205 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடியேற்றக் கொள்கையின் படி போதிய ஆவணம் இல்லாத வெளிநாட்டவர்களை ஊடுருவல் காரர்கள் என முத்திரை குத்தி வெளியேற்றி வருகின்றது. இதன்படி 205 இந்தியர்களை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு நாடு கடத்தியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் தற்போது தான் மிக அதிகளவிலான மக்களை நாடு கடத்தும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பிரதமர் மோடியுடன் கடந்த வாரம் உரையாற்றிய பிறகு இந்த நாடு கடத்தல் நடந்துள்ளது.
அமெரிக்காவிற்கு பதிலடி: வரிகள் விதிக்கும் சீனா
அமெரிக்கா வரி உயர்த்தியதைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது. நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயு மீது 15 சதவீத வரியும், கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள் மீது 10 சதவீத வரியும் அமல்படுத்துவதாக செவ்வாயன்று சீனா அறிவித்தது. சீனா தேவையான கச்சா எண்ணெய்யை ரஷ்யா, ஈரான், கொலம்பியா போன்ற நாடுகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வரும் நிலையில் இந்த வரி விதிப்பு அமெரிக்காவிற்கே பாதிப்பை கொடுக்கும் என கூறப்படுகின்றது.
வளர்ந்த நாடாக மாற்றுவேன்: திஸாநாயக்க உறுதி
ஊழல் கறை படிந்த நாடாக உள்ள இலங்கையைப் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக மாற்றுவேன் என இலங்கை ஜனாதிபதி திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்தில் நிகழ்த்திய உரையில் இவ்வாறு அவர் பேசியுள் ளார். சர்வதேச பொருளாதார கட்டமைப்பிற்கு அடிபணிந்து விடாமலும் அதன் ஒவ்வொரு ஏற்றத்தாழ்வுகளிலும் மூழ்கி விடாமல், நமது பொருளாதார சுதந்திரத்தைப் பாதுகாக்க, இந்த தாய்நாட்டிற்கான நமது முயற்சிகளில் நாம் ஒன்றுபட வேண்டும்” என்றும் பேசியுள்ளார்.
அமெரிக்கா செல்கிறார் நரேந்திர மோடி
பிப்ரவரி 13 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் பிப்ரவரி 10, 11 அன்று நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து 12 அன்று அமெரிக்கா செல்வார்; 13 அன்று டிரம்பை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று கடந்த மாதம் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
எண்ணெய் அல்லாத ஏற்றுமதி ஈரானில் அதிகரிப்பு
ஈரான் நாட்டின் எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகள் கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஈரான் வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் 47.75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய எண்ணெய் அல்லாத பொருட்களான இயற்கை எரிவாயு, திரவமாக்கப்பட்ட புரொப்பேன், மெத்தனால், திரவமாக்கப்பட்ட பியூட்டேன் உள்ளிட்ட பொருட்கள் சீனா, இராக், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.