world

img

ஜப்பானை முன்னேற்றப்போகும் தொழிலாளர் ஊதிய உயர்வு

டோக்கியோ, ஜன.23- தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு மணி நேரத்திற்கான ஊதியத்தை 1,500 யென் ஆக உயர்த்தினால் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கம் ஏற்படும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஜப்பானின் பொருளாதாரம் அண்மைக்காலங்களில் பெரிய வளர்ச்சியை எட்டாமலேயே இருந்து வருகிறது. தொற்று ஒரு காரணம் என்றாலும், தேக்க நிலை என்பது பிரதானமான பிரச்சனையாக மாறியிருக்கிறது. உள்நாட்டுப் பொருளாதாரத்தின் அளவை அதிகரிக்காமல் வளர்ச்சி இல்லை என வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். ஆனால், தொடர்ந்து ஆட்சியில் உள்ள வலதுசாரியினர்  ஊதியத்தை வெட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இந்நிலையில் ஜப்பானி ரோடோ-சோகென் என்ற அமைப்பு ஆய்வொன்றை மேற்கொண்டது.

ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியமாக 1,500 யென்னை நிர்ணயிக்கும் கோரிக்கை தொழிலாளர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 22.5 டிரில்லியன்(ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும்) யென் மதிப்பில் அதிகரிக்கும் என்ற விபரத்தை ஆதாரங்களுடன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். தற்போது ஜப்பானின் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்துள்ளதற்கு கடந்த 20 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீனதாராளமயக் கொள்கைகள்தான் காரணம் என்று ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் தங்கள் செல்வ இருப்பை அதிகரித்துக் கொண்டுள்ளனர். அதே வேளையில், தொழிலாளர்களின் ஊதியம் சரிவைக் கண்டு வருகிறது. ஊதியத்தை உயர்த்துவதால் இருப்பில் வைக்கப்பட்டுள்ள நிதியில் சிறு பகுதி வெளியில் வந்து பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தும். கூடுதல் நேரம் வேலை செய்வதற்கு ஊதியம், தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் 1997 ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் நிலைமை எப்படி இருந்ததோ அப்படி திரும்பிவிடும். நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சிமுகத்தில் இருக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

;