articles

img

கேள்விக் குறியாய் குறுவை சாகுபடி! -சாமி. நடராஜன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தை நம்பி குறுவை சாகுபடியை செய்வதற்கு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டும். இந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீரில்லாததோடு, தென் மேற்கு பருவமழை அடுத்த சில நாட்கள் தீவிரமாக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்தால் தான், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும் சூழல் ஏற்பட்டுள் ளது. காவிரியில் கர்நாடகத்தில் கட்டப்பட்டுள்ள அணை யில் தற்போது குறைவான அளவே தண்ணீர் உள்ளது. மழை பெய்து அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடும் நிலையை கடைப்பிடித்து வருகிறது. 

மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டு காலத்தில் சாகுபடிக்காக ஜூன் 12இல் 19 முறையும், கூடுதலாக அணையில் தண்ணீர் இருந்த காலத்தில் ஜூன் 12க்கு முன்பே 11 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 60 ஆண்டுகள் பாசனத்திற்காக மேட்டூர் அணை தாமதமாகவே திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர் கொள்ளளவு 90 அடியிலும், அணைக்கு நீர்வரத்து சீராக வந்து கொண்டிருந்தால் மட்டுமே சாகுபடி செய்த  பயிர்களை முழுமையாக பாதுகாத்திட முடியும் என்பது  கடந்த கால அனுபவமாக உள்ளது. 

கடந்தாண்டு கூட டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12இல் அணை திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்க ளின் இயல் பாசன குறுவை சாகுபடியைத்தாண்டி 2023ஆம் ஆண்டில் 5.28 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேக மாக குறைந்ததாலும், கர்நாடகம் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்காததாலும் போதிய தண்ணீர் இல்லா மல் அக்டோபர் 10ஆம் தேதியே அணை மூடப்பட்டது. இதனால் போதிய தண்ணீரின்றி குறுவைப் பயிர்கள் காய்ந்து மகசூல் இழப்பை விவசாயிகள் சந்தித்தனர். சம்பா மற்றும் தாளடிக்கு காவிரித் தண்ணீர் கிடைக்கா மல் மழையை நம்பி சாகுபடி சிறிய அளவே நடை பெற்றது.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி  நீர் திறக்காத கர்நாடகம்

காவிரியில் தமிழ்நாட்டின் பாசன உரிமைகளை பாதுகாப்பதற்கு தமிழக விவசாயிகள் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தித் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இடைக்கால மற்றும் இறுதித் தீர்ப்புகளை செயல்படுத்திட நீண்ட சட்டப் போராட்டங்கள் நடைபெற்று இறுதியாக 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கி யது. இதில் ஜூன் 1ஆம் தேதி துவங்கி மே 31 தேதி  வரை மாதவாரியாக கர்நாடகம் காவிரியில் தண்ணீர்  திறக்க வேண்டிய அளவு மற்றும் பற்றாக்குறைக் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக திறக்கவேண்டிய தண்ணீர் உள்ளிட்டவை தெளிவாக இறுதித் தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் அதனடிப்படையில் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறப்பதில்லை குறிப் பாக கடந்தாண்டு மாத வாரியாக தண்ணீர் திறக்கப் பட்ட விபரத்தை பார்ப்போம்.

கடந்தாண்டு ஜூன் துவங்கி மே 15ஆம் தேதி வரை 175. 873 டி.எம்.சி. தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் இக்காலத்தில் கர்நாடகம் திறந்த தண்ணீர் 79.418 டி.எம்.சி. மட்டுமே. மீதி கடந்தாண்டு திறந்திருக்க  வேண்டிய தண்ணீர் 96.456 டிஎம்சி நிலுவையில் உள்ளது. அடுத்து பிப்ரவரி முதல் மே 15 வரை சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக 8.710 டிஎம்.சி தண்ணீர் கர்நாட கம் திறந்திருக்க வேண்டும். இதில் இதுவரை 2.705 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. 

மாதம்           திறக்க வேண்டிய நீர்    பிலிகுண்டுக்கு  வந்தது
                 (டி.எம்.சி)        (டி.எம்.சி)
ஜூன்    9.19     2.83 
ஜூலை     31.24    8.75
ஆகஸ்ட்    45.95    20.00
செப்டம்பர்    36.76    13.59
அக்டோபர்    20.22    12.84
நவம்பர்    13.78    10.40
டிசம்பர்    7.35    5.45
ஜனவரி    2.76    2.61
பிப்ரவரி    2.5    
மார்ச்    2.5    
ஏப்ரல்    2.5    
மே    2.5    
    177.25    76.47

உத்தரவு மட்டுமே போடும் ஆணையம்

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவ தற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் இதற்கு உதவிடும் வகையில் அமைக்கப் பட்டுள்ள காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை தொடர்ச்சியாக கூட்டங்களை மட்டுமே நடத்தி சில உத்தரவுகளை பிறப்பிக்கும் நிலையில் தான் உள்ளது.  கடைசியாக மே 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30ஆவது கூட்டம் ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் குழு குறிப்பாக தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தமிழ்நாடு அரசின் சார்பில் விரிவான அறிக்கையை முன்வைத்து பேசினார்.

அதில் கர்நாடகம் கடந்தாண்டு வழங்க வேண்டிய தண்ணீரில் நிலுவையில் உள்ள நீர் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக வழங்கவேண்டிய தண்ணீரைக் கூட கர்நாடகம் வழங்கவில்லை என்பது குறித்தும், பற்றாக்குறை காலங்களில் நீர் பங்கீட்டுக் கொள்வது குறித்தும் பேசி, தற்போது மேட்டூர் அணை யில் உள்ள நீர் குறித்தும் எதிர்கால பாசன,  குடிநீர், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நீர், இவற்றையெல் லாம் கருத்தில் கொண்டு ஆணையம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறக்க உத்தர விட கோரியுள்ளனர்.

இறுதியாக ஆணையம், கர்நாடகம் மே மாதம் திறக்க வேண்டிய 2.5 டிஎம்சி மற்றும் சுற்றுச்சூழல் பாது காப்பிற்காக வழங்க வேண்டிய அளவை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு இதை செயல்படுத்தவில்லை. இதுபோன்று காவிரி நீர் குறித்து பல உத்தரவுகளை ஆணையம் பிறப்பித்தாலும் கர்நாடகம் அதை செயல்படுத்தவில்லை. ஆணையத்தின் செயல்பாடு கள் உத்தரவு போடுவதோடு நின்று விடுகிறது. இந்த உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான சட்டரீதி யான நடவடிக்கைகளை ஆணையம் எடுப்பதில்லை. இதனால் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது. 

மேகதாட்டு மற்றும்  சிலந்தி ஆற்று அணைகள்

காவிரி நீரை பயன்படுத்தும் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்கு நேர் எதிராக கர்நாடக அரசு காவிரியில் மேகதாட்டில் புதிய அணை கட்டுவதற்கான தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தா லும் மேகதாட்டு அணை கட்டும் பிரச்சனையை துவக்குகின்றனர். காவிரி நீர்ப்படுகையில் அணைக் கட்டுகள், சிறிய நீர்பாசனத்திட்டங்கள் துவங்க வேண்டுமென்றால் சம்மந்தப்பட்ட 4 மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. இது குறித்து காவிரி ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டு மென உள்ளது. ஆனால் ஆணையத்தின் 29ஆவது கூட்டத்தில் மேகதாட்டில் புதிய அணை கட்டுவதற் கான கோரிக்கையை ஆணையக் கூட்டத்தில் பரிசீல னைக்கு எடுத்துக் கொண்டு ஆணையம், ஒன்றிய அரசிற்கு கருத்துக்கேட்டு தீர்மானம் அனுப்பியது சட்டத்திற்குப் புறம்பானது. மேலும் அமராவதி அணைக்கு வரும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு புதிய தடுப்பணை கட்டும் பணியை துவக்கி யுள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கிடும். குறிப்பாக கேரள நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலிருந்து கபினி அணைக்கு வரும் 21 டி.எம்.சி தண்ணீரில் 17 டி.எம்.சி தண்ணீரை தமிழ் நாட்டிற்கு தர  உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவிட்டுள் ளது. இதை ஆணையம், கண்காணித்து தமிழகத்திற் குரிய தண்ணீர் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக காவிரிப்படுகை ஆறுகளில் புதிய நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டுகள் கட்டுவ தற்கு கர்நாடக, கேரள அரசுகள் எடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் தான். இவற்றை தமிழ்நாடு அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்திட வேண்டும். 

குறுவை சாகுபடி - அணை திறப்பு: அரசின் நிலைபாட்டை தெளிவுபடுத்துக!

தற்போது மேட்டூர் அணையில் 46 அடி மட்டுமே நீர்உள்ளது. (1.6.2024ன்படி) காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என சுமார்  16 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற வேண்டும். ஜுன் 20 தேதிக்குள் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் தான் குறுவை சாகுபடியை செய்யமுடியும். இந்த நிலையில், காவிரியில் கடந்தாண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள தண்ணீரை பெறுவதற்கும், ஜுன் மாதத்தில் பெற வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரை பெறுவதற்கும் அரசு நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மழை மற்றும் ஆழ்குழாய் பாசனம் மூலம் நடை பெறும் குறுவை சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகை யில் இந்தாண்டும் குறுவை தொகுப்புத் திட்டம் வழங்கு வது குறித்தும், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் எந்தப் பட்ட சாகுபடிக்கு தயாராக வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை விவசாயிக ளுக்கு தெளிவுபடுத்திட வேண்டும். 

ஆற்றுப்பாசனத்தை மட்டுமே  நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு அரசின் நிவாரணம் வழங்குவது குறித்தும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

கட்டுரையாளர்: பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்



 

;