பூமியின் உள்பகுதி அடர்த்தியான வெப்ப மையமும் அதைச்சுற்றி மேக்மா எனும் குழம்பினாலும் பாறைகளாலும் ஆனது. வெளிப்புற பாறைப் பரப்பில் ஏராளமான அளவு தண்ணீர் உள்ளது. அது பூமியின் மேற்பரப்பில் உள்ள நதிகள் மற்றும் ஏரிகளில் உள்ள தண்ணீரின் அளவை விட ஆயிரம் மடங்கு அதிகம். ஆனால் நிலத்தடி நீர் மிகப் பெரும் அளவில் எடுக்கப்படுவதால் 1993க்கும் 2010க்கும் இடையே பூமி கிழக்குப் புறமாக 80செ.மீ சாய்ந்துவிட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு புவி இயற்பியல் ஆய்வு இதழில் வெளிவந்துள்ளது. அதிக அளவு தண்ணீர் எடுப்பது மேற்கு வட அமெரிக்காவிலும் வடமேற்கு இந்தியாவிலும் நடந்துள்ளதாக அது தெரிவிக்கிறது. இது புவியின் பருவ நிலைகளை பாதிக்கலாம் என அது மேலும் கூறுகிறது. 2016இல் நடத்தப் பட்ட இன்னொரு ஆய்வு, பனிப் பாறைகள் மற்றும் பனித் தகடுகள் ஆகியவற்றின் பொருள்திணிவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பூமியின் மேற்பரப்பில் உள்ள தண் ணீரின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றுடன் பூமியின் சுழலும் அச்சின் சாய்வு மாற்றத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்கிறது.