தமிழகம்

img

7 பேர் விடுதலை கோரி ஆளுநருக்கு அஞ்சலட்டை

சென்னை:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு ஒரு லட்சம் அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் திங்களன்று (மே 20) நடைபெற்றது.


7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலை யில் இது தொடர்புடைய வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் இது குறித்து முடிவெடுக்க லாம் என்று கருத்து தெரிவித்தது. 

இந்நிலையில், 28 ஆண்டு களாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆளுநருக்கு அஞ்ச லட்டை அனுப்பும் போராட்டம் மே 20 திங்களன்று நடைபெற்றது. அஞ்சலட்டைகளில், “அரசி யலமைப்புச் சட்டம் 161வது பிரிவு தங்களுக்கு வழங்கியுள்ள அதி காரத்தின்படி பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7பேரை யும் விடுதலை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


‘காலம் தாழ்த்தக்கூடாது’

தமிழகம் முழுவதும் நடை பெற்ற இந்தப்போராட்டத்தை தாம்பரம் தபால் அலுவலகத்தில் பேரறி வாளனின் தாயார் அற்புதம்மாள் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அற்புதம் மாள், “28 வருடமாக போராடி வருகிறோம். 7 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 161ன்படி ஆளுநர் விடுதலை செய்யலாம் என்று இரண்டாவது முறையாக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, ஆளுநர் காலம் தாழ்த்தக்கூடாது” என்றார்.


“அமைச்சரவை கூடி முடி வெடுத்து அனுப்பிய தீர்மானத்தின் மீது 8 மாதமாக ஆளுநர் முடி வெடுக்காமல் இருப்பது ஏன்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிப்படி, மக்கள் உணர்வுகளுக்கு ஆட்சியாளர்கள் மரியாதை தர வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்து விட்டு அதிமுக அரசு தேர்தலை எதிர்கொண்டி ருக்க வேண்டும்; தவறிவிட்டார்கள். இனியும் அது தொடரக்கூடாது” என்றும் அவர் கூறினார்.வாலிபர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.பாலா பேசுகையில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரைவிடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதலை கொடுத்த பிறகும், தமிழக சட்ட மன்றம் தீர்மானம் நிறை வேற்றிய பிறகும் ஆளுநர் காலம் தாழ்த்துவது நியாயமற்றது. ‘இணைந்திடுவோம் விடுதலைக்காக’ என்ற முழக்கத் தோடு தபால் அனுப்பும் போராட்டம் நடக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் கையெழுத்திட வேண்டும்” என்றார்.


இப்போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் சி.பாலச்சந்திர போஸ், தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், துணைத்தலைவர் மு.ப.மணி, துணைச் செயலாளர் அனீபா, தாம்பரம் பகுதிச் செயலாளர் காண்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;