ஈரானில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் தெற்கு ஹோர்முஸ்கான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை ரிக்டரில் 6.1 அளவில் பதிவானது. அதைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் 6.3 ரிக்டர் அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் கிராமப்பகுதிகளில் இருந்த சில வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் உடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 49 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அவசர சேவை செய்தி தொடர்பாளர் மொஜ்தபா கலேடி தெரிவித்தார். சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் அவை சரி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதையடுத்து, மக்கள் அவசரகால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான கூடாரங்கள் மற்றும் உதவிப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் ஹோர்முஸ்கான் மாகாணத்தின் ரெட் கிரசென்ட் சொசைட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி மொக்தார் சலாஷூர் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.