world

img

உயர்கல்வித்துறையில் புதிய உச்சத்தை தொடும் சீனா

2021 ஆம் ஆண்டில் உயர்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை 57.4 விழுக்காடு என்ற புதிய உச்சத்தைத் தொட்டு மக்கள் சீனம் சாதனை படைத்திருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றால் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளின் வேலை நாட்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சீனாவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. உயர்கல்விக்கு செல்வதில் தேக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இந்தக் கணிப்பு உண்மையாக மாறியுள்ள நிலையில், கணிப்புக்கு மாறாக நல்ல வளர்ச்சியை சீனா அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சீனாவின் கல்வி,ததுறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி, தற்போது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிலையங்களில் பயின்று வருவோரின் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சம் மாணவர்களாக உள்ளது. பள்ளிக்கல்வியில் இருந்து உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை 57.8 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கல்வித்துறையைக் கொண்டுள்ள நாடு என்ற பெருமையையும் சீனா அடைந்துள்ளது. குறிப்பான கவனம் செலுத்தப்பட்டதே இந்த அளவு மாணவர்கள் சேர்க்கை நடந்ததற்குக் காரணமாக இருந்திருக்கிறது.

கடந்த 9 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி அபாரமாக இருந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடாகும். கடந்த பத்தாண்டுகளில் கல்வியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் ஆகியவை ஏற்படுத்திய சாதனைகள்தான் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்று சீனக் கல்வித்துறை சுட்டிக்காட்டுகிறது. தற்போதுள்ள மக்கள் தொகையில் 24 கோடிப் பேர் உயர்கல்வி பயின்றவர்களாக இருக்கிறார்கள்.

இணையதளங்கள் வாயிலாக கற்பிக்கும் முறையும் பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருக்கிறது. பிப்ரவரி மாதக் கணக்குப்படி 52 ஆயிரத்து 500 திறந்தவெளி இணையதளப் படிப்புகள் நடத்தப்பட்டன. இந்தப் படிப்புகளில் 37 கோடிப் பேர் பதிவு செய்து பயின்று வருகிறார்கள். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்களும் இந்த இணையதளப் படிப்புகளில் சேர்ந்து பயில்கிறார்கள். பதிவு செய்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த மாணவர்களாகவே இருக்கிறார்கள் என்று உயர்கல்வித் துறையின் தலைவர் வு யான் தெரிவித்துள்ளார்.

 

;