அரசுமுறை பயணமாக இந்திய பிரதமர் மோடி வங்க தேசம் வருவதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் தேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.
வங்கதேச பிரதமர் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று வங்கதேசம் சென்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 2000 மாணவர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பு நடத்தினர். இதனால் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தை கலைத்தனர். இதில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அதேபோல் சட்டோகிராமில் நடந்த போராட்டத்தை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.