world

img

"ஊதியம் அல்லது மோதல்" - ஸ்பெயின் தொழிலாளர்கள் எச்சரிக்கை

மாட்ரிட், நவ.4- ஸ்பெயினின் இரண்டு பெரிய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய தொழிலாளர் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பங்கேற்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள விலையுயர்வு நெருக்கடி ஸ்பெயினையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் அதற்கேற்ற வகையில் ஊதியம் உயரவில்லை. விலையுயர்வைக் கணக்கில் கொண்டு உடனடியாக ஊதியம் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. விலையுயர்வை சமாளிக்கும் வகையில் தொழிலாளர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவை முன்வைத்தன.

ஸ்பெயினின் பெரிய தொழிற்சங்கமான யு.ஜி.டி.யின் பொதுச் செயலாளரான ஜோஸ் மரியா அல்வரெஸ் கூறுகையில், "ஊதியமா அல்லது மோதலா என்ற முடிவுக்கு வர வேண்டும். எங்கெல்லாம் மோதல் உருவாகிறதோ, அங்கெல்லாம் ஊதிய உயர்வை அடைய முடிந்துள்ளது. அதிக லாபம் மற்றும் குறைந்த லாபம் என்றுள்ள சில நிறுவனங்கள் தங்கள் தொழிற்சங்கங்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளன. மோதல் இல்லாமலேயே இதை சாதிக்க முடியும்" என்றார்.

பெரும்பாலான நிறுவனங்கள் ஊதியப் பேச்சுவார்த்தைக்கு வராததால், மாட்ரிட் நகரில் தொழிலாளர்கள் பேரணிக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. சுமார் 50 ஆயிரம் பேர் இந்தப் பேரணியில் பங்கேற்று நியாயமான செல்வப்பகிர்வுக்கான நடவடிக்கை தேவை என்பது உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். மிகவும் அமைதியான முறையில் இந்தப் பேரணி நடைபெற்றது.