world

ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவோம்!

ஜகார்த்தா, ஜூலை 17- ஆசியன் பகுதியில் தற்போது நிலவி வரும் ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ஆசியன் + 3 உச்சிமாநாடு நடைபெற்றது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, அல்லது ஆசியன், என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும். தற்போது நடைபெற்ற மாநாட்டில் இந்த 10 நாடுகளோடு, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 3 நாடுகளும் பங்கேற்றன. மாநாட்டில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவுத்துறை ஆணையத் தலைவரான வாங் யி, “ஆசியன் நாடுகளும், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தி சவால்களை இணைந்து சந்திக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மூன்று வகையான அணுகுமுறையையும் அவர் பட்டியலிட்டார். வெளிப்படைத்தன்மை, பொதுவான பாதுகாப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் அவர் பரிந்துரைத்தார். புகுசிமா அணுமின் நிலையத்திலிருந்து மாசுபட்ட தண்ணீர் கடலில் கலக்கப்படுவது கவலையளிப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.