world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பயங்கரவாத பட்டியலில் இருந்து  ஹிஸ்புல்லா நீக்கம்

ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அரபு கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த முடிவை அரபு கூட்டமைப்பு துணைச் செயலாளர் ஜெனரல் ஹொசாம் ஜாக்கி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அறிவித்துள்ளார். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது  தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா வின் அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு சமீப காலத்தில் அதிகரித்துள்ள நிலையில் அரபு கூட்டமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பொலிவியா ஆட்சிக்கவிழ்ப்பு சதி:  ராணுவத் தளபதிக்கு 35 ஆண்டு சிறை

பொலிவியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மேற்கொண்ட ராணுவத்  தளபதி ஜெனரல் ஜூனிகாவிற்கு ஆறு மாதங் கள் “தடுப்பு காவல்”  விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத  நடவடிக்கை மேற்கொண்டதற்காக 20 ஆண்டுகளும், ஆயுத கலகத்தை தூண்டி யதற்காக 15 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொலிவியாவில் உள்ள லித்தியத்தை கொள்ளையடிக்க சதி மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

காலநிலை மாற்றத்தால் பொருளாதார பாதிப்பு

காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்பு  ஏற்பட்டுள்ளது என  உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்ப அலை, வெள்ளம் வறட்சி உள்ளிட்ட தீவிர இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு விவசாய விளைபொருட்கள் அழிந்ததுடன் பல லட்சம் கோடிகள் அளவிற்கு பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டுவர நீண்ட நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

நைஜீரியாவில் தொடர் குண்டுவெடிப்பு 

நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் சனிக்கிழமையன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் 40க்கும் அதிக மான நபர்கள் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை, இறுதி ஊர்வலத்தில் என சில பெண்கள் தங்கள் உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலைப் படையாகச் செயல்பட்டு குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ள னர் என அதிர்ச்சித் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலை விட்டு வெளியேறு! நேதன்யாகுவுக்கு மக்கள் எதிர்ப்பு

மூன்றில் இரண்டு பங்கு (66 சதவீதம்) இஸ்ரேல் பொது மக்கள் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அரசியலை விட்டு வெளியேற  வேண்டும் என, இஸ்ரேல் நாட்டின் சேனல் 12 என்ற ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பில்   தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மற்றொரு கருத்துக்கணிப்பில் நேதன்யாகுவை விட தீவிர மதவாத பிற்போக்குவாதியான பென்னி காட்ஸ்க்கு அதிக மக்கள் ஆதரவு கொடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

;