world

img

உதவி என்ற பெயரில் ஆயுத வியாபாரம்: கொழிக்கிறது அமெரிக்கா

ரஷ்யாவின் தாக்குதல்களில் தங்கள் ஆயுதங்களைத் தொடர்ந்து உக்ரைன் இழந்து வரும் நிலையில், உதவி என்ற பெயரில் மேலும் ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பவிருக்கிறது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் வசம் இருந்த ஏராளமான ஆயுதங்களை ரஷ்யா அழித்துள்ளது. குறிப்பாக, ராக்கெட்டுகளை செலுத்தும் ஹிமார்ஸ் கருவி பொருத்தியுள்ள அமைப்பை தகர்த்திருக்கிறார்கள். ஆயுதங்களை ரஷ்யா அழிக்க, அழிக்க உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பி வைக்கிறது. தனது கூட்டாளியான உக்ரைனின் சேதம் அமெரிக்காவைக் குதூகலப்படுத்தியுள்ளது.

27 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உடனடியாக உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதில் 580 ஆளில்லா விமானங்கள், நான்கு ஹிமார்ஸ், 36 ஆயிரம் குண்டுகள் மற்றும் பீரங்கி எதிர்ப்பு குண்டுகளை அனுப்புவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். உக்ரைன் அரசு அதிகாரிகளிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இந்த "உதவிகளை" அமெரிக்கா தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் 820 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதனால், அமெரிக்காவில் உள்ள ஆயுத உற்பத்தி செய்யும் பகாசுர நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளன. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளில் சில, அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி உக்ரைனுக்கு அனுப்பியுள்ளன. மொத்தத்தில் அமெரிக்காவின் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு எக்கச்சக்கமான லாபம் கிடைத்திருக்கிறது. பங்குச்சந்தையில் கீழே இருந்த இந்த நிறுவனங்களின் பங்குகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. போரைத் தொடர்ந்து நடத்துவதற்கான தூண்டுதல்களை ஏற்படுத்தும் இந்த நாடுகளின் உத்திகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அவர்களை ஆபத்தான வழியில் அழைத்துச் செல்கின்றன என்றும் ரஷ்யா எச்சரித்திருக்கிறது.