world

img

மனித உரிமைப் பாதுகாப்பில் முன்னிலை - கியூபா பெருமிதம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள தடைகளைத் தாண்டி மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சாதனைகளைப் படைத்திருப்பதாக கியூபா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 49வது கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. உலகின் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய நாடுகள் பாரபட்சம் பார்க்கின்றன என்று மூன்றாம் உலக நாடுகள் சொல்லி வந்த குற்றச்சாட்டுகள் தற்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதை இந்த விவாதத்தில் பார்க்க முடிகிறது. அறிவுரை சொல்லும் வளர்ந்த நாடுகள் தங்கள் மண்ணில் மனித உரிமை மீறல்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்று கியூபாவின் சார்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அந்நாட்டின் தூதுவர் ஜூவான் அன்டோனியோ குயின்டானில்லா, "எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தடைகளை விதித்து வருகிறது. இந்தத் தடைகள் விதிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த பிறகும் எங்கள் மண்ணில் மனித உரிமைகள் பாதுகாப்பில் நாங்கள் சாதனை படைத்திருக்கிறோம். வெளிநாடுகளில் கியூபா பற்றி ஊடகங்கள் வழியாக பொய்களைப் பரப்பி வருகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாண்ட விதத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2 வயது முதல் 18 வயது வரையில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை முழுவதுமாக செலுத்திய முதல் நாடு கியூபா என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தடுப்பூசிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பதையும் பெருமையோடு தெரிவித்தார். வேறு எந்த நாடும் இத்தகைய நடவடிக்கையில் சாதிக்கவில்லை என்ற அவர், சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்க வளர்ந்த நாடுகள் தவறி விட்டன என்று குற்றம் சாட்டினார்.

உலகில் இதுவரை எந்த நாடும் சந்திக்காத தடைகளை கியூபா சந்தித்து வருகிறது. இவ்வளவு ஆண்டு காலத்திற்கு எந்த நாட்டின் மீதும் தடைகள் விதிக்கப்பட்டதில்லை. இருப்பினும், நாட்டு மக்களைப் பாதுகாப்பதில், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் எந்தவிதத் தயக்கத்தையும் கியூபா காட்டவில்லை என்று கூறிய குயின்டானில்லா, மனித உரிமைகள் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி, அதை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.