world

img

காலத்தை வென்றவர்கள் : நெல்சன் மண்டேலா நினைவு நாள்...

நிறவேற்றுமைக்கு எதிராக நெல்சன் மண்டேலா 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்தார். ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார். 1943 ஆம் ஆண்டுஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1948 ஆம் ஆண்டுதென்னாப்பிரிக்க அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஆலிவர் ராம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயல்பட்டார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றச் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961இல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெறமுடியாது என உணர்ந்த மண்டேலா ஆயுத வழிமுறையைநாடினார்.  தென்னாப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு 1964 ஆம் ஆண்டு ஜுன் 12ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது.”மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்றது தென்னாப்பிரிக்க அரசு. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இந்நிலையில் புதிய ஜனாதிபதியான டி கிளர்க்குக்கு மண்டேலாவை விடுதலை செய்ய  வேண்டிய நிலை ஏற்பட்டது.டி கிளர்க், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா பிப்ரவரி 11, 1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 71. 

 மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.1994, மே 10 ஆம் நாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஆனார்.  1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். 1999 இல் பதவியை விட்டு விலகினார். 2 வது முறை  போட்டியிட மறுத்துவிட்டார்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றியசேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதேஇந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது.  1990-ல்‘பாரத ரத்னா’ விருதும் வழங்கப்பட்டது.  1993 இல் உலகஅமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது  வழங்கப்பட்டுள்ளது.அவரது பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகஸ்ட்  2007ல் இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார்250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நெல்சன் மண்டேலா 2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் மறைந்தார்.
 

;