articles

img

‘பாரத் மாதா கீ ஜெய்’யையும் கைவிடுவார் மோடி!-க.கனகராஜ்

நமது ஊர்களில் மிகவும் துயரமான நிலையில் இருக்கும் குடும்பங்கள் அவர்கள் வழிபடும் கோவிலுக்கு சென்று, இவ்வளவு கஷ்டப்படுகி றோமே, ‘உனக்கு கண்ணு இல்லையா; நாங்க பேசுறத கேக்குறதுக்கு உனக்கு காது இல்லையா என்று சாமி யோடு சண்டை போடுவதை பார்த்திருக்கிறோம். இப்படி கல்லு மாதிரி உக்காந்து இருக்கியே, நீயெல்லாம் நாச மாத்தான் போவ என்று கடவுளுக்கு சாபம் கொடுப்பதை பார்த்திருக்கிறோம். பொதுவாக, தினசரி கோவிலுக்கு போகாதவர்கள் கூட இக்கட்டான சூழ்நிலையிலும், துயர நிலைகளிலும் கடவுளை நாடுவதையும் உரை யாடுவதையும் சண்டையிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் - இல்லை என்பதைத் தாண்டி, இறை நம்பிக்கையுள்ள ஒருவர் எப்போதும் அப்படித்தான் நடந்து கொள்வார். இது இயல்பு.

திடீரென வந்த ‘ஜெகந்நாத்’

ஆனால், இந்த இயல்புக்கு மாறாக இந்த முறை மோடியின் குடும்பம், மோடியின் உறுதிமொழி என்றெல்லாம் சுய புராணங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசிய நரேந்திர மோடி, தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதால் ‘வெற்றிக் கொண்டாட் டத்தில்’ களையிழந்து காணப்பட்டார். இதுவும் கூட  இயல்பு தான். அதை யாரும் குறை சொல்ல முடி யாது. 

ஆனால் அவர் பேச ஆரம்பித்தபோது, வழக்கமாக சொல்லும் பாரத் மாதா கீ ஜெய், ஜெய் ஸ்ரீ ராம் என்பதை பாரத் மாதா கீ ஜெய், ஜெய் ஜெகந்நாத் என்று மாற்றிவிட்டார்.

பக்தியில் திளைக்கும் ஒருவர் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இடுக்கண் வரும்போது கடவுளை மறக்க மாட்டார். அவர் உண்மையில் அந்தக் கடவுளை நம்பியி ருந்தால் அப்படித்தான் நடந்திருக்கும். ஒருவேளை கோபம் இருந்தால் ஜெய் ஸ்ரீ ராம் என்பதை கூட சொல்லாமல் விட்டிருக்கலாம். ஆனால், அதற்கு பதிலாக ஜெய் ஜெகந்நாத் என்று முழங்கியிருப்பது, அவர் ராமரை கடவுளாக பார்க்கவில்லை, ஒரு அரசியல் கருவியாகத்தான் பார்த்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. 

இதைத்தான் நீண்ட நெடுங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர கட்சிகளும் சொல்லிக் கொண்டிருந்தன. மோடிக்கு இந்து மதத்தின் மீதோ, ராமரின் மீதோ எந்தவிதமான நம்பிக்கையும், பக்தியும் கிடையாது. தனது அரசியல் நோக்கத்திற்காக ராமர் பெயரை பயன்படுத்திக் கொள்கிறார் என்று சொல்லி வந்தனர். 

ராமரின் பெயரால்  ஏவப்பட்ட அட்டூழியங்கள்

அநேகமாக சங் பரிவார் கடந்த 40 ஆண்டு காலமாக அதை முன்வைத்துத்தான் தங்கள் அரசிய லையே வடிவமைத்தார்கள். ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி இருக்கிறது, அதை இடிக்க வேண்டும்; அந்த  இடத்தில் தான் ராமர் கோவில் கட்ட வேண்டும்; இது 500 ஆண்டு கால சபதம்; இதை நிறைவேற்றியே தீரு வோம் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார்கள். அவர்களது தேர்தல் அறிக்கையிலும் பல தீர்மானங்க ளிலும் ராமர் கோவில் என்பது அவர்களின் பிரதான ஆயுதமாக இருந்தது. அரசமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து, பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில், பொது சிவில் சட்டம் என்பதெல்லாம் அவர்க ளது பிரதான முழக்கங்களாக இருந்தன. இந்த தேர்த லின் போதும், தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே ராமர் கோவிலை திறந்து விட வேண்டும்; அதை ஒரு பேசு பொருளாகவும் தேர்தல் ஆயுதமாகவும் பயன் படுத்த வேண்டும் என முயற்சித்தார்கள். பிரதம மந்திரியான நரேந்திர மோடியே  பிரதம பூசாரியாக மாறிப் போனார். நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு வந்து ராமர் கோவில் திறப்பை ஒளித்திரையில் பார்ப்பதாக ஒரு நாடகம் நிகழ்த்தி விட்டுப் போனார். 

தேர்தலில் ராமர் கை கொடுப்பார் என்றார்கள். ராம ராஜ்ஜியம் தான் எங்கள் இலக்கு என்றார்கள். தாங்கள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ராம ராஜ்ஜியம் நடப்பதாக பேசித் திரிந்தார்கள். தேர்தல் பிரச்சா ரங்கள் தொடங்கிய பிறகு முதல் கட்ட தேர்தலுக்குப் பின்பாக தன் வெறுப்புப் பேச்சுகளை மேலும் வன்மத் தோடு முன்வைத்த நரேந்திர மோடி, ராமர் கோவில் திறப்பிற்கு வராதவர்களை கடுமையாக சாடினார். எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் என்று அடிவயிற்றிலிருந்து கூவித் திரிந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்க் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் ராமர் கோவிலை இடித்தே விடுவார்கள் என்று பயம் காட்டினார்.

உ.பி.மக்கள் அடித்த அடி

இவை அனைத்தையும் மீறி உத்தரப்பிரதேசத்தில் பாஜக மண்ணை கவ்வியது. பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. வாரணாசி தொகுதியில், நரேந்திர மோடி சில சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது பின்தங்கியிருந்தார். அவருடைய தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட போது நரேந்திர மோடியின் வெற்றி வாக்கு வித்தியாசம் குறைந்து போயிருந்தது. உண்மையில் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற தலைவர்களில் நரேந்திர மோடியின் வாக்கு வித்தியா சம் தான் மிகக் குறைவு. 

இதேபோன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு மோடியால் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தி- பைசாபாத் நாடாளுமன்ற தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அவ தேஷ் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி கொண்டது பாஜக வேட்பாளரை. அந்த பாஜக வேட்பா ளர் லல்லுசிங் தான் 400 நாடாளுமன்றத் தொகுதி களை வெற்றி பெறச் செய்தால் நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி காண்பிக்கிறோம் என்று கொக்க ரித்தவர். இதில் இன்னொரு முக்கியமான விஷயம். அது பொதுத் தொகுதி. சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டி யிட்டு வென்றவர் பட்டியல் இனத்தை சார்ந்தவர். 

முசாபர் நகரின்  சரியான பதிலடி

இதேபோன்று, 2013 ஆம் ஆண்டு முசாபர் நகர் மற்றும் அருகில் உள்ள ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் மீது மிகப்பெரும் வன்முறை சங் பரிவார் அமைப்புகளால் கட்டவிழ்த்துவிடப்பட்டு, அந்த  மக்கள் எல்லாம் சொந்த ஊர்களிலிருந்து அடித்து விரட்டப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான இஸ்லாமி யர்கள் தங்கள் சொந்த ஊரைவிட்டு உயிருக்கு பயந்து ஓடியதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிச் சென்ற இஸ்லாமியர்களை நம்பிக்கையூட்டி மீண்டும் அந்த கிராமங்களுக்கு வரவழைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிவாரண உதவிகளை வழங்கியது. இதேபோன்று, முற்றிலும் சேதப்படுத்தப்பட்ட 60 குடும்பங்களுக்கு வீடுகளை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 2014இல் கட்டி கொடுத்தது. ஏக்தா காலனி என்று அதற்கு பெயரிட்டார்கள் மக்கள். இரண்டை யும் உண்டியல் ஏந்தி நிதி திரட்டித்தான் செய்து  கொடுத்தோம். கேரள, மேற்கு வங்க மாநிலக்குழுக்கள் இதில் பெருமளவுக்கு உதவின. 

இந்த முசாபர் நகரை லட்சுமிபூர் என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று சங் பரிவார் கொக்கரித்துக் கொண்டே இருந்தது. முசாபர் நகர் நாடாளுமன்றத் தொகுதியில் தற்போதைய மத்திய அமைச்சரும், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலில் முக்கிய குற்ற வாளியுமான சஞ்சீவ் பால்யானை சமாஜ்வாதி கட்சியின் ஹரேந்திர சிங் மாலிக் தோற்கடித்துள்ளார். 10 ஆண்டுக ளுக்கு பிறகு அந்த தொகுதியை சமாஜ்வாதி கட்சி கைப் பற்றியுள்ளது.

இதைப்போன்று, ஷாம்லி நாடாளுமன்ற தொகு தியில் 1996க்கு பிறகு இப்போது சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி பெற்றவர் இக்ரா சௌத்ரி என்ற 28 வயதே ஆன இஸ்லாமிய இளம்பெண்.

இன்னும் தோற்றுப் போனால்...

இவையெல்லாம் நரேந்திர மோடியை எரிச்சல் அடைய வைத்துள்ளது. ராமர் மீது ஆத்திரமடைய வைத்துள்ளது. எனவேதான் அவர் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஜெய் ஸ்ரீ ராம் சொல்வதை தவிர்த்திருக்கிறார். உண்மையான பக்தர்கள் யாரும் அப்படி செய்யமாட்டார்கள். தோல்வியில் துவண்டு விடாமல் இருக்க இறைவா என்று தஞ்சம் அடை வார்கள். மோடி, பாஜகவைப் பொறுத்தவரை ராமர் ஒரு அரசியல் கருவி மட்டுமே. அது பலன் கொடுக்கும் வரைக்கும் அதைக் கொண்டாடுவது போல நடிப்பார் கள். சங் பரிவார் மொத்தமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. ஒருவேளை இன்னும் தோற்றுப் போய் ஆட்சியே அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டி ருந்தால் பாரத் மாதா கீ ஜெய் என்கிற முழக்கத்தையும் அவர் கைவிட்டிருப்பார். அதேபோன்று இந்துக்களில் பெரும்பான்மையினர் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால் இந்துக்களுக்காக பேசுவதாக தற்போது நாடகத் தன்மையுடன் நடத்திவரும் பிரச்சாரங்களும் முடிவுக்கு வந்துவிடும். 

எனவே, தேச பக்தி, இந்து சார்பு அரசியல், ராமர் புகழ் பாடுதல் அனைத்தும் அவர்களைப் பொறுத்த வரை தேர்தலில் வாக்கு பெறுவதற்கான உத்திகளே அன்றி தேச பக்தியோ, ஆன்மீகமோ, ராம பக்தியோ அல்ல.

கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)





 

;