காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுவரும் நிலையில், இதுவரை சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காசாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் அங்குள்ள அல்-அவ்தா மருத்துவமனையின் வெளியே நின்று கொண்டிருந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் காரின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது அங்கிருந்த 5 பத்திரிகையாளர்களும் பலியாகினர். கொல்லப்பட்ட 5 பேரும் அப்பகுதியின் குத்ஸ் எனும் ஊடகத்தைச் சார்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் அடிப்படையில் காசா மீதான இஸ்ரேல் நடத்திய போரில் 130-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.