டாக்கா
தெற்காசிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. மே மாதம் வரை மிதமான வேகத்தில் பரவியது. அதன் பின் வேகமெடுத்த கொரோனா இன்று வரை ஜெட் வேகத்தில் தான் பரவி வருகிறது.
குறிப்பாக கடந்த 10 நாட்களாக தினமும் 3500-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்படுவதால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு குறுகிய காலத்தில் 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 803 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 267 பேராக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையை பொறுத்தவரை சற்றுக் கட்டுக்குள் உள்ளது. தினமும் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி வரும் நிலையில், வங்கதேசத்தில் இதுவரை ஆயிரத்து 343 பேர் பலியாகியுள்ளனர். 40 ஆயிரத்து 164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.