world

img

ஒமிக்ரான் மூன்றாம் அலையை ஏற்படுத்துமா - உலக சுகாதார அமைப்பு பதில்

ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்பாடு குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கியுள்ளது.

கடந்த நவம்பர் 25ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 59 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குனர் பூனம் கேட்ரபால் கூறுகையில், கொரோனா தற்போது பல பிறழ்வுகளாக உருவெடுத்து வருகிறது. உலக நாடுகள் கொரோனாவிலிருந்து தடுப்பூசியின் மூலம் விடுபட்டு வருகிறது. தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள், ஒமைக்ரான் அதிகம் பரவுவதற்கான வாய்ப்பை தடுக்கும். அதே நேரத்தில் புதிய தொற்றுக்கள் பரவுவதை முழுமையாகத் தடுக்காது என்பதை அறிவது முக்கியம். 

நோய்த்தொற்றினால் கடுமையான பாதிப்பினை எதிர்கொள்ளும் நபர்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட நபர்களுக்குத் தடுப்பூசியின் கூடுதல் டோஸ் தேவைப்படுகிறது. மேலும் வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாலேயே விஷயங்கள் மோசமாகும் என்று அர்த்தமல்ல. இப்போது இருக்கும் சூழலில் நம்மால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. இன்னும் இந்த பெருந்தொற்று முடியவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உலகின் மற்ற பகுதிகளில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு மற்றும் புதிதாகத் தோன்றும் உருமாறிய கொரோனா இன்னும் ஆபத்து முடிந்துவிடவில்லை என்பதையே உணர்த்துகிறது. தெற்காசியப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுக்க வேண்டும். பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். 

அதேநேரம், டெல்டாவை விட ஒமைக்ரான் லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இவற்றை உறுதிப்படுத்த நமக்குக் கூடுதல் தரவுகள் தேவை. தற்போதைய சூழலில் வைரஸ் பாதிப்புகள் எங்கு அதிகரிக்கிறதோ அந்த பகுதிகளைக் கண்டறிந்து வைரஸ் பாதிப்பைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் இந்த தொற்று குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள அனைத்து நாடுகளிடம் இருந்தும் கூடுதல் தரவுகளைக் கேட்டுள்ளோம். இதனை வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார். 

;