்தைய
12 மாதங்களில் அல்லது கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி என்று எது குறைவாக இருக்கின்றதோ, அந்த
சில்லறை விலையில் 100% அதிகரிப்பு என்பது கையிருப்பு வரம்பை அரசாங்கம் கொண்டு வருவதற்கான
விலையாக இருக்கும். விரைவில் அழுகாத விவசாய உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை, இந்த விலை
முந்தைய 12 மாதங்களில் அல்லது கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி சில்லறை விலை என்று எது குறைவாக
இருக்கின்றதோ, அந்த சில்லறை விலையில் 50% அதிகரிப்பாக இருக்கும்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம் குறித்து அரசாங்கம் என்ன கூறுகிறது?
பொருட்களின் கொள்முதல், விநியோகத்தில் தனியார் முதலீடு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அரசாங்கம்
வாதிடுகிறது.

இந்த சட்டம் எவ்வாறு நம்மை மிகமோசமாகப் பாதிக்கும்?

இதை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்க முயற்சிக்கலாம். எடுத்துக்காட்டாக, புதிய சட்டத் திருத்தத்தின்படி
அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்ட பொருட்களில் உருளைக்கிழங்கும் ஒன்றாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக உருளைக்கிழங்கின் சராசரி சில்லறை விலை ரூ.40. விவசாயிகளிடமிருந்து ஒரு
கிலோ ரூ.20க்கு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் வாங்குகிறது. புதிய அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தத்தின்படி
எந்தக் கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு இல்லாததால், அவர்கள் இரண்டு மாதங்கள் வரை தங்கள் குளிர்
சேமிப்பகத்தில் உருளைக்கிழங்கைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம் (உருளைக்கிழங்கைச் சேமித்து வைத்துக்
கொள்ளும் காலம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்). தேவை அதிகமாக இருக்கும்போது, ஒரு கிலோ ரூ.75க்கு
அது விற்கப்படலாம். சட்டத் திருத்தத்தின்படி, அந்த தொகை ரூ.80ஐத் தாண்டினால் மட்டுமே அரசாங்கத்தால்
கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.
விவசாயிகள் மற்றும் சாதாரண நுகர்வோருக்கு இழப்பை ஏற்படுத்துகின்ற, பெரும் மூலதனத்தைக் கொண்ட
நிறுவனங்களுக்கு லாபத்தை வழங்குகின்ற வகையில் புதிய சட்டங்களில் அரசாங்கம் புத்திசாலித்தனமாக சில
விதிகளைச் செருகியுள்ளது. தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டமானது, பணவீக்கத்தால்
வரும் நாட்களில் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள நடக்கின்ற போராட்டமாகும்.
(இந்த குறிப்பைத் தயாரிப்பதில் உள்ளீடு செய்த எனது நண்பர்களான போர்னி தாமஸ், தீபக் ஜான்சன், லியா
தாமஸ், ரெய்சா பி.சி, சங்கமித்ரா வினயன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி)
மேலும் அறிந்து கொள்ள:
1. For a brief review of agricultural policies pursued by the governments in the recent
past and their neglect of the issues raised by farmers, read this article
http://ras.org.in/a_betrayal_by_governments
2. https://www.theindiaforum.in/article/three-farm-bills
3. https://scroll.in/article/973773/before-the-centre-a-few-states-had-freed-agriculture-
markets-to-attract-investments-and-failed
4. https://ruralindiaonline.org/articles/the-law-related-to-apmcs-is-a-death-warrant/
5.https://thewire.in/agriculture/interview-vijoo-krishnan-aiks-msp-farm-bills-farmers
6. https://thewire.in/rights/farm-bills-agrarian-crisis-p-sainath-mitali-mukherjee
7. https://indianexpress.com/article/explained/farmers-big-concern-and-what-govt-
could-negotiate-7073291/
8. https://www.newsclick.in/explained-why-farm-bills-benefit-corporates-over-
farmers
9. https://frontline.thehindu.com/cover-story/freedom-to-be-
exploited/article32760004.ece
10. https://www.epw.in/journal/2020/40/editorials/imposing-new-inequities.html
11. https://www.epw.in/journal/2020/41/letters/missing-links-farm-bills.html
12. https://www.youtube.com/watch?v=DdKY2bzAgmA
13. https://www.youtube.com/watch?v=8_9W4VC7sbU

தமிழில்: தா.சந்திரகுரு

;