world

img

பாகிஸ்தான்: பணவீக்கம் 38 சதவிகிதம் அதிகரிப்பு; உணவுபொருட்களின் விலை உயர்வு

பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் 38 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதால், உணவுப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் பணவீக்கம் 36.4 சதவிகிதமாக இருந்த நிலையில், ஒரே மாதத்தில் 1.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த மே 2022 உடன் மே,2023 ஒப்பிடும் போது நுகர்வோர் பொருட்கள் மீதான விலை ஊரக பகுதியில் 52.4 சதவிகிதம் என்ற அளவிலும், நகர பகுதிகளில் 48.1 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான், சர்வதேச நிதியத்திடம் மற்றுமொரு மீட்பு தொகுப்பு(bail-out package)வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் அந்நிய செலாவணி இருப்பு 2023 பிப்ரவரி 3 அன்று 2.9 பில்லியன் டாலருக்கு சரிந்திருந்தது.இது 2021 ஆகஸ்டில் 20.1 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்ததாகும். 2022 இல் அதன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது 17.4 பில்லியன் டாலராகும். ஏற்றுமதிகளைவிட இறக்குமதி சுமார் 45 பில்லியன் டாலர்கள் விஞ்சியிருக்கிறது. சர்வதேச நிதியமும், பாகிஸ்தானும் பிப்ரவரி ஆரம்பத்திலிருந்தே ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 1.1பில்லியன் டாலர்கள் விடுவித்திட, பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.இதற்காக சர்வதேச நிதியம் விதித்திடும் பல்வேறு நிபந்தனைகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நிபந்தனைகளில் எரிபொருள்களின் விலைகளை உயர்த்துவதும் மற்றும் வரிகளை உயர்ந்த்துவதும் அடக்கம். வேறு மாற்று வழி  எதுவும் தெரியாததன் காரணமாக சர்வதேச நிதியம் விதித்திடும் கடும் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகள், உயரும் பணவீக்கம் என எண்ணற்ற நெருக்கடிகள் ஒன்றையொன்று பாகிஸ்தானை கவ்விப்பிடித்து கொண்டிருக்கின்றன.

 

;