சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். சீனாவுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் வரியை உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து சீனாவுக்கு 145 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
இதனைத் தொடந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த கெடு இன்றோடு நிறைவடையும் நிலையில், சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு, நவம்பர் மாதம் வரை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தை சுட்டிகாட்டி இந்திய பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
வரி என்கிற பெயரில் இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா, சீனாவிடம் மென்மையான போக்கை கடைபிடிப்பது சீனாவின் பதிலடிக்கு அஞ்சியே டிரம்ப் இவ்வாறு நடந்து கொள்கிறார் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாது எதிர்த்து உறுதியாக இந்திய அரசாங்கம் நிற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது முக்கியமானது என்பதை டிரம்பின் இந்த நடவடிக்கை உணர்த்துகிறது.