அமெரிக்காவில் புத்தாண்டு துவங்கிய கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் 400 பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகியுள்ளனர்.
உலகிலேயே துப்பாக்கி போன்ற அதிக ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடாகவும், அந்த ஆயுதங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி எளிதாக பொதுமக்களுக்கு புழகத்தில் கிடைக்கும் நாடாகவும் அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டில் சராசரியாக 100 வீடுகள் இருந்தால் 120 துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மட்டும் 1.70 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் விற்பனையாகி உள்ளது.
இவ்வாறு அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு எங்கும் பரவி கிடக்கிறது. இதனால் சிறு சிறு வாக்குவாதங்கள் கூட துப்பாக்கி சூட்டில் தான் முடியும் என்கிற அபாய நிலை இருந்து வருகிறது. இதன்காரணமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழாத நாட்களே கிடையாது என்கிற நிலைதான் அந்நாட்டில் இருந்து வருகிறது. அதேநேரம், இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டின் புத்தாண்டு கடந்த சனிக்கிழமையன்று துவங்கியது. உலகமே வானவெடிகளை வெடித்து புத்தாண்டை வரவேற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அமெரிக்காவில் மட்டும் துப்பாக்கி சூட்டின் சத்தம் குறைந்தபாடியில்லை. புத்தாண்டு பிறந்த ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் மட்டும் அந்நாட்டில் 500க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் 400 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டில் செயல்படும் துப்பாக்கி வன்முறைக்கு எதிரான கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், 282 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.