tamilnadu

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

தொடர்ந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை; பனை மரங்கள் சேதம்; இழப்பீடு வழங்க கோரிக்கை

திருநெல்வேலி, ஏப்.25 - களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள்காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், நீலகிரி வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன. இவைகள் அவ்வப்போது மலையடிவாரப் பகுதியில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக சிதம்பரபுரம் மலையடிவார பகுதியான சத்திரங்காடு, சாஸ்தா கோவில், கோழிக்கால் பகுதிகளில் ஒற்றை ஆண் யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பனை மரங்களை துவம்சம் செய்து வருகிறது. வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்ட போதும் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் இப்பகுதியிலேயே சுற்றி திரிகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட பனை மரங்களை யானை சாய்த்துள்ளது. யானை நடமாட்டத்தால் விவசாயிகள், விவசாய நிலங்களுக்கு பகல் நேரங்களிலும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதனிடையே செவ்வாயன்று இரவு மீண்டும் சத்திரங்காட்டில் ஒற்றை யானை புகுந்தது.இதைப் பார்த்த விவசாயிகளும், ஏற்கனவே ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரும் தீப்பந்தங்களைகாட்டி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால்யானை 4 பனை மரங்களை சாய்த்தது. களக்காடு பகுதியை மிரட்டி வரும் ஒற்றை யானையைஅடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், யானைகள் நாசம்செய்த பனை மரங்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பெண்ணிடம் நகை பறிப்பு:2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி, ஏப்.25- தூத்துக்குடி மட்டக்கடை, வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி பாலஜோதி(53). புதனன்று மாலை 8 மணியளவில் இவர் எஸ்எஸ் பிள்ளை தெருவில் உள்ள சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாத்தியார் தெரு அருகே நடந்து வந்தபோது பைக்கில் வந்த இருவர் பாலஜோதி கழுத்தில் அணிந்திருந்த 3.5 பவுன் செயினை பறித்துவிட்டு தப்பிக்க முயன்றனர். இதையடுத்து பாலஜோதி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து நகை பறித்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அவர்கள், தூத்துக்குடி பூபாலராயர்புரம் 5-வது தெருவைச் சேர்ந்த அந்தோணி பிரைட்டன்(20), முத்துகிருஷ்ணாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். 


மே 1-ல் மது விற்பனைக்கு தடை

தூத்துக்குடி, ஏப்.25- தூத்துக்குடி மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு 1.5.2019 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி(2)-ன்படி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) உள்ள உரிமத் தலங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


நெஞ்சு வலியால் வாலிபர் உயிரிழப்பு

திருநெல்வேலி, ஏப்.25- நெல்லை தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று உள்ளது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலம் மோகன்பூர் சைதாபாத் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரதாஸ் மகன் குந்தன்குமார் (19) என்பவரும் அந்த மில்லில் வேலை பார்த்து வந்தார்.  வியாழக்கிழமை காலை குந்தன்குமார் வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி சுருண்டு விழுந்தார். அவருடன் வேலை பார்க்கும் சகதொழிலாளிகள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்:தூத்துக்குடி மீன்வளத்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி, ஏப்.25- வங்கக்கடலில் புயலுடன் கூடிய பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் பாலசரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் பாலசரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் தென் தமிழக பகுதியில் புயலுடன் கூடிய காற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரையோரம் வீசக்கூடும். இதனால் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனே கரை திரும்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை தென்மேற்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மீன்பிடி இறங்குதள மேலாண்மைகுழு உறுப்பினர்கள் அனைத்து கிராம மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கையை தவறாது கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


;