world

img

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு!

அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி  டெல்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் பனியிலும் இரவு முழுவதும் சாலையிலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்கு மாறாக கண்ணீர் புகை குண்டு, தண்ணீர் பீச்சியடிப்பு, தடியடி என மத்திய பாஜக அரசின் காவல்துறை விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

"இந்தியாவில் இருந்து விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகள் வருகின்றன. எங்களது கவலைகளை இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம். இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை கவனிக்காவிட்டால் நான் கடமை தவறியவனாவேன். உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன், அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும்" எனத் தெரிவித்துள்ளார். 

;