world

img

பிரான்ஸ் : மக்ரோன் கட்சிக்கு இழப்பு பிரதான எதிர்க்கட்சியாக இடதுசாரிகள்

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 577 தொகுதிகளில் 150 தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற இம்மானுவோல் மக்ரோன், தனது கட்சிக்கு பெரும்பான்மை அளியுங்கள் என்று வைத்த கோரிக்கையை பிரான்ஸ் மக்கள் நிராகரித்துள்ளனர். அக்கட்சிக்கு 244 இடங்கள் கிடைத்துள்ளன. பெரும்பான்மை பெற 289 இடங்கள் தேவைப்படுகிறது. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இடதுசாரிகள், நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மேற்கத்திய ஊடகங்கள் 131 இடங்கள் என்றே குறிப்பிட்டு வருகின்றன. வேட்பு மனுவில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் கூட்டணிப் பட்டியலில் இடம் பெறாமல் விடப்பட்டது என்ற சில காரணங்களால் சில இடதுசாரி வேட்பாளர்களை கூட்டணி வேட்பாளர்கள் என்று அந்த ஊடகங்கள் குறிப்பிட மறுக்கின்றன. ஆனால், அவர்களில் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை விட அதிகமான தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாலும், இடதுசாரிகளுக்கு சிறப்பான இரவு" என்று அரசியல் வட்டாரத்தில் வர்ணிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மரின் லீ பென் தலைமையிலான அதிதீவிர வலதுசாரிக்கட்சி  89 இடங்களைப் பிடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வலதுசாரிகளுக்கும், அதி தீவீர வலதுசாரிகளுக்கும் இடையிலான போட்டி என்றிருந்த நிலைமை, இந்தத் தேர்தலில் வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான போட்டியாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

பழமையான கட்சியும், மற்றொரு வலதுசாரிக் கட்சியுமான குடியரசுக்கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துக் கொள்ள ஜனாதிபதி மக்ரோனின் கட்சி முயற்சி செய்கிறது. எந்தவித நிபந்தனையுமில்லாமல் நாங்கள் கூட்டு சேர மாட்டோம் என்று குடியரசுக்கட்சி அறிவித்துள்ளது.