around-world

img

வண்ணக்கதிர்- அறிவியல் கதிர்

பரிணாமும் கர்ப்ப காலமும்

டைனோசார்களின் காலத்தில் பாலூட்டிகள் ஒரு பூனையளவே பெரிதாக இருந்தன. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு எரிகல் பறக்கும் டைனோசர்கள் தவிர மற்ற டைனோசர்களை மொத்தமாக அழித்தபின் பாலூட்டிகள் உருவத்தில் பெரிதாக வளர ஆரம்பித்தன. குறிப்பாக தொப்புள் கொடி மூலம் பெறப்பட்ட உணவை உண்டு வளரும் கருக்களைக் கொண்ட பாலூட்டிகள் பெரிய உருவத்தை பெற்றன. இந்த காலத்தில் மனிதக் கரடிப்பன்றி (Pantolambda bathmodon) என்றழைக்கப்படும் பாலூட்டி வாழ்ந்தது. இவை இன்றைய ஆடு அளவில் பெரிதாக இருந்தன. ஐந்து விரல்கள் கொண்ட கை, கரடி முகம்  மற்றும் பன்றி உடல் கொண்டிருந்தன.இவை  அதிக வளர்ச்சியடைந்த குழந்தைகளை ஈன்றன. இந்த இளம் சிசுக்கள் அதி வேகமாக வளர்ச்சியடைந்தன.  கருப்பையில் நீண்ட நாள் கர்ப்பம் தரிப்பதே பாலூட்டிகளின் வளர்ச்சிக்கு காரணம் என அறிவியலாளர்கள் கருதிவந்தனர். அதை உறுதி செய்யும் விதமாக மனிதக் கரடிப்பன்றியின் படிமப் பற்களை  ஆய்வு செய்ததில் இவை ஏழு மாதம் கர்ப்பம் தரித்து ஓரிரு மாதங்கள் பாலூட்டின;ஒரு வருடத்தில் குழந்தை வளர்ச்சியடைந்தது சில  வருடங்களே உயிர் வாழும் தன்மை கொண்டிருந்தன என்பது தெரிய வந்துள்ளது.பாலூட்டிகளில் எறும்புதின்னி(பிளேட்டிபஸ்)மற்றும் கங்காரு வகை இனங்கள் வாரக்கணக்கில் மட்டுமே கர்ப்பம் தரிப்பவை.அதன்பிறகு குட்டிகளை தங்கள் மடிப்பையில் வளர்க்கின்றன.நவீன தொப்புள்கொடி பாலூட்டிகள் மாதக்கணக்கில் கர்ப்பம் தரிப்பவை. மனிதக் கரடிப்பன்றி இதை ஒத்திருக்கின்றது.. பெரும்பாலானவை இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளே வாழ்ந்தன. வேகமாக வளர்ந்து வாழ்ந்து இளமைக்காலத்தே இறக்கும் இவற்றின் தலைமுறைகள் வேகமாக மாறும்.ஆகவே பரிணாமும் வேகமாக இயங்கியிருக்கும்.ஆனால் பாலூட்டிகள் பூவுலகை ஆட்கொண்டதை எந்த ஒரு தனி இனமும் விளக்கி விடமுடியாது. மனிதக் கரடிப்பன்றி காலத்தில் வாழ்ந்த  மற்ற பாலூட்டி இனங்களும் அதைப்போன்ற வாழ்க்கை சக்கரத்தைக் கொண்டிருந்தனவா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மக்கும் மின்கலம் 
நண்டு ஓட்டிலிருந்து எடுக்கப்பட்ட வேதிப்பொருளை மின்பகுப்பு திரவமாகக் கொண்டு இயங்கும் துத்தநாக மின்கலம் ஒன்றை அமெரிக்க மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளார்கள்.நண்டு ஓட்டில் கைட்டின் எனும் வேதிப்பொருள் உள்ளது. இதிலிருந்து கைடோசன் என்பதை தயாரித்து மின்பகுப்பு திரவமாக பயன்படுத்தப்படுகிறது.1000 மின்கல சுழற்சிக்குப் பிறகும் 99.7% திறனுடன் இயங்குகிறதாம்.இது செயலிழந்தபின் மூன்றில் இரு பங்கு கலத்தை நுண்ணுயிரிகள் மூலம் மக்க வைத்துவிடலாம்.  

முதல் அறுவை சிகிச்சை 
உலகின் முதல் வெற்றிகரமான அறுவை சிகிச்சை 31000 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியாவிலுள்ள போர்னியோவில் கண்டெடுக்கப்பட்ட 31000 ஆண்டு பழமையான இளவயது மனிதனின் எலும்புக்கூட்டில் கால் எலும்பை ஆய்வு செய்ததில் இடது கீழ்க்கால் அறுவையின் மூலம் நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் குணமான பகுதி அறுவை காயத்தை சுட்டிக்காட்டுகிறது.இந்த எலும்புக்கூடு 40000 ஆண்டு பழமை யான கிழக்கு கலிமன்டன் குகையில் கண்டெடுக்கப்பட்டது.  

போட்டியா ஒத்துழைப்பா?
உலகில் பூஞ்சைக் காளான்கள் 15 இலட்சத்திலிருந்து 1.5 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை அறிவியலாளர்கள் 140000 இனங்களையே கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு கண்டுகொள்ளப்படாததும் புரிந்துகொள்ளப்படாததுமான பூஞ்சைக் காளான்கள் குறித்து பூஞ்சைக் காளான் நிபுணர் கெயித் செய்ஃபெர்ட் ‘The Hidden Kingdom of Fungi.’ என்கிற புத்தகத்தில் கவனம் ஈர்க்கிறார்.அந்த புத்தகத்திலிருந்து சயின்ஸ் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள். சிலவற்றைப்பார்க்கலாம். பூஞ்சைக் காளானின் பரிணாம வரலாறும் அவை மற்ற உயிரினங்களுடன் ஒத்துழைத்து வாழ்வது குறித்தும் புத்தகம் கூறுகிறது. பூஞ்சைக்காளன்களின் இந்த இயைபு சுற்று சூழல் மற்றும் பரிணாமம் குறித்த அறிவியலார்களின் பார்வையை மாற்றுகிறது. டார்வினின் பரிணாம தத்துவம் உயிரினங்களிடையே நடக்கும் போட்டியும் இயற்கை தெரிவும் குறித்து விளக்குகிறது.ஆனால் அதில் உயிரினங்கள் ஒத்துழைத்து வாழ்வதன் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஒத்துழைப்பின் முக்கியத்துவத்திற்கு புத்தக ஆசிரியர் லிச்சென்ஸ் (கடல்குச்சி) என்கிற உயிரினத்தை காட்டுகிறார். இது கடல் பாசியும் காளானும் இணைந்த ஒரு சிக்கலான உயிரினம். இவை ஒன்றுக்கொன்று நலம் பயக்கும் விதத்தில் சேர்ந்து வாழ்கின்றன. புத்தகம் முழுவதும் மற்ற உயிரினங்களுடன் காளான்கள் கொண்டுள்ள தொடர்பை விளக்குகிறார். பூஞ்சைக் காளான்கள் பூமிக்கடியில் மரத்தின் வேர்களோடு இணைந்து அவை தண்ணீர், சத்து மற்றும் தாது உப்புகள் ஆகியவற்றை பரிமாறிக்கொள்ள உதவு கின்றன.

இதை இணைய வலைப்பின்னல் (world wide web) போல் மரங்களின் வலைப் பின்னல் (wood wide web) என்கிறார். ஒயின், பாலாடைக்கட்டி மற்றும் சாக்லெட் ஆகியவற்றை அளிப்பது பூஞ்சைக் காளான்கள் என்பதை அறிய உணவுப் பிரியர்கள் ஆச்சரியப்படுவார்கள். அதே சமயம் நமது உடலில் தங்கியுள்ள பூஞ்சைகள் குறித்தும் அவை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் குறித்தும் தரப்பட்டுள்ள விவரங்கள் நம்மை அச்சப்பட வைக்கலாம்.  ஏற்கனவே நாம் அவற்றை பெனிசிலின், டெனிம் துணிகள், இறைச்சிக்கு மாற்று ஆகியவற்றிற்கு பயன்படுத்துகிறோம். இப்போது அவை சுற்றுசூழல் தூய்மை, தோலை ஒத்த துணி மற்றும் கட்டிடப் பொருட்கள் ஆகியவற்றிற்கு அவை உதவி செய்கின்றன. எதிர்காலத்தில் நுரை மெத்தைகள், உயிரியல் ஒளிர் விளக்குகள் ஆகியவற்றிற்கு பயன்படலாம். பூஞ்சைக் காளான்களுடன் நமது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். சுற்று சூழலில் அவை குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கின்றன. அவற்றின் பல்லுயிர்த்தன்மை, மக்கவைக்கும் திறமை, கூட்டு வாழ்வு, உயிர் வேதியியல் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது வளம் மற்றும் உடல்நலம் ஆகிய வற்றிற்கு அவற்றுடன் ஒத்துழைக்க முடியும்.

 

;