world

img

உடன்பாட்டை மீறி சவூதி அரேபியா தாக்குதல் 108 ஏமன் மக்கள் படுகொலை

சனா, செப்.23- சவூதி அரேபியா மற்றும் ஏமன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போரின் தற்காலிக நிறுத்தத்திற்கான உடன்பாட்டை மீறி சவூதி அரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. ஏமன் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை சவூதி அரேபியா ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு விசுவாசமாக இருந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டதால், ஏமன் மீது 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியது. மீண்டும் தனது விசுவாசிகளை அதிகாரத்தில் அமர வைக்க வேண்டும் என்ற இலக்கோடு கடந்த ஏழு ஆண்டுகளாகத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதுவரையில் ஏமனைச் சேர்ந்த 13 ஆயிரம் பேர் இத்தாக்குதல்களுக்குப் பலியாகியிருக்கிறார்கள். இதுவரையில் மனிதகுலம் காணாத மனிதாபிமான ரீதியான நெருக்கடியில் ஏமன் இருக்கிறது. அந்நாட்டு மக்களும், குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும், கொடிய வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த மோசமான சூழலிலும் தனது தாக்குதல்களை சவூதி அரேபியா நிறுத்தவில்லை. ஏமனின் அன்சருல்லா பாதுகாப்பு இயக்கம் எதிர்த்தாக்குதல்களை நடத்தி வந்தது. ஆனால், சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக வேறு சில நாடுகளும் களத்தில் இறங்கின.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து போர் நிறுத்தம் செய்வது என உடன்பாடு எட்டப்பட்டது. இருந்தாலும், சவூதி அரேபியாவால் வைக்கப்பட்ட கண்ணிவெடிகள், அவர்கள் வீசிய கொத்துக் குண்டுகள் உள்ளிட்டவற்றால் 108 ஏமன் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் 216 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலர் உயிருடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏமன் நிர்வாகம் கூறியுள்ளது. தனது தாக்குதல்கள் விரைவில் முடிவுக்கு வந்து விடும் என்றும், தனது விசுவாசிகளை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க நீண்ட  காலம் பிடிக்காது என்று நினைத்த சவூதி அரேபியாவின் எண்ணம் பலிக்கவில்லை. தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் சவூதி அரேபியாவின் சதி வேலைகளை முறியடித்து விட்டது என்று அன்சருல்லா பாதுகாப்பு இயக்கம் கூறியுள்ளது. ஆனால், ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த உடன்பாட்டை ஒவ்வொரு நாளும் சவூதி அரேபியா மீறி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

வர்த்தகம் முடக்கம்

எண்ணெய் ஏற்றுமதி மூலமான வருமானத்தையே ஏமன் பெரிதும் நம்பியுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டு செல்வதை சவூதி அரேபியா தடுத்து வருகிறது. இதுவரையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஏமனின் 12 எண்ணெய்க் கப்பல்களை சவூதி அரேபியா கைப்பற்றியிருக்கிறது. அதோடு, அணைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் தகர்த்திருக்கிறார்கள். அதிக அளவில் கதிரியக்கம் உள்ள பொருட்களை ஏமன் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். இது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் முழு ஆதரவோடு நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களுக்கு சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவித்து வருகிறது. சவூதி அரேபியாவின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதால் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. ஆனால், ராணுவ ரீதியான தீர்வைப் பெற்று விட முடியும் என்று நம்பி, ஆயிரக்கணக்கான மக்களை சவூதி அரேபியா கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
 

;