tamilnadu

img

போக்குவரத்து தனியார்மயமாகாது - சிஐடியு கருத்தரங்கில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி

சென்னை, அக். 16 - தமிழகம் சமச்சீராக வளர்ச்சி கண்டிருப்பதற்கு காரணம் அரசு போக்குவரத்துதான். போக்குவரத்துக் கழகங்கள் தனியார்மயமாகாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். ‘பொதுப்போக்குவரத்து மேம்பாடு’ எனும் தலைப்பில் சனிக்கிழமையன்று (அக்.15) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் நடத்திய இந்த கருத்தரங்கில், தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அரசு பேருந்துகள் ஆற்றும் பங்களிப்பை விளக்கும் ‘என்ஜின் ஆப் தமிழ்நாடு’ எனும் ஆவணப்படத்தை வெளியிட்டு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதன் சுருக்கம் வருமாறு: பேருந்து போக்குவரத்து அரசிடம் இருப்பதால்தான் கடைகோடி கிராமம் வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அளவுக்கு கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பேருந்துகள் உள்ளன. அந்த பேருந்துகளில் பெருமளவு நகரங்களுக்கிடையே இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் மட்டும் 6 நகரப் பேருந்துகளை இயக்குகின்றனர். இதிலிருந்து தமிழகம் மாறுபட்டு கிராமங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டதால், இரட்டை குவளை முறை இருந்த இடங்களில் கூட, அனைவரும் ஒன்றாக அமர்ந்து பயணிக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது; சமூக, பொருளாதார ரீதியாக மாற்றமும் உருவானது.

தினசரி ரூ.8 கோடி நட்டம்

கொரோனா ஊரடங்கு, கொடூரமான டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் இயங்கிய 3 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் 1400தான் தற்போது இயக்கப்படுகிறது. டீசல் விலை உயர்வால் பல பகுதிகளில் மாலை வேளையில் தனியார் பேருந்தை இயக்குவதில்லை. ஆனால், தினசரி 8 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டாலும் போக்குவரத்துக் கழகங்கள் கிராமங்களுக்கு பேருந்துகளை இயங்குகின்றன. மகளிர் இலவச பேருந்து திட்டம்தான் போக்குவரத்துக் கழகங்களை காப்பாற்றி வருகிறது. ஒன்றிய அரசு பொதுத்துறைகளை விற்று வருகிறது. பல மாநிலங்களில் போக்குவரத்து கழகங்கள் தனியார்மயமாகி வருகிறது. ஆனால், தமிழகத்தில் போக்குவரத்து கழகம் தனியார்மயமாகாது. அதற்கு அடையாளமாக புதிய பேருந்துகள் வாங்கவும், ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப்படவும் உள்ளனர். பேருந்துகளை செம்மையாக பராமரித்து இயக்குவது, பொதுப்போக்குவரத்தை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக, சென்னையின் பிரதான சாலைகளில் அரசு பேருந்துகளை இயக்கிவிட்டு, இருச்சக்கர, நான்கு சக்கர வாகனங்களை பக்கத்து சாலைகள் வழியாக இயக்கலாமா என பரிசீலித்து வருகிறோம். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். பொதுப்போக்குவரத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

‘’தமிழகத்தின் என்ஜின் பேருந்து போக்குவரத்து”

நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய சங்கத்தின் தலைவர் அ.சவுந்தரராசன், “இந்தியாவின் மையப்பகுதியில் உள்ள மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழகங்களே இல்லை. சமூகம், சமூக பொருளாதாரம் வளர, சுற்றுச்சூழல் மேம்பட, ஏழை மற்றும் விளிம்புநிலை மக்கள் முன்னேற, நாடு தன்னிறைவு பெற, அந்நியச் செலாவணி அதிகரிக்க, ஏழைகளின் நிலை உயர, ஏழை மாணவர்கள் கல்வி பயில பொதுப்போக்குவரத்து மேம்பட வேண்டும். அனைத்து வகையிலும் தமிழகத்தின் என்ஜினாக பொதுப்போக்குவரத்து உள்ளது” என்றார். “பேருந்துகளின் எண்ணிக்கை, தரம், பராமரிப்பு, ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்காமல் தரமான சேவை வழங்க இயலாது. இதை அரசு நிறைவேற்ற வேண்டும். பொதுப்போக்குவரத்து மேம்பட்டால், சுகாதாரத்திற்கான செலவு குறையும். மகளிர் இலவச பேருந்தால் பெண்களின் வருமானம் உயர்ந்து, சமூக பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது” என்றார். “பொதுப்போக்குவரத்தை காப்பாற்ற, தொழிலாளர்கள் தங்களது வேலை கலாச்சாரம், நேர்த்தியை கடைப்பிடிப்பதோடு, பொதுமக்கள் குறைசொல்வதற்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். பேருந்துகளின் என்ஜின், டயர் உள்ளிட்டவைகள் அதன் ஆயுட்காலத்தை தாண்டி உழைக்கும் வகையில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அதனை தொடரவும், அனைத்து கைத்திறன்களையும் கழகங்களை காப்பாற்ற வெளிப்படுத்திட வேண்டும்” என்ற தனது விழைவை வெளிப்படுத்தினார்.

அதிகாரிகளுக்கும் விழிப்புணர்ச்சி தேவை

கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், “சாலை  விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை யில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பொதுப் போக்குவரத்தை தவிர்த்து, தனிநபர் வாகனம் வைத்திருப்பதை கவுரவமாக பார்க்கின்றனர். இதனால் விபத்து அதிகரிக்கிறது. தமிழக பொதுப்போக்குவரத்தின் திறன், சேவைத்தன்மை பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சிறப்பாக உள்ளது” என்றார். “பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவ தற்கான பார்வை ஆட்சித்துறை அதிகாரி களிடம் இல்லை. வரவு செலவாக மட்டும் பார்ப்பதால், கழகங்களுக்கு போதிய நிதியை ஒதுக்குவதில்லை. இதனால் கழகங்கள் மிகுந்த சிரமப்படுகின்றன” என்று குறிப்பிட்ட அவர், “பொதுப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்ச்சியை மக்களுக்கு மட்டுமின்றி அதிகாரிகளுக்கும் உருவாக்க வேண்டி உள்ளது. பொதுப்போக்குவரத்தை மேம்படுத்த அனைவரையும் இணைத்து பிரச்சாரக் குழுவை உருவாக்குவதற்கான தொடக்கமாக இந்த கருத்தரங்கம் அமைந்துள்ளது” என்றார். ஐஎன்டியுசி முதன்மை பொதுச் செய லாளர் ந.க.நாராயணசாமி, ஏஐடியுசி நிர்வாகி நந்தாசிங், எச்எம்எஸ் நிர்வாகி தர்மராஜ்,  டிடிஎஸ்எப் தலைவர் டி.திருமலைசாமி, எம்எல்எப் பொதுச் செயலாளர்  கே.வெங்கடேசன், டிடபிள்யுயூ பொதுச்செய லாளர் ஏ.மோகன், சம்மேளன பொருளாளர் வி.சசிக்குமார், துணைப்பொதுச் செய லாளர்கள் வி.தயானந்தம், எம்.கனக ராஜ் உள்ளிட்டோர் பேசினர். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இணைந்து செயல்படுவோம்

“தொழிற்சங்கங்களுக்குள் கருத்தியல் முரண்பாடு இருந்தாலும், திறந்த மனதோடு செயல்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றுபட்டு தொழிலாளர்களை அணிதிரட்டியுள்ளோம். முரண்பாடுகளையும், பிரச்சனைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு செயல்பட்டு வருகிறோம். போக்குவரத்துக் கழகம் உருவாகி 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடந்தது. அதிமுக ஆட்சியில் பொதுத்துறை சீரழிக்கப்படுகிறது; அதை சரி செய்கிறோம். போக்குவரத்து தொழிலாளர் துறை பிரச்சனையை தீர்க்க அனைத்து சங்கங்களும் இணைந்து செயல்படுவோம்”

 தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., வாழ்த்துரையிலிருந்து

நம்பிக்கையை இழந்துள்ளது

“இந்தியாவில் 54 பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள் இருந்தன. கொரோனாவிற்கு பிறகு இதில் 20 நிறுவனங்கள்தான் உள்ளன. தமிழகத்தில் இருப்பதை மேம்படுத்த வேண்டும். மாநிலத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனம் உள்ளன. இதற்கு காரணம் என்ன? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்கள் சீரழிக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கவில்லை. பணி நியமனங்கள் செய்யவில்லை. ஆட்சி மாறிய பிறகும் அதிகாரிகள் மாறாமல் உள்ளனர். அமைச்சர் வாக்குறுதியை மீறி அவுட்சோர்சிங் விட முயற்சிக்கின்றனர்; மோசடி செய்கின்றனர். சரியான நேரத்திற்கு பேருந்து வரும் என்ற நம்பிக்கையை போக்குவரத்து கழகங்கள் இழந்துள்ளன. அதை மீட்டெடுக்க வேண்டும்” . பேருந்துகளின் இயக்கத்தை மேம்படுத்த, பேருந்துகளின் பராமரிப்பை சிறப்பாக செய்வதோடு, ஊழியர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். பெட்ரோல் டீசல், உபபொருட்கள் விலைகள் உயர்ந்துள்ளன. அதேசமயம் கழகங்களின் வருமானம் குறைந்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை 2.04 கோடியிலிருந்து 1.52 கோடியாக சரிந்துள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும். பொதுப்போக்குவரத்தை வலுப்படுத்த வேண்டும்” 

- தொமுச பொருளாளர் கி.நடராஜன் வாழ்த்துரையிலிருந்து...

‘போக்குவரத்து  கழகங்களின் பயன்கள்’

‘போக்குவரத்து கழகங்களின் பயன்கள்’ எனும் தலைப்பில் பேசிய அரசு போக்குவரத்து ஆர்வலர் குழுவை சேர்ந்த கே.சாந்த பிரியன், “தமிழகத்தில் உள்ள 22 ஆயிரம் பேருந்துகளை ஒரு கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் மகளிருக்காக 7100 இலவச பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஒரு பெண் நாளொன்றுக்கு 50 ரூபாய் சேமிக்கிறார். இதனால் அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு பேருந்து 70 இருச்சக்கர வாகனங்களின் பயன்பாட்டை ஈடுகட்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும். 60 பேர் கார் எடுத்துச் சென்றால் 1440 சதுர மீட்டர் சாலையை பிடித்துக் கொள்ளும். ஆனால் ஒரு பேருந்து 31 சதுர மீட்டர்தான் தேவை. இதனால் பெருமளவு வாகன நெரிசல் குறையும். அதிக சாலை விபத்துகள் நிகழும் மாநிலமாக தமிழகமும், அதில் சென்னையும் முதலிடத்தில் உள்ளது. இதனை தவிர்க்க பொதுப்போக்குவரத்தை அதிகளவு பயன்படுத்த வேண்டும். பிற மாநிங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் கட்டண விகிதம் குறைவாக உள்ளது. சென்னையில் நாள் முழுக்க பயணம் செய்ய 50 ரூபாய் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் கொண்டு வர வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை கிளம்பாக்கத்திற்கு படிப்படியாக மாற்ற வேண்டும். முதற்கட்டமாக 30 விழுக்காடு பேருந்துகளை கொண்டு செல்லலாம்.இல்லாவிடில் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்”.

பொதுப்போக்குவரத்தும் மாற்று எரிபொருளும்

பொதுப்போக்குவரத்தும் மாற்று எரிபொருளும் எனும் தலைப்பில் பன்னாட்டு பொதுபோக்குவரத்து நிபுணர் வி.அமுதன் பேசுகையில், “தற்போது 50:50 என்ற அளவில் கிராமம் நகரங்களில் மக்கள் வாழ்கின்றனர். இது 2050ல் 30:70ஆக மாறும். அப்போது வாகன பயன்பாடு அதிகரிக்கும்போது கார்பன் உமிழும் அளவும் அதிகரிக்கும். தற்போது, 45 விழுக்காடு வாகன போக்குவரத்தும், 24 விழுக்காட்டை சரக்கு போக்குவரத்தும் கார்பனை உமிழ்கின்றன. தமிழகத்தில் 63 விழுக்காடு இருச்சக்கர வாகனம் உள்ளது. பொதுப்போக்குவரத்திற்கு மாறாமல் காலநிலையில் மாற்றத்தை எதிர்கொள்ள முடியாது. மாற்று எரிபொருளுக்கு மின்சார வாகனம் மட்டும் தீர்வு அல்ல. ஹைட்ரஜன் பேருந்துகளை பயன்படுத்த வேண்டும்” என்றார்.

மக்கள் பார்வையில் பொதுப்போக்குவரத்து

மக்கள் பார்வையில் பொதுப்போக்குவரத்து எனும் தலைப்பில் உரையாற்றிய சிட்டிசன் கன்சியூமர் அன்டு சிவிக் ஆக்ஷன் குரூப்பை சேர்ந்த சுமனா, “சென்னையில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இதில் 50 விழுக்காடுதான் தற்போது உள்ளன. இதனை அதிகரிக்க வேண்டும். எல்லை விரிவாக்கம் செய்யும்போது அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். நியாய விலைக்கடை, மருத்துவம் போன்று பேருந்துகளும் பொதுச்சேவைதான். எனவே, பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்க வேண்டும். அதற்கான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.  ஒரே பயண சீட்டில் பேருந்து, ரயிலை பயன்படுத்தும் முறையை கொண்டு வர வேண்டும். பல நாடுகளில் பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகிறது. அதனை நோக்கி செல்ல திட்டமிட வேண்டும்” என்றார்.

சுற்றுச்சூழலும் பொதுப்போக்குவரத்தும்

சுற்றுச்சூழலும் பொதுப்போக்குவரத்தும் எனும் தலைப்பில்  பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த கோ.சுந்தரராஜன் பேசுகையில், “தமிழகத்தின் மொத்த கார்பன் உமிழ்வில் 30 சதவீதத்தை வாகனங்கள் வெளியிடுகின்றன. காலநிலை மாற்றத்தினால் கடல் மட்டம் உயர்ந்து சென்னையின் கடற்கரை பகுதி அடுத்த 5 ஆண்டுகளில் 100 மீட்டர் வரை காணாமல் போகும். 60-70 ஆண்டுகளில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளும். சென்னை நகரின் 16 விழுக்காடு நிலப்பரப்பு நீரில் மூழ்கி இருக்கும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் காலநிலை மாற்றத்தை சமாளிக்க பொதுப்போக்குவரத்தை நோக்கி மக்களை வரவைக்க வேண்டும். பொதுப்போக்குவரத்தில் ஒரு யூரோ முதலீடு செய்தால், பொதுசுகாதாரத்தில் 7 யூரோவை மிச்சப்படுத்துகிறது என்று கூறி லக்சம்பர்க் நாட்டில் பொதுப்போக்குவரத்தை இலவசமாக மாற்றிவிட்டனர். பொதுப்போக்குவரத்துதான் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரும். எனவே, பொதுப்போக்குவரத்து பொதுவாகவும், அரசின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். இந்தியாவிற்கு சமூக நீதியில் வழிகாட்டியதுபோன்று, சூழலியல் நீதியிலும் வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு உள்ளது” என்றார்.

சாலை விபத்துகள்

சாலை விபத்துகள் குறித்து ஆக்சிடன்ட் ப்ரீ இந்தியா அமைப்பின் ஜான்மோரீஸ் குறிப்பிடுகையில், “இந்தியாவில் ஒரு நாளைக்கு 1035 பேரும், தமிழகத்தில் 45-70 பேரும் சாலை விபத்தில் இறக்கின்றனர். அதிகளவு வேகமாக செல்லும் இருசக்கர வாகன உற்பத்தியை நிறுத்த வேண்டும். உலக நாடுகள் மதிப்பீட்டின்படி ஒரு உயிரின் மதிப்பு 12 முதல் 45 கோடி ரூபாய். இவ்வளவு மதிப்புள்ள உயிரை  விபத்தில் இழக்கலாமா? ஓட்டுநர்கள் நன்றாக ஓய்வெடுத்த பிறகு வாகனங்களை இயக்க வேண்டும். கண்களை அவ்வப்போது பரிசோதித்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்றார்.



 

;