நான் உலகை ஒரு பெரிய குடும்பத்துடன் ஒப்பிடுகிறேன். அதன் உறுப்பினர்கள் இடையே நிலவும் நல்லிணக்கத்தைப் பொறுத்தே அதன் நல்வாழ்வு அமையும். நாம் ஒருவருக்கு ஒருவர் நல்ல சகோதர சகோதரி களாக செயல்படுகிறோமா என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். துரதிருஷ்டவசமாக ‘இல்லை’ என்பதே பதிலாக தெரிகிறது. நாம் வெவ்வேறு மொழிகளில் பேசினாலும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்துகொள்கிறோம். வெவ்வேறு ஆளுமைகள் நமக்குள் இருந்தாலும் பொது நலன் சார்ந்து செயலாற்ற முடிகிறது. உதாரணத்திற்கு இந்த ஜி -20 உச்சிமாநாட்டை எடுத்துக்கொள்ளலாம்.
38 மடங்காக அதிகரித்த இடைவெளி
எவ்வளவு முயன்றாலும் நம்மிடையே வேறுபாடுகள் மேலோங்கியுள்ளன. சமத்துவமின்மை என்பது நம்மிடையே பேதங்களை அதிகரித்து வருகிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பணக்காரர் களின் வருமானம் ஏழைகளின் வருமானத்தை விட 18 மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், நான்காவது தொழிற்புரட்சிக் காலத்தின் மத்தியில் இன்று அந்த இடைவெளி 38 மடங்காக பெருகிநிற்கிறது. 10 சதவீதமாக உள்ள செல்வந்தர்கள் புவியின் 76 சதவிகித செல்வாதாரங்களை கையகப்படுத்தியுள்ளனர். 50 சதவீதமாக உள்ள ஏழைகளிடம் வெறும் 2 சதவீதம் வளங்களே மிஞ்சி நிற்கின்றன.
இன்னும் 300 ஆண்டுகள்
2030ஆம் ஆண்டுவாக்கில் 8.4 கோடி குழந்தை கள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க இயலாத நிலையில் இருப்பார்கள் என ஐநாவின் தரவுகள் கூறுகின்றன. சட்டம் பரிந்துரைக்கும் பாலின சமத்துவத்தை அடைய இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும். உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் கணிப்பின்படி 70 கோடி மக்கள் பசி, பட்டினியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதனை நாம் அனுதிக்கவே முடியாது. ஆனாலும் இயல்பான ஒன்றாக சாதாரணமாக கடந்து போகிறோம். மிகவும் பாதிப்புகளை சுமப்பவர்களுக்கு எவ்வித பலனும் சென்று சேர்வதில்லை. பெண்கள், இனச்சிறு பான்மையினர், தற்பாலின ஆர்வலர்கள் (லெஸ்பியன், தன்பாலின ஈர்ப்பு ஆண், பெண், இருபாலின ஈர்ப்புடைய ஆண், பெண், திருநர், திருநம்பி, பால் புதுமையினர் - LGBTQI +) ஆகியோருக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவதில் சந்தை மிகவும் அலட்சியமாக உள்ளது. சமத்துவமின்மை என்பது இயற்கையால் வடிவமைக்கப்பட்டதல்ல. மாறாக சமூக ரீதியாக கட்டமைக்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராட ஒவ்வொரு நாளும் உறுதியேற்க வேண்டும்.
பசியில்லாத பிரேசில்
வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையை குறைக்கும் நோக்கத்தில் தொடர்ச்சியான நடவடிக்கை கள் எடுத்து வருகிறோம். கடந்த வாரம் எங்கள் பிரேசி லில் ‘பசியில்லாத பிரேசில்’என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தினோம். எல்லோருக்கும் தரமான அடிப்படை சேவைகளை உறுதிசெய்வது என்பதுதான் அனை வருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திட உதவும். இனவெறி மற்றும் பாலின வெறிகளை நம் சமூக, நிறுவன நடைமுறைகளிலிருந்து ஒழித்துக் கட்டு வதன் மூலமே நல்ல நோக்கப் பூர்வமான பொதுக் கொள்கைகளை வடிவமைத்திட முடியும்.
சமவேலைக்கு சம ஊதியம்
பிரேசிலில் ஒரே வேலையைச் செய்யும் ஆண் களுக்கும் பெண்களுக்கும் ஒரே ஊதியம் வழங்குவதை கட்டாயமாக்கினோம். இது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிமுறையாகும். உலகின் 20 பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் நமது குடிமக்களைப் பராமரிக்கும் திறனை வலுப்படுத்துவதும் நம் கடமையாகும். தேசிய அளவில் வரவு செலவு திட்டங்களை வகுக்கும்போது ஏழைகளையும் அவர்தம் தேவைகளை யும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். பணக் காரர்கள் தங்கள் வருமானம், லாபம், சொத்துக்களுக்கு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வரிசெலுத்திட வேண்டும். தங்களின் கடனைப் பெருக்குவதைக்காட்டிலும் வளர்ச்சி மற்றும் சேவையை வழங்குவதில் சர்வதேச நிதி நிறுவனங்கள் கவனம் செலுத்திட வேண்டும். நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வை குறைத்திடும் வகையில் புதிய கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்கள் பகிரப்படவேண்டும்.
நான்கு மடங்கான வேறுபாடு
சமத்துவமின்மை நம் நாடுகளுக்கு உள்ளே யும், நாடுகளுக்கிடையேயும் வளர்ந்துவரும் கொடு மையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத் திற்கும் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குமிடையில் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையிலான வேறுபாடு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பொருளாதார மற்றும் நிதி சார்புகளின் புதிய வடிவங்கள், நியாயமற்ற விதிகள் மற்றும் உலக நிறுவனங்களின் நிறைவேற்றப்படாத உறுதி மொழிகளால் சமச்சீரற்ற தன்மை நீடித்தது. 2030 நிகழ்ச்சி நிரல் இந்த உறவுகளை மறுவரையறை செய்திடும் என நம்புகிறேன். நிலையான வளர்ச்சியின் இலக்குகளுக்கு உயிர்கொடுக்கும் ஒற்றுமை உணர்வை நாம் அவசரமாக மீட்டெடுக்க வேண்டும். இதன் மூலம் நம்முடைய சமகாலத்திய பொருளாதார சவால்களுக்கு கூட்டுணர்வின் அடிப்படையில் பதில் அளித்திட முடியும். ஜி20 நாடுகளுக்கு நாங்கள் தலைமைப் பொறுப்பு ஏற்கையில் பசி, பட்டினிக்கு எதிராக உலகளாவிய கூட்ட ணியை தொடங்குவோம். அதற்காக உங்களின் ஆதர வையும், ஈடுபாட்டையும் பெரிதளவு எதிர்பார்க்கிறோம். சமத்துவமின்மை குறையவேண்டும். சகோதரத்து வம் பெருகவேண்டும். அத்தகைய உலகை உருவாக்குவோம். எவர் ஒருவரையும் விட்டுவிடாமல் எல்லோரையும் ஒன்றிணைத்து ஒருவரை ஒருவர் உண்மையாக அங்கீகரிக்கும் வகையில் அதை நிர்மாணிப்போம்.
புதுதில்லியில் செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் ஆற்றிய உரை. - தமிழில் : கடலூர் சுகுமாரன்