world

img

கொலை வெறித் தாக்குதல்களைத் தடுப்போம் - ஏமன் மக்கள் ஆவேசம்

அமெரிக்க உதவியுடன் தங்கள் நாட்டின் மீது சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளிகள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக ஏமன் நாட்டு மக்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

 அமைதி உடன்பாட்டை மீறி ஏமன் மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. ஏமனுக்கு வந்து கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பலையும் கைப்பற்றியுள்ளனர். இதுவரையில் 3 ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் சவூதி அரேபியா தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. 

இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக ஏமனில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அல் ஜகீர் என்ற மாவட்டத்தில் சவூதி அரேபிய ஆதரவுத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். குடியிருப்புப் பகுதியில் குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு குழந்தையும், மேலும் இரண்டு அப்பாவிகளும் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர்.  இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் இரண்டு மாத கால அமைதிக்காலத்தில் நடந்துள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்கு அமைதிக்காலம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் தாக்குதல்களைக் கண்டித்து ஏமன் முழுவதும கண்டனப் பேரணிகள் நடந்துள்ளன. தலைநகர் சனாவில் நடந்த பேரணியில் ஏமன் கொடிகளோடு, சவூதி அரேபியாவுக்கு எதிராகப் போராடி வரும் அன்சருல்லா அமைப்பின் தலைவர்களின் படங்களையும் ஏந்தியவாறு மக்கள் வலம் வந்தனர். சவூதி அரேபியாவின் தாக்குதல்களுக்கு கண்டனங்களைத் தெரிவிக்கும் முழக்கங்கள் அந்தப் பேரணியில் எழுப்பப்பட்டன. 

ஏமனின் தென் மேற்குப் பகுதியில் உள்ள சாடா என்ற நகரில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். பிரச்சனையில் சரியான தீர்வு கிடைக்கும்வரையில் தங்கள் போராட்டம் தொடரும் என்று மக்கள் முழங்கினர். அன்சருல்லா இயக்கத் தலைவர்கள் பேரணியில் பங்கேற்ற மக்கள் மத்தியில் உரையாற்றினர். அதில், "இஸ்லாமிய நாடுகளை தங்கள் வசப்படுத்திக் கொண்டு அவற்றின் தேசிய நளத்தைக் கொள்ளையடிக்க அமெரிக்கா முயல்கிறது" என்று அவர்கள் குற்றம் சாட்டினர். சனா மற்றும் சாடா ஆகிய நகரங்களைத் தாண்டி மேலும் பல்வேறு நகரங்களில் எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன.