world

img

சீனாவுடனான உடன்பாடு சரியே!

வாட்டிகன், மே 24- சீனாவில் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டுக் குளிர் காயலாம் என்று முயற்சி செய்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கைகளைப் பிசைந்து செய்வதறியாமல் நிற்கின்றன. சீனாவில் எந்த மதத்தையும் மக்கள் பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது. இங்கு புத்தமதம், தாவோயிசம், இஸ்லாம், கத்தோலிக்கம் மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்த மதம் ஆகியவை இங்குள்ள பெரிய மதங்களாகும். எந்த மதத்தையும் சுதந்திரமாக தேர்வு செய்து கொள்ளவும், தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொள்ளவும், தாங்கள் இந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவும் சீன மக்களுக்கு உரிமை இருக்கிறது. பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 10 கோடி இருக்கும் என்று அதிகாரப்பூர்வ புள்விவிபரம் தெரிவிக்கிறது. மத செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக 85 ஆயிரம் இடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சீனா - வாட்டிகன் உடன்பாடு

சீனாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை நிர்வகிப்பது தொடர்பாக வாட்டிகனோடு நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் முதல் உடன்பாடு போடப்பட்டது. பின்னர் அந்த உடன்பாடு செப்டம்பர் 2021இல் புதுப்பிக்கப்பட்டது. அந்த உடன்பாடின்படி, ஆயர்களை நியமிக்கும் அதிகாரம் போப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. மதச் சுதந்திரத்தில் மக்கள் சீனம் தலையிடுவதில்லை என்பதற்கு இந்த உடன்பாடு அடையாளமாகச் சொல்லப்பட்டது. ஆனால், டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பலரும் இந்த உடன்பாட்டிலிருந்து வெளியேறுமாறு போப்பை வலியுறுத்தி வந்தனர். கத்தோலிக்க ஆயர்கள் நியமனத்தில் சீனக் கம்யூனிஸ்ட் அரசுடன் வாட்டிகன் நிர்வாகம் போட்ட உடன்பாடு மிகச் சரியானதுதான் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்ததால் சீர்குலைவு வேலைகளுக்கு வேகத்தடை போடப்பட்டது. அதோடு போப் நிற்கவில்லை. பேச்சுவார்த்தை அவசியம் என்றும், நாம் பேச்சவார்த்தையை ஒருபோதும் கைவிட்டு விடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

ஆயர்கள் நியமனம் குறித்த சலுகையை சீனா தரும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்க்கவில்லை. அப்படியே கொடுத்தாலும், அதை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு போப் நகருவார் என்பதையும் எதிர்பார்க்கவில்லை.  வாட்டிகனுக்கும், சீன அரசுக்கு இடையிலான மோதல் போக்கை உருவாக்குவதன் மூலம் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் சீன எதிர்ப்புக் கருத்தை ஏற்படுத்துவதே சீன எதிர்ப்பாளர்களின் முயற்சியாக இருந்தது. கலாச்சாரப் புரட்சி காலகட்டத்தில் நிகழ்ந்த தவறுகளைச் சரி செய்யும் பணியில் சீன அரசு வெற்றி பெற்றுவிட்டதால், உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளும் தவிர வாட்டிகனுக்கும் கட்டாயம் ஏற்பட்டது. கத்தோலிக்கர்களில் உள்ள பிற்போக்குவாதிகள் இதை இப்போதும் கூட ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால், பேச்சுவார்த்தை மூலம் ஆயர்கள் நியமிக்கும் உரிமை கிடைத்திருக்கிறது என்பதை போப் சுட்டிக்காட்டுகிறார்.  மதச் செயல்பாடுகள் நடக்கும் இடங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சீனாவில் உள்ள சட்டத்தை உரிமை மீறல் என்று அமெரிக்கா மற்றும் பிற்போக்கு மதவாதிகள் கூறுகிறார்கள். இத்தகைய நடைமுறை கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருப்பதை சீன அரசு சுட்டிக்காட்டியுள்ளது. வீடுகளுக்குச் சென்று நடத்தப்படும் சேவைகளுக்கு பதிவு செய்வதோ அல்லது அனுமதி கேட்பதோ அவசியமில்லை. பைபிள் வாசிப்பு மற்றும் பிரார்த்தனைகள் ஆகியவை மிகவும் சுதந்திரமாக நடத்தப்படுகின்றன. 

மதம் வேறு, கல்வி வேறு

சீனாவில் கல்வியையும், மதத்தையும் பிரித்து வைத்துள்ளனர். பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் மதம் சார்ந்த பாடங்கள் இல்லை. ஆனால், மத அமைப்புகள் இது தொடர்பான கூட்டங்களை நடத்திக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை. மதம் சார்ந்த கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 74 என்று சீன அரசு தரும் புள்ளிவிபரமே சொல்கிறது. மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தேவையானவர்களை உருவாக்கும் பணியை அந்த கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் செய்கின்றன.  மக்கள் சீனக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தில் மத நம்பிக்கை என்பது அனைத்து குடிமக்களுக்குமான அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் 36ஆவது பிரிவில், “எந்தவொரு அரசுத்துறையோ, அரசு அமைப்போ அல்லது தனிநபரோ நம்பிக்கை வைக்குமாறோ அல்லது, நம்பிக்கை வைக்க வேண்டாம் என்றோ மக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. நம்பிக்கை வைத்திருப்பவர்களை அல்லது நம்பிக்கை வைக்காதவர்களைப் பாரபட்சத்தோடு நடத்தக்கூடாது” என்று கூறுகிறது. மேலும், “பொதுவான அமைதியைக் குலைக்கும் வகையில் மதத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது. மத அமைப்புகள் மற்றும் மத விவகாரங்கள் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டதல்ல” என்றும் தெரிவிக்கிறது. சீனாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள உரிமைகள் மற்றும் அம்சங்கள், நடைமுறையில் அப்படியே பின்பற்றப்படுகிறது என்று சீன அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

செய்தி ஆதாரம் - (ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம், சீன அரசு செய்திக்குறிப்பு உள்ளிட்டவை)

 

;