articles

img

நிலவுக்குச் செல்லும் முதல் பெண் வீராங்கனை

     ஐம்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நாசா நிலவுக்கு அனுப்பவிருக்கும் ஆர்டிமிஸ் 2 திட்டத்தின்கீழ் நிலவுக்குச் செல்லும் நான்கு வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதன்படி கிறிஸ்டினா காச் என்பவர் நிலவுக்குச் செல்லும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். விக்டர் க்ளோவர் நிலவுக்குச் செல்லும் முதல் கறுப்பின வீரர். ரீட் வைஸ்மேன் ஜீரமி ஹான்சென் ஆகியோர் 2024 அல்லது 2025 தொடக்கத்தில் நிலவைச் சுற்றிவரும் கலனில் இடம்பெறவுள்ள மற்ற இரு வீரர்கள்.

    தரையிறங்கப்போவதில்லை என்றாலும் இவர்கள் நிலவைச் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்வர். நிலவில் தீவிர ஆய்வுகளை நடத்தவிருக்கும் ஆர்டிமிஸ் 3 திட்டத்தின் முன்னோடியாக இந்த ஆய்வுகள் அமைந்திருக்கும். மூன்று அமெரிக்க வீரர்களுடன் கனடாவைச் சேர்ந்த மற்றொருவர் டெக்சாசில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

   வரும் நாட்களில் இவர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொள்வர். தன் ஆய்வுத்திட்டங்களில் அதிக பன்முகத்தன்மையை நாசா கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. ஒரு பெண் மற்றும் வெள்ளையர் அல்லாத ஒரு வீரரை நிலவுக்கு அனுப்பிவைப்பதன் மூலம் தான் அளித்த வாக்குறுதியை நாசா நிறைவேற்றியுள்ளது. இதற்கு முன் நிலவுக்குச் சென்றவர்கள் அனைவரும் வெள்ளையர்களே.

யார் இந்த வீரர்கள்?

    ரீட் வைஸ்மேன் 47 வயது நிரம்பிய அமெரிக்கக் கப்பற்படை விமானி. நாசாவின் விண்வெளி வீரர்கள் அலுவலகத்தின் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். 2015இல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். விக்டர் க்ளோவர் 46 வயதான அமெரிக்கக் கப்பற்படை பரிசோதனை விமானி. 2013இல் நாசாவில் சேர்ந்த இவர் 2020இல் தன் முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீட்டிக்கப்பட்ட ஆறு மாத காலத்திற்கு பணி புரிந்த இவரே விண்வெளியில் ஆய்வுகள் நடத்திய முதல் ஆப்பிரிக்க அமெரிக்க வீரர்.

முதல் பெண் வீராங்கனை

     44 வயதான கிறிஸ்டினா காச் ஒரு மின் பொறியியலாளர். விண்வெளியில் அதிக நாள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட சாதனையைப் படைத்த இவர் 2019 அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் மட்டுமே பங்கேற்ற ஆய்வுத்திட்டத்தில் இவரும் ஒருவர். 320 நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் நடத்தினார். நாசாவின் மற்றொரு பெண் வீரர் ஜெசிகா மேய்ர் என்பவருடன் இணைந்து 2019 அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பெண் வீரர்களின் விண்வெளி நடத்தலில் பங்குகொண்டார்.

      47 வயதான ஜீரமி ஹான்சென் கனடிய விண்வெளி முகமையில் சேரும் முன்பு ராயல் கனடியன் விமானப்படையின் போர் விமானியாக இருந்தார். இதுவரை இவர் விண்வெளிக்குச் சென்றதில்லை. நிலவென்னும் அதிசயத்தை ஆராயச் செல்லும் ஆர்டிமிஸ் 2 திட்டம் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் அயராத உழைப்பின் பலனாக நிறைவேறவுள்ளது. இது நாசாவின் நிலவுப் பயணக்குழு மட்டுமல்ல. மனிதகுலத்தின் நிலவை நோக்கிய பயணக்குழு என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறியுள்ளார்.

    இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக்கதை உள்ளது. ஆனால் இவர்கள் அனைவரும் இணைந்து மனிதகுல நன்மைக்காக நிலவை நோக்கிய பயணத்தில் இணைகின்றனர். வருங்கால விண்வெளி ஆய்வுகளில் இப்பயணம் புதிய சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாசாவின் ஓரியான் கலன் 2022இல் ஆளில்லாத பறத்தலை வெற்றிகரமாக நடத்தியது. இக்குழுவில் வைஸ்மேன் கமாண்டராக செயல்படுவார்.

க்ளோவர் கலனை செலுத்தும் விமானி

    . மற்ற இருவரும் திட்டத்தின் சிறப்பு நிபுணர்களாக செயல்படுவர். சரித்திரம் திரும்புகிறது நிலவுக்கு முதல்முறையாக சென்ற 1968 அப்போலோ8 திட்டத்தின் வரலாற்றை ஆர்டிமிஸ்2 மீண்டும் படைக்கவிருக்கிறது. அப்போது நிலவுக்குச் சென்றவர்கள் நிலவின் அடிவானத்தில் இருந்து பூமி உதயமாகும் எர்த் ரைஸ் (Earthrise) என்ற புகழ்பெற்ற பூமியின் எழில் கொஞ்சும் புகைப்படத்தை எடுத்தனர். இம்முறை 21ஆம் நூற்றாண்டில் நாசாவால் செயல்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பத்தின் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

    கிரேக்க புராணத்தில் அப்போலோ தேவனின் இரட்டை சகோதரிகளில் ஒருவரான ஆர்டிமிஸ் தேவதையின் பெயரே இத்திட்டங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓரியான் என்று பெயரிடப்பட்ட கலனுடன் புதிய தலைமுறை ஏவுவாகனத்தை நாசா 2022இல் பரிசோதித்தது. ஆட்கள் இல்லாத இந்த ஆர்டிமிஸ்1 திட்டம் நிலவை 25 நாட்கள் சுற்றிவந்தது. நிலவுத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் வன்பொருட்களைப் பரிசோதிக்க பொறியியலாளர்களுக்கு இது உதவியது.

   இப்போது அறிவிக்கப்பட்ட குழுவினர் ஆர்டிமிஸ்2 கலனில் 10 நாட்கள் நிலவைச் சுற்றி வந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வர். 1972 டிசம்பரில் நடந்த அப்போலோ 17 திட்டமே நாசாவின் கடைசி நிலவுப் பயணம். மனிதனின் முதல் நிலவுப் பயணம் 1969இல் நிகழ்ந்தது. ஆர்டிமிஸ் 2 திட்டம் நிறைவேறியபின் 12 மாதங்கள் கழித்து ஆர்டிமிஸ் 3 திட்டம் செயல்படுத்தப்படும்.

    மனிதர்களை  நிலவில் இறக்கி ஆராயும் இத்திட்டத்திற்கான ஏவுவாகனம் பிரபல தொழிலதிபர் இலான் மஸ்க்கின்  நிறுவனத்தினால் ஸ்டார்ஷிப் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு அதன் சோதனைப்பறத்தல் வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. வருங்காலத்தில் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டத்தின் முக்கிய கட்டமாக ஆர்டிமிஸ்3 கருதப்படுகிறது. ஆர்டிமிஸ்2 அதற்கு முன்னோடியாகஉள்ளது என்பதால் இது மனிதகுலத்திற்கு மிக முக்கியமான திட்டம் என்று விக்டர் கூறியுள்ளார்.

ஆர்டிமிஸ்2 திட்டத்தில் நிலவுக்குச் செல்லும் முதல் பெண், முதல் கறுப்பின வீரர் மற்றும் கனடாவின் முதல் விண்வெளி வீரர் உட்பட நால்வர் அடங்கிய இக்குழு மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக உலகின் கோடிக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதியாகவே நிலவுக்குச் செல்கிறது என்று கட்டுப்பாட்டு மையங்களின் தாயகம் என்று அழைக்கப்படும் நாசாவின் ஜான்சன் விண்வெளிப் பறத்தல் மையத்தின் இயக்குனர் வனேஸா வைச்சி கூறியுள்ளார்.

   பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்டிமிஸ்2 திட்டம் மனிதனின் வேற்று கிரக வாசம் பற்றிய கனவுகளை நனவாக்க உதவும் பல அரிய தகவல்களைக் கொண்டுவரும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

;